அமைதிவழியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல் பஞ்சாப் மாநில காவல்துறை (சிறைத்துறை) டி.அய்.ஜி. பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

அமைதிவழியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல் பஞ்சாப் மாநில காவல்துறை (சிறைத்துறை) டி.அய்.ஜி. பதவி விலகல்

புதுடில்லி, டிச.14 லக்மிந்தர் சிங் ஜக்கர். பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.அய்.ஜி.யாக இருப்பவர். தாம் வயது முதிர்வடையும் முன்பே ஓய்வு பெற்றதாக அறிவித்து தம்மை பணியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு அவர் மாநில உள்துறை செயலாளருக்கு விண் ணப்பித்திருந்தார்.

"இது போன்ற நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டுமானால், நான் மூன்று மாதம் முன்கூட்டியே அரசுக்கு தாக்கீது தரவேண்டும். அல்லது இன்றே பதவி விலக வேண்டுமானால், மூன்று மாத காலத்துக்கான ஊதியத்தை அரசுக்கு திருப்பித் தரவேண்டும். நான் உடனே போகவேண்டும். எனவே ஊதியத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்துறை செயலாளருக்கு எழுதிய விண்ணப்பத்திலேயே அவர், "நான் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர் களோடு நிற்கவேண்டும்" என்றும் குறிப் பிட்டுள்ளார்.

"விவசாயிகள் நீண்ட நாள்களாக அமைதியாகப் போராடிக்கொண் டிருக்கிறார்கள். யாரும் அவர்களது குரலைக் கேட்கவில்லை. நான் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட படையில் இருக்கிறேன். நான் பணியில் இருந்தால் விதிப்படி எந்தப் போராட்டத்தையும் நான் ஆதரிக்கக் கூடாது. முதலில் நான் எனது பணியைப் பற்றி முடிவு செய்யவேண்டும். பிறகு நான் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி முடிவு செய்யலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடயே, டில்லியில் அமைதி வழியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், நேற்று (13.12.2020) பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.அய்.ஜி. பணியிலிருந்து லக்மிந்தர் சிங் ஜக்கர் விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற அய்.ஜி. ஆதரவு

ஏற்கெனவே, இந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அய்.ஜி. ஒருவர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் சஜ்ஜன் சிங் சீமா, முன்னாள் கூடைப் பந்து விளையாட்டு வீரரான இவர், விளையாட்டுத் துறை சாதனைக்காக தமக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருதையும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பித் தருவதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment