ஏழு பேர் விடுதலை: சட்ட நிலை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 21, 2021

ஏழு பேர் விடுதலை: சட்ட நிலை என்ன?

குடியரசுத் தலைவர் அளவுக்குச் செல்லாமலேயே அரசமைப்புச் சட்டம் 161 பிரிவின்கீழ் மாநில அரசே விடுதலை செய்ய சகல அதிகாரமும் உண்டு

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் 30 ஆண்டுகளாக இருக்கும் எழுவரைவிடுதலைசெய்ய இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆம் பிரிவின்கீழ் மாநில அரசுக்கே சகல அதிகாரமும் உண்டு; இதே அடிப்படையில் 1996 செப்டம்பர் 15இல் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்ட முன்னுதாரணமும் உண்டு என்ற சட்ட நிலையையும் எடுத்துக்காட்டி எழுவரையும் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் - 30 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனைக் கொடுமையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வது என்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொள்கை முடிவு எடுத்த நிலையில், தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு (அமைச்சரவைக்கு) உள்ள பரந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டிருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும் அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் ஏற்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்காது.

அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவு (Article) மாநில அரசுக்கு விரிவான அதிகாரத்தை இது சம்பந்தமாக - சிறைக் கைதிகளின் தண்டனை குறைப்பு, மன்னிப்பு, தண்டனை ஒத்தி வைப்பது (Reprieves), இடைக்கால அவகாசம் (Respites), தண்டனை காலத்தை நிறுத்தி வைத்தல் (Remissions of punishment), குறைத்தல் அல்லது தள்ளுபடி செய்தல் போன்றவற்றிற்குத் தந்துள்ளது.

பலவித காரணங்களும்சாக்குபோக்குகளும் கூறப்பட்டன

இந்த எழுவர் வழக்கில் தேவையற்ற காலதாமதத்தை மாநில ஆளுநர் முந்தைய ஆட்சியில் செய்தபோது, பற்பல காலகட்டங்களில் பலவித காரணங்களும், சாக்குபோக்குகளும் கூறப்பட்டன.

உச்சநீதிமன்றத்திடம் அணுகவேண்டும்; அதன் கருத்து முடிவு முக்கியம் என்ற நிலைக்கும் பதில் அங்கிருந்தே கிடைத்தது. பேரறிவாளனை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை - அதுபற்றி முடிவு எடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டது.

சி.பி.அய். மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலன் விசாரணைக் குழுவில் இருப்பதால், அதுபற்றி என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது.

அங்கும் தடையில்லை என்று தெளிவாக்கப்பட்டு விட்டது.

இதன்பிறகு இரண்டாண்டுகளுக்குமேல் சம்பந்தப்பட்ட கோப்பை - விடாமல் அழுத்தமாக வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர், திடீரென்று ‘‘குடியரசுத் தலைவர்தான் இதுபற்றி முடிவு எடுக்கவேண்டும்'' என்று கூறிவிட்டார்.

முறையான நடவடிக்கை!

இந்நிலையில், புதிய தி.மு.. அரசு பொறுப்பேற்ற நிலையில், எழுவர் விடுதலை என்ற நீண்ட கால நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வு காண - சிறைச்சாலைகளில் கரோனா தொற்று அதிகமாகும் நிலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமென உச்சநீதிமன்றமே கூறியிருந்தபடியாலும், எங்கே தடையை - குடியரசுத் தலைவரிடம் முடிவு இருக்கும் என்ற நிலையை உருவாக்கி விட்டதால், முறைப்படி - இதற்கு தமிழ்நாடு தி.மு.. அரசின் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற தி.மு.. கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள்மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்'' - தடை என்ற ஒன்றை ஆளுநர் ஏற்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள முறையான நடவடிக்கையாகும்.

இதற்கிடையில் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோலும், தமிழக அரசு - முதலமைச்சர் அளித்துள்ளதும் வரவேற்கத்தக்கதாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவு

அடுத்தகட்டமாக மாநில அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு. அது அரசமைப்புச் சட்டப்படி சரியான நடவடிக்கையாகவும் அமையும்.

‘‘The Power to grant pardons, under article 161 is very wide and do not contain any limitation as to the time on which and the occassion on which and the circumstances in which the said power could be exercised.

சத்பால் Vs ஹரியானா அரசுவழக்கு

இதன்மூலம் அந்த 161 ஆம் பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் எவ்வளவு பரந்து விரிந்த ஒன்று என்பதைசத்பால் Vs ஹரியானா அரசு' என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று முக்கியமாய் உறுதிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல,

முன்பு நமது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1996 செப்டம்பரில் அறிஞர் அண்ணா பிறந்த நாளினையொட்டி, 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்து, ஆளுநர் மாளிகைக்கு கோப்பு சென்றபோது, அங்கிருந்து கி.பு.கோ. (Criminal Procedure Code) படி 15 ஆண்டுகளானால்தான் விடுதலை செய்ய முடியும் என்று உள்ள ஒரு தடையை ஆட்சேபணையாக எழுப்பி, திருப்பி அனுப்பினர்.

மனிதநேயத்தை நிலைநாட்ட முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்

அதனை முதலமைச்சர் கலைஞர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின்கீழ், புதிய முடிவு எடுத்து, அவர்களை விடுதலை செய்த முன்மாதிரியும் தமிழக அரசியல் வரலாற்றில் - தி.மு.. ஆட்சி வரலாற்றில் இருப்பதால், அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி, தாமதிக்கப்பட்ட நீதியை மறுக்கப்பட்ட நீதியாக்கிவிடாமல், கருணையோடும், கனிவோடும், ஆனால், அதேநேரத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைப்படியும் மாநில அரசின் உரிமைகளை முறைப்படி செயல்படுத்தியும் நல்ல முடிவுகளை எடுத்து, கனிந்த பயன்பெற்று, மனிதநேயத்தை நிலைநாட்ட முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு!

மற்றபடி அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றின் தன்மை, தண்டனை, விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் கூற்று, எஸ்.பி. தியாகராஜன் பேட்டி - இவையெல்லாம் நியாயம் எந்தப் பக்கம் என்பதற்கும் துல்லியமான ஆதாரங்களாகும்.

நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு!


கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

21.5.2021

No comments:

Post a Comment