தந்தை பெரியார்தம் அறிவாயுதப் புரட்சி உலகெலாம் பரவிட தோழர்களே உங்கள் பங்களிப்பு என்ன? செயல்படுவீர்!!
‘திராவிடப் பொழில்' என்னும் காலாண்டு இதழ் - தந்தை பெரியார்தம் பண்பாட்டுப் புரட்சியை உலகெங்கும் கொண்டு செல்லுவதாகும்! தோழர்களே, சந்தாக்களைப் பெருக்கும் பணியில் உங்கள் பங்களிப்பு என்ன என்பது மிக முக்கியம் என்று பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பெரியார் - மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற பெயரில் தஞ்சை வல்லத்தில் பல ஆண்டு களாக இயங்கிவரும் நிகர்நிலைப் பல் கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் கடந்த ஜனவரி 2021 முதல் வெளிவரும் ‘திராவிடப் பொழில்' என்ற பன்னாட்டு ஆய்வு காலாண்டு இதழ் உலக நாடுகளில் வாழும் பற்பல அறிஞர் பெருமக்களின் வரவேற்புக்கும், பாராட் டிற்கும் உரியதாக இருப்பது கண்டு பெரு மகிழ்ச்சியும், பேருவகையும் கொள்கிறோம்.
சிந்துவெளி முதல் கீழடிவரை உள்ள புதைபட்ட திராவிடர் நாகரிகமும், காலத் தாலும், கருத்தாலும் மூத்த மொழியாம் செம்மொழியான தமிழின் பண்பாட்டு நாகரிக படிமலர்ச்சியும்பற்றி அறிந்து கொள்ள பரந்துபட்ட ஆய்வுகள் பல்வேறு துறைகளிலும் இன்று தேவை!
வீழ்வது முக்கியமல்ல -
எழுவதே முக்கியம்!
அன்று ‘புதைக்கப்பட்டவைகளை' மீண்டும் இன்று ‘விதைக்கப்பட்டவைகளாக' மாற்றி, அவை வீறுகொண்டு எழுவதற்கு தன் தனி அடையாளமும், அதன் அறிவித்த லும், ஆய்தலும், அதன்பிறகு அவற்றைத் தக்க வைக்க உறுதியுடன் உழைக்கும் திட்ட வட்டமான செயல்வடிவமும் மிகவும் தேவை!
வீழ்வது முக்கியம் அல்ல!
எழுவதே மிகவும் முக்கியம் - அதுவே
என்றும் ஏற்றம் தருவதாகும்
அதற்குரிய ஆய்வுமூலம் அறிவுலகத் திற்கு விருந்து படைப்பதுதான் ‘திராவிடப் பொழிலின்' பணியாகும்.
இது வருமானத்திற்கல்ல; நல்ல இன செரிமானத்திற்கே!
முதல் இதழ்பற்றிய ஆய்வரங்கம்!
நேற்று (14.2.2021) அமெரிக்காவில் உள்ள திண்ணை அமைப்பினரும், பெரியார் பன் னாட்டு அமைப்பும் இணைந்து திராவிடப் பொழிலின் முதல் இதழில் வெளியாகியுள்ள ஆறு ஆய்வு கட்டுரைகளைப்பற்றிய ஆய்வரங்கத்தை நடத்தினர்!
அதில், ஆறு அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை நிகழ்த்தினர்; மிகச் சிறப்பாக ஊக்கமூட்டியதோடு சுட்டிக்காட்ட வேண் டியவற்றைச் சுட்டிக்காட்டவும் அவர்கள் தவறவில்லை என்பதே ‘சமன் செய்து சீர் தூக்கும் கோல்'போல சிறப்பான வகையில் ஆய்வு செய்தமைக்குச் சான்றாகும்.
தோழர் இளங்கோ மெய்யப்பன்,
முனைவர் இர.பிரபாகரன்,
பேராசிரியர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான்,
பேராசிரியர் முனைவர் வாசு அரங்க நாதன்
தோழர் ஜெயாமாறன்
முனைவர் சொ.சங்கரபாண்டி
ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ் வொரு கட்டுரைபற்றி ஆய்வுரை நிகழ்த் தினர். சிறப்பான திறனாய்வாக அவை அமைந்திருந்தன; அனைத்து ஆய்வுகளும் ஈர்ப்புக்குள்ளாயின.
இவர்களை வரவேற்று திராவிடப் பொழில் ஆய்வேட்டின் ஆசிரியர் குழு வின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிக்கு (மூன்று மணிநேரம்) நடைபெற்றது!
தொடக்கம் முதலே அவர்தம் ஆய்வு ரைகளை கேட்டுக் கற்றேன். அரிய வாய்ப்புப் பெற்றேன்.
இணைப்புரை வழங்கிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் கொள்கைச் செல் வங்களில் ஒருவராகத் திகழும் வர்ஜீனி யாவைச் சேர்ந்த திருமதி அறிவுப்பொன்னி அவர்களது இணைப்புரை எடுத்துக் காட்டாக இறுதிவரை அமைந்திருந்தது குன்றா ஆர்வத்தையும், குறையாத பெரு மையையும் ஆய்வரங்கிற்கு அணியெனச் சேர்த்து வரலாறு படைத்தது!
சென்னை ‘அறிவுவழி' காணொலி வாயிலாக அன்றாடம் தவறாது பொழியும் அறிவு மழை மேகங்களில் ஒருவரான வேளாண் பட்டதாரி பழ.சேரலாதன் அவர்களது நன்றி உரை முத்தாய்ப்பாக அமைந்தது!
இருமொழிகளில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது கழகக் குடும்பத்தினர்களும், திராவிட இனத்தின் அறிஞர் பெருமக்களும், இன உணர்வாளர்களும் சந்தாதாரர்களாகப் பதிவு செய்து ஊக்கப்படுத்தி, புது உலகம் காண்பதற்குப் பெரிதும் துணை நிற் கிறார்கள்.
தோழர்களே
உங்கள் பணி என்ன?
அவர்கள் அத்துணைப் பேரும், கடுமையாக உழைத்து, நாளும் மெருகேற்றி, ஒளியூட்டும் அதன் ஆசிரியர் குழு, கட்டுரைகளைத் தரும் கருத்து வள்ளல்கள், அதனை உரியவர்களுக்கு, நூலகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பல்கலைக் கழகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் உழைப்புத் தேனீக் களாக தஞ்சையிலும், சென்னையிலும் சலிப்பறியாத் தோழர்களுக்கும் நமது உளங் கனிந்த நன்றியும், பாராட்டுகளும்!
இதுவரை (14.2.2021) ‘திராவிடப் பொழில்' முதல் இதழ், பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநரின் அறிமுகக் கடிதத்துடன்,
160 நூலகங்களுக்கும்
155 கல்லூரிகளுக்கும்
நன்றிக் கடிதத்துடன், 120 சந்தாதாரர் களுக்கும் பெரியார் திடலிலிருந்து (விநியோகப் பொறுப்பு இவர்களுடையது என்பதால்) அனுப்பப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு வரலாற்றுத் திருப்பம். இதில் உங்கள் பங்களிப்பு என்ன தோழர்களே?
பெரியார்தம் பண்பாட்டுப் புரட்சி - அறி வாயுதப் பட்டறையின் சிறப்புப் பாரெங்கும் பட்டொளி வீசப் பறக்கவேண்டாமா?
எதிர்பார்த்த ஒத்துழைப்புக்காக எமது நன்றி! நன்றி!!
புரவலர்
‘திராவிடப் பொழில் ஆய்வேடு'
சென்னை
15.2.2021

No comments:
Post a Comment