கூட்டுறவு சங்கங்கள்: ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவது மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

கூட்டுறவு சங்கங்கள்: ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவது மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூலை 22 கூட்டுறவு சங்கங்களை அமைப்பது, நிர்வகிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசு சட்டமியற்ற முடியாது; அவ்வாறு சட்டமியற்றுவது மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

97 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 9 (B) பிரிவில் ஒரு பகுதியை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் 97ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கடந்த 2011ஆம் ஆண்டில் மேற் கொண்டது. அதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் 19(1) (c) பிரிவு, 43 (B) பிரிவு, 9 (B) பிரிவு ஆகியவை புதிதாக இணைக்கப் பட்டன.

பிரிவு 19(1) (c) ஆனது, சில கட்டுப் பாடுகளுடன் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படை உரிமையை மக்களுக்கு வழங்கும் நிலையில், கூட்டுறவு சங்கங்களைத் தாமாக முன்வந்து உருவாக்குவது, ஜனநாயக ரீதியில் அதை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவிப்பதை வலியுறுத்துவதாக ‘43 (B)' பிரிவும்,

கூட்டுறவு சங்கங்களின் இயக்கு நர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் பதவிக் காலம் மற்றும் ஒரு நிபுணர் ஆவதற்குத் தேவையான நிபுணத்துவம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதாக ‘9 (B)' பிரிவும் இருந்து வந்தன.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசு இயற்றிய 97 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம், அரசமைப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், அதனை விசாரித்து, 97 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் குறிப்பிட்ட பகுதிகளை ரத்து செய்து கடந்த 2013 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

ஆனால், குஜராத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், கே.எம். ஜோசப், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று இறுதி விசாரணை நடத்திய நீதிபதிகள், குஜராத் உயர்நீதி மன்றத்தின் உத்தரவையே உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நீதிபதி நாரிமன் எழுதிய 89 பக்க பெரும் பான்மை தீர்ப்பில், கூட்டுறவு சங்கங்கள் மாநில சட்டமன்றங்களின்பிரத்தியேக சட்டமன்ற அதிகாரத்தின்' கீழ் வருகின்றன என்று நீதி மன்றம் கருதுகிறது; கூட்டுறவு சங்கங்கள் விவகாரம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், அதை அமைப்பது, நிர்வகிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டமியற்ற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 9 (B) பிரிவில் கூட்டுறவு சங்கங்களை அமைப்பது, நிர்வகிப்பது தொடர் பாக ஒன்றிய அரசு அதிகாரம் வழங்கும் பகுதியை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இந்தப் பகுதி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு களுள் ஒன்றான கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் வகையில் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், 97 ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் புகுத்தப்பட்ட மற்றப் பிரிவுகள் செல்லுபடி யாகும் என்றும் தெளிவுபடுத்தினர். மூன்று நீதிபதி அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கே.எம். ஜோசப் 9 (B) பிரிவு முழுவதையும் நீக்க வேண்டும் என குறிப்பிட்டார். எனினும் இரண்டு நீதி பதிகளின் பெரும்பான்மை தீர்ப்பு அடிப்ப டையில் அது இணைக்கப்பட வில்லை .

முன்னதாக, 9 (B) பகுதி மாநிலங்களின் உரிமையைப் பறிக்க வில்லை என்று ஒன்றிய அரசு முன் வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை .

ஒன்றிய அரசு அமித்ஷா தலை மையின் கீழ், புதிதாக கூட்டுறவு அமைச் சகத்தை உருவாக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment