சட்ட எரிப்புப் போராட்ட நாளில் இலட்சியப் போர்ப் பரணி - காணொலியில் தமிழர் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 27, 2020

சட்ட எரிப்புப் போராட்ட நாளில் இலட்சியப் போர்ப் பரணி - காணொலியில் தமிழர் தலைவர்!

கலி.பூங்குன்றன்


‘‘ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு - சட்ட எரிப்பு நாள் - நவம்பர் 26'' எனும் தலைப்பில் காணொலி கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (26.11.2020) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. தமிழர் தலைவர் பங்கேற்று அரிய உரை நிகழ்த்தினார்.


ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியான 13(2), 25(1), 26, 29(1) (2), 368 பிரிவுகளைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அதற்கான தீர்மானம் 1957 நவம்பர் 3 ஆம் தேதி - தஞ்சாவூரில் தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. (தந்தை பெரியார் அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயம் (துலாபாரம்) அளிக்கப்பட்டது. அதன் தொகை அப்பொழுது என்ன தெரியுமா? ரூ.7,704).


தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நேற்றைய தனது உரையில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார். அந்தத் தீர்மானத்தை அம்மாநாட்டில் முன்மொழிந்தவர் குத்தூசி சா.குருசாமி, வழிமொழிந்தவர்கள் டார்பிடோ ஏ.பி.ஜெனார்த்தனம், கி.வீரமணி (சட்டக் கல்லூரி மாணவர்).


அந்தத் தீர்மானம் வருமாறு:


‘‘அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்து மதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது வருணாசிரம தர்மம் என்கிற , பிறவியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து அவரவர்களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது முதன்மையானது, மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத்துகளை அமைத்து,  அந்த அமைப்பைக் காப்பதுதான். மத சுதந்திரம் என்பதாகச் சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாகவும் கொள் வதை உரிமையாக்குவதாகிறது. இந்த உரிமையானது இந் நாட்டு இந்து பொதுமக்களில் நூற்றுக்கு மூன்று பேர் மேல்ஜாதி, உயர்ந்த பிறவி - உடல் உழைப்பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர் உழைப்பில் சுக வாசிகளாக வாழ்வதென்றும், நூற்றுக்குத் தொண்ணூற்று  ஏழு பேர்களான மக்களைக் கீழ்ஜாதி இழிமக்களென்றும், உடல் உழைப்பு வேலைசெய்து கொண்டு அடிமையாய், பாட்டாளியாய் வாழ வேண்டிய வர்கள் என்றும், பின் சொல்லப்பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி நிர்வாக உத்தியோகங்கள், பதவிகளுக்கும் தகுதியற்றவர் கள் என்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக்காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பது அவசி யம் என்றும் இம்மாநாடு கருதுகிறது.


இந்தக் காரியங்கள் சாதாரணமானத் தன்மையில் மாற்றப் படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கண்டா வது மாற்றித் தரும் படிச் செய்யவேண்டியது பொதுமக்களின் இன்றியமை யாத கடமை என்று இம்மாநாடு கருதுகிறது.


 வோட்டுரிமை இல்லாமலும் மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொதுஜன சரியான தேர்தல் முறை இல் லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலா லும், இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் ஆதலாலும், பார்ப்பனர், முஸ்லீம், பஞ்சமர் ஆகியவர் களைத் தவிர்த்த பொதுஜனத் தொகையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்களா யுள்ள சூத்திரரென்று ஆக்கப் பட்டிருந்த பெருங்குடி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருப்பதாலும் இந்தச் சட்டமானது நான் காம் ஜாதி என்றும் கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத்தக்கதாக ஆகாது என்று இம் மாநாடு கருதுகிறது.


இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததாயிருப்பதால் இவைகளை முன்னிட்டு, இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடா னது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26ஆம் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து, இந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிட ராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத் தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறது.''


அந்தத் தீர்மானத்தை விளக்கிய கழகத் தலைவர் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சொல்லும் எத்தகைய ஆழ மானவை; ஜாதி, மதம் காரணமாக நீதி, சமத்துவம், சுதந் திரத்திற்கு இடம் இல்லாத அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும் என்பது அத்தீர்மானத்தின் உள்ளடக்கம் என்பதை விளக்கினார்.


முதல் நாள் அறிவித்து, மறுநாள் இந்தப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவிக்கவில்லை.  தீர்மானத்தில் முரட்டுத் தனமான எந்த வார்த்தையையும் கூடப்பயன்படுத்தவில்லை. 15 நாட்கள் அரசாங்கத்திற்கு வாய்தா கொடுத்து - சிந்திப்ப தற்கான உரிய அவகாசம் கொடுத்துதான் தந்தை பெரியார் அந்தப் போராட்டத்தை அறிவித்தார்.


இந்தியாவிலேயே ஏன், உலகத்திலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை எரித்த போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார் - அத்தகையதோர் போராட்டத்தில் ஈடு பட்டது திராவிடர் கழகம் மட்டுமே!


ஆனால், ஆட்சியில் இருந்தவர்கள் - இலட்சக்கணக்கான மக்கள் கூடிய ஒரு மாநாட்டில், ஒரு மாபெரும் தலைவர் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கவேண்டாமா? ஒரு ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் அப்படித்தானே அணுகியிருக்க வேண்டும்?


மாறாக என்ன செய்தார்கள்? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று ஆராய ஆரம்பித்தார்கள். என்ன வேடிக்கை என்றால், சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசியல் சட்டத்திலேயே இடம்பெறவில்லை.


அவசர அவசரமாக மத்திய அரசின் உத்தரவுப்படி சென்னை சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினர்.


3 ஆம் தேதி தஞ்சை தீர்மானம் என்றால், இரண்டே நாள் இடைவெளியில் 6.11.2020 அன்று இந்தச் சட்டம் நிறை வேற்றப்படுகிறது.


சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்; இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தோழர் எம்.கல்யாண சுந்தரம் பெரியாரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்றெல்லாம் பேசியதுண்டு. மதுரை வைத்தியநாதய்யர் மகன் வை.சங்கரன் மூன்றாண்டல்ல - 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் என்று துள்ளிக் குதித்தார்.


அப்பொழுது திராவிடர் கழகத்தோடு நல்லுறவு இல்லாத நிலையிலும், அறிஞர் அண்ணா அவர்கள் ஆணித்தரமாகவே எதிர்த்தார்.


பெரியார் ஏன் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? பெரியார் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள் என்றார்.


‘‘இந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டத்தை 10 முறை திருத்தியிருக்கிறீர்களே, திருத்தங்கள் என்பதே நாகரீகமான முறையில், 10 முறை நீங்களே கொளுத்தி இருக்கி றீர்கள்; தேசியக் கொடியும், சட்டமும் அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் பக்தவத்சலம் கருதுவதுபோல, பெரியாருக்காக நீங்கள் கடு மையான சட்டம் கொண்டு வந்தால், மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதைத் தயவு செய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


இச்சட்டம் தேவையற்றது, தீங்கானது, கொடுங்கோன் மைக்கு வழிவகுப்பது'' என்று அண்ணா மேலும் பேசினார்.


ஆனாலும், பெரும்பான்மைப் பலத்தால் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது. (முதலமைச்சர் காமராசர் சட்டமன்றத்தில் இருந்தார். எனினும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் - அவர் நிலை அப்படி!).



  1. காந்தியாரின் கொடும்பாவி, உருவப்படம் எரிப்பது குற்றம்.

  2. காந்தியாரின் சிலையைச் சேதப்படுத்துவதோ, அழிப்பதோ குற்றம்

  3. இந்தியத் தேசியக் கொடியை எரிப்பது அல்லது வேறு வகையில் அவமதிப்பது குற்றம்

  4. அரசியல் சட்டத்தை எரிப்பதும், வேறு வகையில் அவமானம் இழைப்பதும் குற்றம்

  5. இச்சட்டப்படி கருதப்படும் குற்றங்களைச் செய்ய முயற்சித்தாலும் குற்றமாகவே கருதப்படும்.


இக்குற்றத்திற்கான தண்டனை 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சட்டத்தின் பெயர் ‘‘தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult To Nation Honour - 1957) என்பதாகும்.


இப்படியொரு சட்டத்தை இயற்றி விட்டதாலேயே அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நிறுத்தி விடுவாரா?


இந்த சட்டத்தைக் கண்டு தந்தை பெரியார் தயங்கினாரா? அச்சம் என்பது தந்தை பெரியாரின் அகராதியில் கிடையாதே!


தந்தை பெரியாரின் அறிக்கை இதோ:


‘‘நான், மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ


மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோகித்தாலும்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத் தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.


கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே!


நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்கு பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிடமாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து, பயந்துவிட்டதாகப் பேர் வாங்காதீர்கள்!


ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர் மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.''


- ஈ.வெ.ரா.


ஆண்களும், பெண்களும் ஏன் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகளுடன் தாய்மார்கள், கண் பார்வை இல்லாத தோழர், மாற்றுத் திறனாளிகள், 17 வயது இளைஞர்கள் என்று பத்தாயிரம் பேர் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியைக் கொளுத்தினார்கள் - சாம்பலை உள்துறை அமைச்சருக்கு அனுப்பினார்கள்.


சிறைக்குச் செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலிருந்தே சட்டத்தை எரித்து அதன் சாம்பலை உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தார்கள். 10 ஆயிரம் பேர் கொளுத்தினர்; 3,000 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது கூட நெஞ்சு நிமிர்ந்து வாக்கு மூலம் கொடுத்தார்கள்.


அந்த வாக்கு மூலத்திலும்  திராவிடர் கழகத்துக்காரரின் இலட்சியத் தீ அனல் கக்கியது.


‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளரச்சிக்காரன், இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அச்சட்டத்தை, திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பை காட்டிக் கொள்ள அறிகுறியாக இச்சட்டத் தைக் கொளுத்தினேன். இப்படி கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால், எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்ள தயாராயிருக்கிறேன்.''


கையளவு காகிதத்தைக் கொளுத்தியதற்காக மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரை தண்டனை - இலட்சியத்திற்காக கொடுக்கப்பட்ட விலை என்பார் தந்தை பெரியார். அதுதான் இதிலும் நடந்தது. சிறையில் அரசியல் கைதிகளுக்கு உரிய எந்த சலு கையும் கொடுக்கப்படவில்லை. அரைக்கால் சட்டை, ஜெயில் உடை - தலையில் குல்லாய் - கடும் வேலைகள் - சிறைக் கொடுமையாலும், தரமற்ற உணவாலும் பலரும் சிறையில் மாண்டனர்.


சிறைச்சாலையில் கழக வீராங்கனைகளுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு ஜாதி ஒழிப்பு என்றும், சிறைப் பறவை என்றும், சிறைச் செல்வி என்றும், சிறைவாணி என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட வரலாறு திராவிடர் கழகத்திற்கேயன்றி வேறு எங்கு காண முடியும்?


சிறையில் வீர மரணம் அடைந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு (மயிலாடுதுறை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடலை சிறைச்சாலைக்குள்ளேயே புதைத்துவிட்டனர்.


அன்னை மணியம்மையார் போராடி, புதைக் கப்பட்ட உடல்களை மீண்டும் பெற்று, திருச்சி வரலாறு காணாத ஊர்வலத்தை நடத்திக் காட்டி, ஜாதி ஒழிப்பு வீரர்களின் வீர மரணத்தை வரலாற்றில் பதிவு செய்தார்.


சிறையில் இருந்து வெளியில் வந்த சில வாரங்களிலேயே 18 பேர் இன்னுயிர் ஈந்தனர்.


வருவாய் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவரை இலட்சிய ஜாதி ஒழிப்புப் போருக்காக சிறைக்கு அனுப்பிய குடும்பங்கள் தத்தளித்தன.


ஆனால், இந்தத் தியாகங்களைச் செய்த கருஞ்சட்டை வீரர்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பதவி யையா? விருதுகளையா?


இத்தகைய ஓர் இயக்கமோ, இயக்க வீரர்களையோ வரலாற்றின் எந்த ஏடுகளைப் புரட்டினாலும் காணல் அரிது - அரிதினும் அரிதே!


மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்யத் தயாராக இருந்தும்   இலட்சிய வீரர்களான திராவிடர் கழகத் தோழர்களிடமா அது நடக்கும்?


இன்றைக்கு ஜாதியை வெளிப்படையாக ஆதரிப் போர் யார்? சங்கராச்சாரியார் - தீண்டாமை க்ஷேமகர மானது என்கிறார். அடுத்தது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கூட்டம்.


வருணாசிரம தர்மத்தை இழிவுஎன்று நினைக் காமல் - அது ஏற்றத்தாழ்வுக்கானது அல்ல - அது ஒரு சமூக அமைப்பு என்கிறார் ஆர்.எஸ்.எஸின் குருநாத ரான கோல்வால்கர் தனது ‘‘Bunch of Thoughts''  எனும் நூலில்.


இந்நூல்தான் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகம்.


ஆர்.எஸ்.எசும், பா.ஜ.க.வும் என்ன கூறுகிறது?


ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிறார்கள். நாம் கேட்கிறோம், ஒரே ஜாதிதான் எல்லோரும் என்று கூறத் தயாரா? என்று கேட்கிறோம் - பதில் இல்லையே ஏன்?


ஜாதியைக் காப்பாற்றும் மனுதர்மத்தை இன்றளவும் காப்பாற்ற முனைப்புக் காட்டவில்லையா? அதனைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


காந்தியாரும், தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொன்னாரே தவிர, ஜாதி ஒழியவேண்டும் என்று கூறவில்லையே! அதனால்தான் காந்தியாரைக் கண்டித்தார் தந்தை பெரியார்.


காந்தியார் பிறந்த நாளிலோ, குடியரசு நாளிலோ சமபந்தி போஜனம் நடத்தினால் தீண்டாமை ஒழிந்து விடுமா? யாரை ஏமாற்ற இந்தத் தந்திரம்!


தீண்டாமைக்கு மூலம் என்ன? ஜாதிதானே! ஜாதியை வைத்துத்தானே தீண்டத் தகுந்தவர்களா? தீண்டத் தகாதவர்களா? என்று தீர்மானிக்கப்படுகிறது.


எனவேதான், ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுக்கிறோம் - பிரச்சாரம் செய்கிறோம் - போராடுகிறோம் - சிறைக்குச் செல்லுகிறோம்.


இந்தியாவிலேயே காந்தியாரைக் கண்டித்ததும், ஜாதியை ஒழிக்க உண்மையாகப் பாடுபட்டதும் இரண்டு தலைவர்கள் மட்டும்தான்.


தமிழ்நாட்டில் தந்தை பெரியார், வடநாட்டில் அண்ணல் அம்பேத்கர்.


அண்ணல் அம்பேத்கரின் Annihilation of Caste எனும் நூலை ‘‘ஜாதியை ஒழிக்க வழி'' எனும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து எண்ணற்ற பதிப்புகளில் இலட்சக்கணக்கில் மக்களிடத்தில் பதிவு செய்தவர் தந்தை பெரியார் என்பது- இவ்விரு தலை வர்கள் ஜாதி ஒழிப்பில் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டாகும்.


ஒரு கட்டத்தில் ஹிந்து மதத்தில் இருக்கும் வரை ஜாதி இழிவிலிருந்து விடுதலை பெற முடியாது என்ற முடிவில் ஹிந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, புத்த மார்க்கத்தை பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு தழுவினார் அண்ணல் அம்பேத்கர்.


நான் இங்கிருந்து இவர்களை ஒரு கைபார்க்கிறேன் என்று போர்த் தொடுத்தவர் தந்தை பெரியார்.


அது வீண்போகவில்லை. இன்றைக்குப் பெயருக் குப் பின்னால் ஜாதி வாலை ஒட்டிக் கொள்வதை வெட்கப்படும்படிச் செய்யவில்லையா?


ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம் நடக்க வில்லையா? சென்னையில், பெரியார் திடலில் இயங்கிவரும் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் நாள்தோறும் ஜாதி மறுப்பு - மத மறுப்புத் திருமணங்கள் ஆரவாரமின்றி நடந்தவண்ணமே உள்ளன - விளம்பரம் இல்லை அவ்வளவுதான்.


சித்தாந்தம் இல்லாத சிலர் ஜாதியை மூலதனமான வைத்து தேர்தல் அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள் - ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை நிராகரித்தே வருகிறார்கள்.


எல்லா இடங்களில் இருந்தும் அடித்து விரட்டப் பட்ட ஜாதிப் பாம்பு - கோவில் கருவறைக்குள் நுழைந் தது. அதிலும் கை வைத்தார் தந்தை பெரியார். அது தான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் என்பது. அந்த ஜாதி ஒழிப்புக் களத்தில் நின்றபடிதான், தன் இறுதி மூச்சைத் துறந்தார் தந்தை பெரியார்.


இன்றைக்கு அந்தச் சட்டம் நிறைவேறும் நிலையை எட்டிவிட்டதே! தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் இருந்தாலும், தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தினார் 1924 இல் - அந்த மாநிலத்தில் இந்தச் சட்டம் முழு வீச்சில் கோலோச்சுகிறது.


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை இனி அடுத்தடுத்து அனைத்து மாநிலங்களிலும் பரவத் தான் போகிறது - அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.


ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா என்று பெரிய புத்திசாலிகள்போல், நம்மை மடக்குவ தாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்.


அவர்களைப் பார்த்து நாம் கேட்பது என்ன?


நாட்டில் ஜாதி இருக்கிறதா? இல்லையா? இந்திய அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி இருக்க வில்லையா?


ஜாதி அடிப்படையில்தானே கல்வி பெரும்பாலான சூத்திர, பஞ்சம மக்களுக்கு மறுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியுமா?


எந்த ஜாதி கல்வி உரிமைக்குத் தடையாக இருந்ததோ, அந்த ஜாதியையே அளவுகோலாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இட ஒதுக்கீடு.


அம்மையை ஒழிக்க அம்மைக் கிருமிகளைக் கொண்டே அம்மைத் தடுப்பூசி தயாரிக்கப்படவில் லையா?


‘ஆண்டிபயாடிக்' என்று சொல்கிறோமே - மருந் தில் தேவையான அளவு விஷம் சேர்க்கப்படவில் லையா? பாட்டிலில் ‘பாய்சன்' என்றே குறிப்பிடப்பட்டு உள்ளதே!


எதுவரை இட ஒதுக்கீடு என்று கேட்பவர்களுக்குப் பதில் - எதுவரை ஜாதி இருக்கிறதோ - சட்டப்படி ஒழிக் கப்பட்டு மிச்சசொச்சம் இல்லாமல் ஆக்கப்படுகிறதோ அதுவரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடும் இருக்கும் என்பதுதான் நமது எளிமையான - அதே நேரத்தில் அழுத்தமான பதில் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.


1957 இல் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, 80 வயதையும் தாண்டி வாழ்ந்து கொண் டுள்ள முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களை காணொலி வழியாகப் பார்த்ததும், அவர்கள் நாளைய தினம் போராட்டம் நடத்தினாலும், அதில் கலந்து கொள்ளத் தயார்  என்று அந்த வயதால் மூத்த - உணர்வால் இளையோராக - இலட்சிய உணர்வு ஒரு சிறிது அளவும் குன்றாதவர்களாக வெளிப்படுத்திய காட்சியைக் கண்டு உணர்ச்சிவயப்படும் நிலை.


அந்த முதிய பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் கழகத்தின் இளைஞர்கள் சால்வை அணிவித்தது எதைக் காட்டுகிறது?


தலைமுறை இடைவெளியில்லாமல் இந்த இயக்கம் என்றென்றும் இளமையோடு, இலட்சிய உறுதியோடு செயல்படும் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கவில்லையா?


எதையும் எதிர்பாராமல் இலட்சியத் துடிப்போடு தலைவர் பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டு உயிரையும் இலட்சியத்திற்காகக் கொடுக்க சித்தமாக உள்ள தோழர்களைக் கண்டு நாம் மெய்சிலிர்க்கிறோம், இலட்சியத்தில் மேலும் கூர்மை பெறுகிறோம்.


இறுதிமூச்சு வரை இலட்சிய முறுக்கோடு இயக்கப் பணி புரிவோம் என்ற உறுதியை அவர்களுக்குத் தெரிவிப்பதுதான், நாம் இந்த முதுபெரும் பெரியார் தொண்டர்களுக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதை யாகும்.


ஜாதி ஒழிப்புப் போரிலும் சரி, சமூகநீதிப் போரிலும் சரி, பெண்ணடிமை ஒழிப்புக் களத்திலும் சரி, அனைவருக்கும் அனைத்தும் என்னும் சமத்துவ சமதர்மப் போராட்டத்திலும் சரி, மூடநம்பிக்கை ஒழித்து பகுத்தறிவை வளர்த்தெடுக்கும் பாதையிலும் சரி - இவையெல்லாம் மனிதகுலத்துக்கு நியாயமான வகையில் உரியவை என்ற முறையில் வென்றே தீருவோம் - இடையில் இடையூறுகள் விரட்டலாம்; சிறைச்சாலைகள் நம்மை அழைக்கலாம் We Will Win the War. 


ஆரியம் என்றால் வருணாசிரமம்


திராவிடம் என்றால் ஜாதி ஒழிப்பு.


ஆரியம் என்றால் பெண்ணடிமை, மனுதர்மம்


திராவிடம் என்றால் பெண்ணுரிமை, மனித தர்மம்


ஆரியம் என்றால் மூடத்தனம்


திராவிடம் என்றால் பகுத்தறிவு


ஆரியம் என்றால் ஒடுக்குமுறை


திராவிடம் என்றால் விடுதலைப் போர்


இதை இளைஞர்களிடம் கொண்டு செல்லுவோம்!


இவ்வாறு சட்ட எரிப்புப் போராட்ட நாளில் புத்தெழுச்சி உரையை காணொலிமூலம் வழங்கினார் கழகத் தலைவர்.


தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை, கருநாடகம், அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தோழர்கள், பெருமக்கள் இந்தக் காணொலியில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.


வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையுரை வழங்கிட, சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நெய்வேலி இரா.கனகசபாபதி நன்றி கூற, இக்காணொலி கருத்தரங்கம் நெகிழ்ச்சியுடன் கூடிய உணர்ச்சிகரமான அறிவு விருந்தாக அமைந்தது.


 


வாழும் சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள்



சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் மொட்டையன், பெரியார் முரசு, பேட்டை ராஜகோபால் ஆகியோர் கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து  சிறப்பித்தனர்.



சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் அ.மாவடியான், கீழவாளாடி கணேசன், சேட்டு, கோவிந்தன்,  ந.கரிகாலன், ந.மைக்கேல், மருதை ஆகியோருக்கு சிறப்பு



அரங்கமுத்து,  அறந்தாங்கி இராவணன், கணேசன், கோவிந்தன், கலியமூர்த்தி, பரமசிவம், கனகசபாபதி, பெரியார் முரசு, ந.கரிகாலன், வை.மருதை



மைக்கேல், மாவடியான், மொட்டையன், பழனி, பேட்டை ப.ராஜகோபால், செ.பிளவேந்திரன், அ.மேகநாதன், சேட்டு, டி.வெங்கடாசலம்


கழகத் தலைவர் எடுத்துக்காட்டிய இரு நூல்கள்!


ஆர்.எஸ்.எஸில் இருந்து பணியாற்றி, அதன் ஜாதிவெறியைக் கண்டு வேதனைப்பட்டு வெளியேறிய இருவர் எழுதிய நூல்களை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி காணொலியில் தோலுரித்துக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


ஆர்.எஸ்.எஸில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு அலையும் தாழ்த்தப்பட்ட சமூக தோழர்களும், பிற்படுத்தப்பட்டோரும் ஏன், பார்ப்பனர் அல்லாதாரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அந்தத் தகவல்கள் இதோ:


ஜாதி ஒழிப்புப்பற்றி பேசாமல், தீண்டாமை ஒழிப்பு, ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்று பேசுபவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும். சிலர் ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்று நயமாகச் செய்துகொண்டே, ஜாதியை கடைப்பிடிப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். இந்த வகையை சார்ந்ததுதான் என்பதை இரண்டு நூல்களிலிருந்து எடுத்துக்காட்டினார்.


பன்வர் மெக்வன்சி என்பவர் சிறு வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயிற்சி பெற்றவர். பின்னர் வெறுத்துப் போய் வெளியேறியவர். ஏன் வெளியேறினேன் என்று தமது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அந்த நூல், ‘‘இந்துவாக நான் இருக்க முடியாது'' என்பதாகும். அந்த நூலில் அவர் எழுதும் ஒரு பகுதியில் குறிப்பிடுகிறார், ‘‘தில்வாரில் நடைபெற்ற இராம ஜென்ம பூமி தொடர்பான ஒரு கலவரத்தில் இறந்து போன இருவரின் அஸ்தியை (சாம்பலை) கிராமம் கிராமமாகக் கொண்டு போய்க் காட்டி மதவெறியைத் தூண்டினர் இந்துத்துவா வெறியர்கள். அவ்வாறு வரும்பொழுது பன்வர் மெக்வன்சி வசிக்கும் கிராமத்திற்கும் வருகிறார்கள். மெக்லன் மிக நீண்ட காலம் பள்ளிப் பருவத்திலிருந்து பட்டதாரி ஆன பின்பும், ஆர்.எஸ்.எஸில் இருக்கிறார். ஆர்வமாக வரும் சேவக்குகளுக்கு தமது வீட்டில் உணவு தயாரித்துத் தர ஆசைப்படுகிறார். அவரது தந்தை, ‘‘ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாழ்ந்த ஜாதியினர் வீட்டில் சாப்பிடமாட்டார்கள்'' என்று கூறியபோதும், அதனை ஏற்காமல் மீறி உணவு தயாரிக்கிறார்.


ஆனால், அந்த ஊர்வலத்தை வழி நடத்தி வந்த பொறுப்பாளரான நந்தலால் தாஸ், ‘‘இங்கு வந்துள்ள சாதுக்கள், சாமியார்கள் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரான நீங்கள் தயாரிக்கும் உணவுகளை சாப்பிடமாட்டார்கள்; தயங்குவார்கள், கோபம் கொள்வார்கள்; எனவே, அதனை பார்சலாக செய்து கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிச் சென்றார்.


ஆனால், அந்த உணவை அவர்கள் சாப்பிடாமல், சாலையில் வீசியதைக் கேள்விப்பட்டு, வீசப்பட்டுக் கிடந்த உணவையும், பொட்டலங்களையும் நேரில் சென்று பார்த்தும் அதிர்ச்சியடைந்த மெக்வன்சி, உணர்வுபூர்வமாக எழுதியுள்ள வரிகளை நூலிலிருந்து எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராகப் போட்டாலும், அவர்கள் ஜாதிப் பாகுபாடுகளை எப்படி கடைப்பிடிக்கிறார்கள் என்பதை விளக்கினார்.


முருகன் ‘வேலை'த் தூக்கிக் கொண்டு அலையும் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்கள் இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும்.


தாழ்த்தப்பட்ட ஒருவரை மாநில தலைவராக்கிக் காட்டுவது எல்லாம் அவர்களின் வித்தைகள்தான் - தந்திரம்தான்.


இதுபோலவே தினேஷ் நாராயணன் அவர்கள் எழுதிய ‘‘RSS Deep Nation'' என்னும் நூலை ஆதாரமாகக் காட்டினார் தமிழர் தலைவர்.


‘‘மனுவும், சங்கமும் நானும்'' என்னும் தலைப்பில் திரு.ரமேஷ் பதங் என்பவர் எழுதிய சுயசரிதை இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். நேரடியாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திடமே வாதம் செய்திருக்கிறார்.


தீண்டாமையை, ஜாதியை ஒழிக்க சங் (ஆர்.எஸ்.எஸ்.) பரிவார் என்ன செய்தது என்றாவது விவாதித்து, தந்தை பெரியார், ஜோதிபாபுலே போன்றவர்களின் நூல்களைப் படித்து பின்னர் வெளியேறியுள்ளனர்.


இந்த இரண்டு நூல்களையும் எடுத்துக்காட்டிப் பேசினார் தமிழர் தலைவர்.


 


டாக்டர் சோம.இளங்கோவன் அறிவிப்பு


நேற்று (26.11.2020) காணொலி காட்சியில் பங்குகொண்ட வாழும் சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்கு டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) தனது சிறிய தந்தையார் பி.வி.இராமச்சந்திரன் நினைவாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் அளிக் கப்படும் என்று அறிவித்தார்.


No comments:

Post a Comment