முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு இலவச கிசிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு இலவச கிசிச்சை

தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 12 முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக, 10 சதவீத ஆக்சிஜன் படுக்கை, அய்சியு படுக்கைகளை அரசு அங்கீகரித்துள்ள தனியார்மருத்துவமனைகள் பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும் என புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை முதன்மைச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம் (10.6.2021) புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு உத்தரவுப்படி, தனி யார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 50 சதவீத படுக்கைகளில், 10 சதவீதத்தை (ஆக்சிஜன்படுக்கை, அய்சியு படுக்கை வசதி) முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு என பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும்.

அப்போதுதான், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எந்தவித தாமதமும், சிரமமும் இல்லாமல் பயனாளிகள் கரோனா சிகிச்சை பெற முடியும் என தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அரசிடம் தெரிவித்திருந்தார்.

அவரின் அந்த கருத்துருவை பரிசீலனை செய்து, அதை ஏற்று, 10 சதவீத படுக்கைகளை (ஆக்சிஜன் படுக்கை, அய்சியு படுக்கை வசதி) அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு என பிரத்தியேகமாக ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறும்போது, செல்லும் இடங்களில் எல்லாம் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன். பயனாளிகளின் செல்போன் எண்ணை கேட்டு, நேரடியாக தொடர்புகொண்டு சிகிச்சை குறித்து கருத்து கேட்கிறேன். ஒரு தனியார் மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட பயனாளியிடம் ரூ.40 ஆயிரம் கூடுதலாக பெற்றதை அறிந்து, உடனடியாக அதை திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டது.

கூடுதல் கட்டண புகாரையடுத்து 40 மருத்துவமனைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தனியார் மருத்துவமனைகளில் இடஒதுக்கீட்டின்படி நோயாளிகள் அனுமதிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment