எண் ஜோதிடர் கூறுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!
CORONA என்ற ஆங்கிலச் சொல்லின்Spellingஅய் மாற்றி CARONAA என்று உங்கள் வீட்டுக் கதவிலோ, பொது இடத்திலோ எழுதி வைத்தால், சுவரொட்டி ஒட்டினால் கரோனா அனந்தபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல, உலகத்திலிருந்தே பறந்து ஓடி விடுமாம்.
இப்படி சொல்லி இருக்கிறார் எஸ். அனந்தராவ் என்னும் எண் ஜோதிட அறிவுக் கொழுந்தோ கொழுந்து.
இந்த சின்ன விஷயம் கூட பிரதமருக்குத் தெரியாமல் போயே போச்சே! உலக சுகாதார நிறுவனத்துக்கு புரியாமல் போச்சே! போச்சே!!
- - - - -
சொல்லுபவர் உத்தரகாண்ட் முன்னாள் பா.ஜ.க. முதல் அமைச்சர்
“தத்துவார்த்தப்படி பார்க்கப் போனால் கோவிட்19 எனும் வைரஸ் என்பது கூட உயிர் வாழும் ஒரு ஜீவன்தான். உயிர்வாழ அதற்கு உரிமை உண்டு. ஆனால், நாம் தான் உலகில் வாழும் எந்த ஜீவனைவிட பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்“ என்று கூறி இருப்பவர் உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் திருவேந்திரசிங் ராவத்.
இவர் சொல்லுவதைப் பார்த்தால் கோவிட்19 வைரசை அழிக்கத் தடுப்பூசி போடச் சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி கூட நாத்திகர் தானா?
- - - - -
கங்கை
‘அமரர் ஊர்தி’யானது கவிதை எழுதிய பிரபல கவிஞர்
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வருவதும், அதை நாய், காகம், பருந்து உள்ளிட்ட உயிரினங்கள் கொத்தித் தின்பதும் அரங்கேறி வருகிறது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது, குஜராத்தில் சென்ற ஆண்டை விட உயிரிழப்பு இருமடங்கு அதிகரித்திருக்கிறது.
உயிருக்கு பயந்து மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், கடந்த மாத இறுதியில் மக்களை வானொலி மூலம் பாதுகாப்புடன் இருக்கச் சொல்லி பிரதமர் மோடி கூறினார், அதன் பிறகு, மக்களின் அச்சத்தை போக்க மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து வாய்திறக்காமல் மவுனம் காத்துவருகிறார்.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் பருல் கக்கார், இந்தியாவில் தற்போது நிகழும் சம்பவங்கள் குறித்து “கங்கை அமரர் ஊர்தியானது” (சவ-வாஹினி கங்கை) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார், அதில் :
கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள், சடலங்கள் ஒரே குரலில் பேசுகின்றன.
அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்.
என்று தொடங்கியுள்ள குஜராத்தி மொழியில் வெளியான கவிதை.
உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள், ‘இதனால், அதனால்’ என்பதெல்லாம் வேண்டாம்,
வெளியே வந்து உரக்க சொல்லுங்கள்,
“நிர்வாண ராஜா பலவீனமானவர் மற்றும் இயலாதவர்”
நீங்கள் இனி சாந்தகுணமுள்ளவர் அல்ல என்பதைக் காட்டுங்கள்,
தீப்பிழம்புகள் உயர்ந்து வானத்தை அடைகின்றன, நகரெங்கும் தீ பரவியது;
அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதை காண்கிறீர்களா?
என்று எழுதி இருப்பது பா.ஜ.க. வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, பா.ஜ.க. ஆதரவு கவிஞர் என்று அறியப்பட்ட பருல் கக்கார், மோடியை விமர்சிக்கும் வகையில் இப்படி ஒரு கவிதையை எழுதி இருப்பது ஹிந்தி, ஆங்கிலம், வங்காளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
- - - - -
தினசரி காலையில் மாட்டு மூத்திரம் குடிப்பதால் கரோனா தாக்கவில்லை - சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர்
தினமும் பசு கோமியம்(மூத்திரம்) குடிப்பதால் என்னை கரோனா தாக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மாலேகாவ் குண்டுவெடிப்பு குற்றவாளியுமான சாமியாரிணி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு - ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு! இந்தியாவில் கரோனா 2ஆவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து தற்போது 2.61 லட்சம் என்ற நிலையில் உள்ளது. ஒருநாள் கரோனா மரணங்கள் 4,000-த்தை தாண்டியுள்ளது. வட இந்தியாவில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாததால் கரோனா மரணங்கள் அதிகரித்திருக்கின்றன;
ஆனால் இந்த மரணங்கள் தொடர்பான விவரங்கள் மறைக்கப்படுகின்றன என்கிற புகாரும் உள்ளது. அதேநேரத்தில் கரோனாவை மாட்டுச் சாணி குணப்படுத்துகிறது என்கிற சாணிக் குளியல் நடத்துகிற கூத்துகளும் வட இந்தியாவில் நடக்கின்றன. அதேபோல் கோமியம் குடித்தால் கரோனா வராது என்கிற கருத்தை பாஜக தலைவர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய சாணிக் குளியல், புதிய கறுப்புப் பூஞ்சை தாக்குதல்களுக்கு காரணமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. பிரக்யா சிங் தாகூர், தினமும் கோமியம் குடிக்கிறேன். அது ஆசிட் போல நுரையீரலில் உள்ள தொற்றுகளை அகற்றிவிடுகிறது. தினமும் கோமியம் குடித்து வருவதால் கரோனாவுக்கு என எந்த மருந்தையும் நான் எடுப்பதும் இல்லை. கோமியல் குடித்தால் நோய் வராது - நாட்டுப் பசுவின் கோமியத்தை குடிப்பதால் வேறு மருந்துகளை நான் சாப்பிடுவதும் இல்லை. பசுமாட்டு கோமியத்தை கடவுளை பிரார்த்தித்து குடித்தால் நமக்கு எந்த நோயும் வராது. வேம்பு, ஆலமரம், துளசி போன்றவற்றை நட்டிருக்க வேண்டும். இவற்றை முறையாக நாம் நட்டிருந்தால் இன்று நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்காது என்றார்.
- - - - -
பசுமூத்திரம் குடிப்பதை விமர்சனம் செய்த ஊடகவியலாளர் கைது
பசுமூத்திரம் குடிப்பதை விமர்சனம் செய்த ஊடகவியலாளர்களை வதந்தி பரப்பினர் என்று கூறி மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாஜகவினர் பசுமூத்திரம் குடிப்பதை கரோனா தொற்றுக்கான மருந்து என்று கூறி வதந்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஊடகவியலாளர்கள் சிலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சைகோம் திகேந்திர சிங் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவரும் பசுமூத்திரம் குடித்தால் கரோனா குணமாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகியோர் சைகோம் திகேந்திரா மரணமடைந்தால் அதற்கு பசுமூத்திரம் காரணமாக இருக்கும். என்று எழுதியிருந்தனர்.
இதனை அடுத்து இவர்கள் தவறான தகவலை பதிவு செய்த அவர்கள் இருவர் மீதும் மிரட்டல் மற்றும் மக்களைக் குழப்புதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பத்திரிகையாளர் வாங்க்கேம் ஏற்கெனவே சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பாக இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 2 முறை கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே இவர் மீது மணிப்பூர் பாஜக அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களை அச்சுறுத்தும் விதத்தில் எழுதி வருகிறார் என்று கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments:
Post a Comment