சிலைகளைத் தகர்ப்பதும் மூடுவதும் ஏன், ஏன்?

காவிகளின் கலாச்சாரம் என்பது பிடிக்காதவர்களைச் சிரமப்படுத்துவது - ஈன மொழியில் பேசுவது என்பவைதான்.

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனி யில் பிறந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணனே கீதையில் சொல்லியிருக்கிறான் என்று பெருமைப்படுவது எந்த அடிப்படையில்? ஆரியர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர் களை இராட்சதர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், கரடிகள் என்றும், குரங்குகள் என்றும், தானே இந்தக் காவிக் கூட்டம் வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங் களிலும் கொச்சைப்படுத்துகின்றன.

சூத்திரர்கள் என்று கூறி அவர்களை வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறவில்லையா? விபச்சார தோஷம் உள்ளவர்கள் பெண்கள் என்று மனுதர்மத்தில் கூறப்படவில்லையா?

இந்த அவதூறுகளையும், சிறுமைகளையும், ஏச்சுப் பேச்சுக்களையும், இழிவுபடுத்தும் தன்மைகளையும் புரிந்து கொண்டால் பார்ப்பனர் அல்லாத சமூகத் தலைவர்களின் சிலைகளைச் சிறுமைப்படுத்தும் சின்னப் புத்தியின் கீழ்மையைப் புரிந்து கொள்ளலாம்.

மத்தியில் அதிகாரம், மாநிலத்திலே அடிமைச் சேவை புரியும் ஆட்சி அமைந்து விட்ட நிலையில், பா... ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின்  வாலாட்டம் அதிகரித்து விட்டது.

தந்தை பெரியார் சிலைகளைச் சிதைப்பது, செருப்பு மாலை அணிவிப்பது, காவி சாயம் பூசுவது, அதே போலவே அண்ணல் அம்பேத்கர் சிலை, திருவள்ளுவர் சிலைகளை சிறுமைப்படுத்துவது என்பதைத் தங்களின் வாடிக்கையாகவே செய்து வருகின்றனர்.

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாத கோழைகள்   - பந்தை அடிக்க முடியவில்லையானால் காலை அடிக்கும் தவறான விளையாட்டு போல கோழைத்தனமாக (திஷீuறீ நிணீனீமீ) நடந்து கொள்வதுபற்றி அவர்கள் வெட்கப்படுவது கிடையாது.

புதுவையில் எம்.ஜி.ஆர். சிலைக்குக்கூட காவித் துண்டை அணிவிக்கவில்லையா?

இவற்றைச் செய்யும் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாததால் தான், தண்டிக்கப்படாததால் தான் - இந்தக் கா(லி)விகள், நம்மை கேட்க யாருமில்லை என்ற மனப்போக்கில் போக்கிரித்தனமான கீழ் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் பிரச்சினை வெடித்துப் பெரிதாகும் போது, உடனே காவல்துறை என்ன செய்யும்? தயாராக ஒரு பதிலை வைத்திருக்கும்; குற்றவாளி மன நோயாளி என்பதுதான் அந்தத் தயார் பதில்!

மனநோயாளிகளுக்குப் பெரியார் சிலையும், அண்ணல் அம்பேத்கர் சிலையும், திருவள்ளுவர் சிலையும்தான் கண்ணுக்குத் தெரியும்போலும்.

தாராபுரத்தில் பெரியார் சிலைமீது செருப்பு கட்டி தொங்க விட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, மனோ தத்துவ மருத்துவரிடம்  (Psychiatrist) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சான்று   ஒன்றைப் பெற்று வந்து, நீதிபதியிடம் காட்டி, பிணையில் வரவில்லையா?

சென்னை சிம்சன் அருகில் உள்ள தி.மு.. சார்பில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை, வேதாரண்யம் அருகே உள்ள பெரியார் சிலைமீது காவி சாயம் பூசப்பட்டபோதும். காவித் துண்டுகளை அணிவித்த போதும், அவற்றைச் செய்தவன் மனநோயாளி என்று சொன்னதில்லையா?

கோப்புகளை முடித்து வைத்தது என்று கணக்குக் காட்ட காவல்துறை இப்படி எல்லாம் நடந்து கொள்வது காவல்துறை மீதான பொது மக்களின் மதிப்பினை பெரிதும் மங்கவே செய்யும். இந்தப் போக்கினை காவல்துறை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதே போல தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தலைவர்களின் சிலைகளை மூடுவது சரியா? நாட்டுக்காக உழைத்த தலைவர் கள் சிலைகளை மூடுவதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

இந்த நிலையில் திராவிடர் கழகம் மேற்கொண்ட வழக்குக் காரணமாக தந்தை பெரியார் சிலையை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சில ஊர்களில் தந்தை பெரியார் சிலையை தேர்தல் ஆணையத்தின் அலுவ லர்கள் மூடுவதாகக் கவனத்திற்கு வந்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் கழகப் பொறுப்பாளர்கள் உயர்நீதிமன்ற ஆணையை எடுத்துக்காட்டி ('விடுதலை'யில் மீண்டும் வெளியிடப்படுகிறது) அதனை நிறுத்திட வேண்டும். மீறி நடந்து கொள்ளும் அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கிறோம்.

Comments