கரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மோடி ஆட்சி - அதிர்ச்சித் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 22, 2021

கரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மோடி ஆட்சி - அதிர்ச்சித் தகவல்

 இந்தக் கொடூரச் செயலை என்னவென்று சொல்வது? கரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மோடி ஆட்சி. அதிர்ச்சித் தகவல். கரோனா தடுப்பூசி போடுவதற்கும், கரோனா நோய் தடுப்புக்கும் நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசு சமர்பித்த நிதி நிலை அறிக்கையில் ஒரு காசு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

12-05-21 அன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் நடுப்பக்கத்தில் பிரவீன் சக்ரவர்த்தி என்பவர் எழுதியுள்ள ‘Covid Mis-handling Foretold in the budget’ என்ற கட்டுரையில் இந்த அதிர்ச்சியான தகவலை அவர் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். நிதி நிலை அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பித்த நிர்மலா சீதாராமன், 35 ஆயிரம் கோடி ரூபாயை கரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கியிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்தியாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு மக்களுக்கும் நாம் உதவ முடியும் என்று அவர் பெருமையுடன் தம்பட்டம் அடித்தார்.

பட்ஜெட்டில், பல செலவினங்கள் அடங்கிய இணைப்புகளில், பக்கம் 135இல் இதற்கான விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் 2019-2020 ஆம் ஆண்டில் 11,757 கோடி ரூபாயை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கரோனா தொற்றிற்காக செலவு செய்துள்ளது என்ற குறிப்பு மட்டுமே இடம் பெற்றிருக்கிறதே தவிர, முன்பை விட தற்போது அதிகமான பாதிப்பை உண்டாக்கியிருக்கிற கரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்கு நடப்பு நிதி ஆண்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் எதுவுமே இடம் பெறவில்லை. ஒரு காசு நிதி கூட ஒதுக்கவில்லை . அப்படியானால் 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு என்னவானது? அந்த 35 ஆயிரம் கோடி மாநில அரசுகளுக்கு கடனாகவும், மானியமாகவும் வழங்கப்படும் என்ற குறிப்பு மட்டும் தான் இருக்கிறதே தவிர, மத்திய அரசு தன் பங்கிற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்று அது பட்ஜெட்டிலேயே தெளிவுபடுத்திவிட்டது.

பொது சுகாதாரம் மாநில அரசுகளின் கீழ் வருகிறது என்று வாதிடுகிறார்கள். அப்படியானால் நோய் தடுப்பிற்கான ஊசிகளை வாங்குவதற்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுகளுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கியிருக்க வேண்டும். கடனாகவோ, மானியமாகவோ அவற்றை வழங்கக் கூடாது. அதேபோல கொள்கையை நிர்ணயிக்கக்கூடிய உரிமையையும் மாநில அரசுக்கே விட்டுவிட வேண்டும். ஒன்றிய அரசு இதில் தலையிட்டு, ஒன்றிய அரசு வாங்குகிற தடுப்பூசிக்கு குறைந்தவிலை, மாநில அரசு வாங்குகிற தடுப்பூசிக்கு கூடுதல் விலை என்று பாரபட்சம் காட்டுகிற ஒரு கொள்கையும் இருக்கக் கூடாது.

விலை நிர்ணயம் செய்யக்கூடிய பிரச்சினை அல்ல. கரோனா தடுப்பூசி விலை என்பது, விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டின் கட்டணம் அல்ல. மக்கள் தொகையில் 50% க்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் இந்த நோய்த் தொற்றை தடுக்க முடியும் என்ற நிலையில். இதை பொது நலன் சார்ந்து பார்க்க வேண்டுமே தவிர தனி நபர் சார்ந்து பார்ப்பது மிக மிக மோசமான தவறான ஒரு கண்ணோட்டமாகும்.

இரண்டாவது அலை மிக மோசமாக வரப்போகிறது என்ற எச்சரிப்புக்குப் பிறகு, இந்தியாவில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்போகிறோம்? இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தடுப்பூசிகளின் விலைகள் எவ்வளவு? வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற தடுப்பூசிகளுக்கான செலவு எவ்வளவு? என்பதையெல்லாம் திட்டமிட்டு அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, குறைந்த விலையில் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதுதான் ஒன்றிய அரசின் கடமை.

அதைச் செய்யாமல் நிதி நிலை அறிக்கையில் ஒரு காசும் ஒதுக்கீடு செய்யாமல் அனைத்தையும் மாநிலங்களின் தலையில் சுமத்திவிட்டு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சி, ஒன்றிய ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.

No comments:

Post a Comment