ஊற்றெடுக்கும் ஊற்றங்கரை

'கரோனா' காலம் என்பது காலத்தால் பேசப்படும் அஞ்சப்படும் ஒன்றாகி விட்டது. இந்தியாவில் மட்டுமல்ல- உலகப் பரப்புப் பந்து முழுவதும் கோவிட் 19 வைரஸ் (கரோனா) தன் புஜபலத்தைக் காட்டி விட்டது.

எவ்வளவுப் பெரிய மனித சக்தியை எள் மூக்கு முனைக்கும் கீழான வைரஸ் உண்டு - இல்லை என்று பார்த்து விட்டது ஊரடங்கல்ல - உலகடங்கல் என்ற உத்தரவைப் போட்டு விட்டது.

எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிக் கொண்டு  இருந்தவர்கள் எல்லாம் - 'எல்லாம் கரோனா செயல்' என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஏன்? பூரி ஜெகந்நாதன் முகத்துக்கே முகக்கவசம் (மாஸ்க்) போடப்பட்டு இருந்ததை ஏடுகளில் ஊடகங்களில் படத்துடன் பார்க்கவில்லையா? பக்தர்கள் பரவசப்பட்டார்களா? பகவானை விஞ்சியது கரோனா என்று கன்னத்தில் போட்டார்களா என்று தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில் அவர்களின் சிந்தனைப் புலத்தில் சில கேள்விகள் எழுந்துள்ளன எங்கும் நிறைந்தவன் கடவுள், கருணையே வடிவமானவன், சர்வசக்தி வாய்ந்தவன் என்றெல்லாம் ஓயாமல் பேசப் பட்டதே - பரப்பப்பட்டதே -  அவை எல்லாம் சுத்தப் புரூடா தானா என்ற கேள்வியில் இளைஞர்களின் புருவம் சற்று ஏறி இறங்கியது - இறங்குகிறது. சிந்தனைத் தடத்தில் ஓயா அலைகள் அவர்களை அரற்றிக் கொண்டுள்ளன.

கருணையே உருவானவன் என்பதை சர்வ சக்தியோடு இணைத்துக் கொண்டு சிந்தித்தவர்களுக்கு ஒன்று திட்டவட்டமாகப் புரிகிறது;  இவை எல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் - பிழைப்புவாதிகள் தங்களின் சுரண்டல் தொழிலுக்கான மூலதனமே என்று உணரும் நிலை ஏற்பட்டது. கரோனா காலத்தில் கோயில்களை மூடியது ஏன் என்ற வினா குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலே கிளர்ந்து எழுந்து விட்டது.

எத்தனை எத்தனை உயிர்களை இழந்திருக்கிறோம் எத்தகைய பொருளாதார வீழ்ச்சி - இந்தக் கால கட்டத்தில்கூட ராமன் கோயில் கட்ட எத்தனைத் துடிப்பு - கோடிக்கணக்கில் கொள்ளை வசூல்! அதிலும்தான் எத்தனை வகையான வண்ண வண்ண தில்லுமுல்லுகள் - சுருட்டல்கள் சுருள் சுருளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன.

கரோனா காலத்தில் குத்திக் காட்டி அற்ப சந்தோ ஷத்தை அடையவும் இல்லை. கரோனா காலத்தின் கனமான இரணமான படிப்பினைகள் - கசப்பான அனுபவங்கள் அவர்களை மூடநம்பிக்கை சேற்றிலிருந்து கரையேற்றும் என்று நம்பலாம். நடந்தவைகளை நடப்புகளை நம் குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்வோம்.

வீடு பற்றி எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்போர் நாம் அல்ல - திடசித்தத்துக்கு மக்கள் வரட்டும் அப்பொழுது இருக்கிறது நமது வேலை.

அதே நேரத்தில் இந்தக் கால கட்டத்தில் சந்தடி சாக்கில் மத்திய மதவாத அரசும், அதற்கு அடிமைச் சேவகம் செய்யும் ஒரு மாநில அரசும் என்ன செய்து கொண்டு இருக்கின்றன? என்பதை நமது அருமைத் தலைவர் ஆசிரியர் அறிவியலைப் பயன்படுத்தி காணொலி மூலம் கருத்துக் கதிர்களை கழகத்தினருக்கும், அதையும் கடந்து நாட்டு மக்களுக்கும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்.

இந்தக் கால கட்டத்தில் வேறு எந்தக் கால கட்டத்திலும் இல்லாத அளவுக்குக் கழகத் தலைவரின் அறிக்கைகள் நிரம்பி வழிகின்றன.

கடந்த ஏழாம் தேதி காணொலியில் கழகத் தலைவர் அவர்களே குறிப்பிட்டதுபோல, நொடி தொறும் நொடி தொறும் வரும் செய்திகளும், நடப்புகளும் 24 மணி நேரமும் சுழன்று தீர வேண்டியதும்,  மக்களுக்கு வழிகாட்ட வேண்டியதும், எச்சரிக்க வேண்டியதும், போராட வேண்டியதுமாகவே  இருக்கின்றன என்பதை நமது தலைவர் அவர்கள் காணொலியிலே குறிப்பிட்டுக் காட்டியும் உள்ளார். (7.2.2021).

கரோனா ஊரடங்கு காலத்தில் நமது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய அமைப்பு ரீதியான பணிகள் அலுவலகப் பதிவேட்டுப் பணிகள், தகவல் திரட்டும் பணிகள் எல்லாம் 'பக்காவாக' இருக்க வேண்டியது குறித்தும் 21 அம்சங்களைக் கொண்ட வழிகாட்டும் அறிக்கையினை எந்த அளவுக்கு நம் பொறுப்பாளர்கள் நிறைவேற்றியுள்ளனர் என்பதைத் தங்களுக்குத் தாங்களே திறனாய்வு வேண்டியது அவசியமாகும்.

'கரோனா' வீறு கொண்டது என்றாலும்  அதன் வீராப்பை வீழ்த்த, மனிதனின் மகத்தான அறிவு சக்தியால்  முடியும் என்பதை நாளும் வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் சாட்சியங்களாக அறிவித்துக் கொண்டுள்ளன.

உறுதி குலைய வேண்டாம்,  உளி போல் மனித அறிவு மலைகளையும் உடைக்கும், காட்டாறுகளையும் கையசைவுக் கருவிகளால் கட்டுப்படுத்தும் - மனிதனிடம் குடி கொண்டு இருக்கும் ஆற்றலின் சிலிர்ப்பு - ஒரு கட்டத்தில் தேவையின் அவசியம் கருதி வெடித்துக் கிளம்பும் என்பது நிரூபணமாகி விட்டது.

கழகத்தைப் பொறுத்த வரை - அதன் கொள்கைகள் கனலானவை என்பதால் அதன்மீது நீறு பூக்கவில்லை - வேலைத் திட்டங்கள் வரிசையாக நின்றன - களப் போராட்டங்கள் உட்பட!

அய்யா பிறந்த நாள், நினைவு நாள், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா, 'திராவிடப் பொழில்' மூலம் தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பினைப் பன்னாடுகளிடமும் கொண்டு சேர்ப்பு, "திராவிட நாற்று மின்னிதழ்" என்று சளைக்காமல் சண்டமாருதங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.

கழகக் கட்டுக்கோப்பை தருமபுரி மண்டலத்தில் நேரில் காண நேர்ந்தது. (7.2.2021)

ஊற்றங்கரையில் நடைபெற்ற தருமபுரி மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடலும், நடப்புகளும் தோழர்களின் கருத்துகளும் ஓர் உரைகல், ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை என்பதுபோல அமைந்திருந்தன.

கமிட்டிக் கூட்டங்களில் பேசுவது வேறு - பொதுக் கூட்டங்களில் பேசுவது வேறு - ஊற்றங்கரை இதில் சிறப்பாக இருந்தது என்பது கண்ணில் கண்ட காட்சி.

தங்கள் மாவட்டத்தில் கடந்த கால கட்டத்தில் என்னென்ன பணிகள் நடந்தன என்பதை கல்விக் கூடத்தின் ஆண்டு அறிக்கை போலவும் அம்மாவட்ட செயலாளர் தோழர் கா. மாணிக்கம் தாக்கல் செய்தது தனிச் சிறப்பு!

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரம் - ஒரு புதிய அணுகுமுறை - பெரு வெற்றியைக் கொடுத்திருக்கிறது - பல புதிய இளம் ரத்தங்களைக் கழகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது - அந்த இளைஞர்கள் அறிமுகப்படுத்தவும் பட்டனர் 'பலே பலே' என்று பாராட்டத் தோன்றுகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் - ஊற்றங்கரையில் நேர்த்தியாக நடந்து வந்த "விடுதலை வாசகர் வட்டம்" அந்தப் பகுதியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அன்றைய பிற்பகல் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற கருத்தரங்கில் காண முடிந்தது.

இடையில் பத்து மாதங்கள் தடைப்பட்டது- கரோனா காரணமாகவும் - நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்த அரங்கம் காரணமாகவும் தடைக்கல் இருந்து வந்தது என்பது உண்மையே.

அது இரண்டாம் நிலையில் தொடங்கப்பட்டே தீர வேண்டும் என்பதில் நம் கழகத் தோழர்களைத் தாண்டி- மற்ற கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியது - உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பெரு வியப்பை ஏற்படுத்தியது.

அந்த அளவுக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் அப்பகுதியில் பெரும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அறிய முடிகிறது. (பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செம்மைமிகு செயல்பாடு நினைவிற்கு வருகிறது - இது வரை 2380 நிகழ்ச்சிகள்).

'ஊற்றங்கரையில் நிகழ்ச்சி நடத்தும் இடத்தைப் பற்றி இனிக் கவலை வேண்டாம் - எங்கள் இடம் இருக்கவே இருக்கிறது, வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை' இருக்கிறது என்று அதன் நிறுவனர் தாராள சிந்தனையாளர் வே.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்தார். (அடேயப்பா எத்தனை அழகு குலுங்கும் மண்டபமும், மாளிகையும் அது! 'விடுதலை' வாசகர் வட்டத்தை நினைத்தே நிர்மாணித்தது போலத் தோன்றுகிறது)

அந்தப் பெரு மகனார் அதோடு நிறுத்தினாரா? பொருளாதாரம் காரணமாக 'விடுதலை' வாசகர் வட்டம் தடுமாறிடவோ, பலங்குன்றவோ கூடாது; ஓர் அறக்கட்டளை நிறுவுவோம் - அதன் வட்டியில் - யார் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'விடுதலை' வாசகர் வட்டம் நடந்தே தீர வேண்டும் என்று அரிய கருத்தை வழங்கியதோடு அவர் நிற்கவில்லை - வெறும் வாய்ச் சொல் எதற்குப் பயன்படும் என்பார் போல, "ரூபாய் பத்து லட்சம் எமது நன்கொடை" என்று அறிவித்தது "இன்ப அதிர்ச்சியை" ஏற்படுத்தினார்.

மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர், மேனாள் நகர மன்றத் தலைவர் அரசு மருத்துவர், அரசு சாரா மருத்துவர் என்று மளமளவென்று நன்கொடையை அறிவிக்கத் தொடங்கினர். (அறக்கட்டளை அமைப்பது பற்றி - திராவிடர்  கழகத் தலைவரின் ஆலோசனை வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது).

உள்ளூரில் நமது கழகத்தின்மீதும், கடமை உணர் வோடு பணியாற்றும் கருஞ்சட்டைத் தோழர்கள்மீதும் பல்துறைப் பெரு மக்கள், பிரமுகர்கள் வைத்துள்ள மதிப்பும், எதிர்பார்ப்பும் எத்தகையது என்பதை இப்பொழுது நினைத்தால்கூட மெய் சிலிர்க்கின்றது. 'ஊற்றெடுக்கும் ஊற்றங்கரை' என்று பாராட்டத் தோன்றுகிறது.

"திராவிடப் பொழில்" வெளியீடும், சந்தாக்கள் அறிவிப்பும் (ஆயுள் சந்தா உட்பட 10 ஆண்டுகள் 8000 ரூபாய்) நிகழ்ச்சியின் மேன்மைக்கான கட்டியங்களே!

தருமபுரி மண்டலம் தலை நிமிர்கிறது - மற்ற மற்ற மண்டலங்களும் இந்தப் போட்டிக் களத்தில் இறங்குமா? இறங்க வேண்டும் - ஆரோக்கியமான போட்டியாக அது அமையட்டும். அதையும் பார்க்கத்தான் போகிறோம்.

- கலி. பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: ஊற்றங்கரை நிகழ்ச்சிகள் குறித்து, கழகத் தலைவர் அவர்கள் அவர்களாகவே தொலைப்பேசி மூலம் கேட்டறிந்தது- அந்த கூட்டத்தின்மீது அவர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்த்தியது. தருமபுரி மண்டலக் கூட்ட நிகழ்ச்சி (தனியே  காண்க).

Comments