தென்னாப்பிரிக்காவில் குடியேறிய பார்ப்பனீயம்

கரோனாவால் உயிரிழக்கும் இந்துக்களின் இறுதிச் சடங்கிற்குப் பார்ப்பனர்கள் கொள்ளைப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உலகில் கரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்நாட்டில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனாவும் அங்கு பெருமளவில் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் கரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தொடர்ந்து பலர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இந்தியர்கள்  வசித்து வருகின்றனர்.  இந்த நகரங்களில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கிற்குப் பார்ப்பனர்கள் மனிதாபிமானமின்றி இறந்தவர்களின் உறவினர்களிடம் அதிகப் பணம் வசூலிக்கின்றனர். கொள்ளை என்பதற்கு மறுபெயர்தானே புரோகிதம்!

இது குறித்து தென்னாப்பிரிக்காவில் இந்து மதத்தவர்களைத் தகனம் செய்யும் கிளேர் எஸ்டேட் தகன மய்யத்தின் மேலாளர் பிரதீப் ராம்லால் கூறுகையில், "பார்ப்பனர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ள இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 வரை வசூலிக்கின்றனர்.

இறுதிச் சடங்கைப் பார்ப்பனர்கள் இலவசமாகவே மேற்கொள்ள வேண்டும். அது ஒரு சேவை. ஆனால், பார்ப்பனர்கள் சிலர் இப்படி அதிகப் பணம் வசூலிப்பதை நானே பார்த்திருக்கிறேன். இதுபோன்றவர்களை நாம் ஒதுக்க வேண்டும். அதற்குப் பதிலாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் யாகம் மற்றும் திதி பூஜைகள் செய்யும் காணொலிப் பதிவுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை" என்றார்.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க இந்து மகா சபா தலைவர் அஷ்வின் திரிகாம்ஜி கூறுகையில், "தென்னாப்பிரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பூசாரிகளுக்கும் வேலைப்பளு, செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திடம் நன்கொடையாகப் பணத்தை எதிர்பார்க் கின்றனர்." என்றார்.

தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தவர்களின் உடல் களுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ள ஏதுவாக பார்ப்பனர்களுக்கு இலவசமாக கரோனா பாதுகாப்பு உடைகளை  வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. இறுதிச்சடங்கு செய்யும் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்பு தேவை களைக் கருதி பணம் வசூலிக்கின்றனர் என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில் அங்கு உள்ள ஏழை இந்துக்கள், அதிகப் பணம் வசூலிக்கும் பூசாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்சினையாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பார்ப்பனீயம் தென்னாப்பிரிக் காவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் குடியேறி தன் சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று நடத்திக் கொண்டு இருக்கிறது.

செத்துப் போனவர்களுக்குச் சிவலோகத்துக்கும் வைகுந்தத்துக்கும் வழிகாட்டப் போகிறார்களா?

புரோகிதர்களுக்கு வேலைப் பளு அதிகரித்து விட்டதாம், தென்னாப்பிரிக்க இந்து மகாசபைத் தலைவர் வக்காலத்து வேறு.

என்ன வேலைப் பளுவோ! தர்ப்பை புல்லை கிலோ கணக்கில் சுமந்து செல்கிறார்களோ -  ஆமாம், கடல் கடந்து செல்லுவது  சாஸ்திர விரோத மாயிற்றே - அதைப் பற்றிப் பேசாதது ஏன்?

Comments