ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி : வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் 4 பெண்கள் நோபல் பரிசு பெற்று உள்ள நிலையில், பெண்களை ’அடிமை’ என்றும், "ஆண் துணை இன்றி பெண்கள் வாழக் கூடாது" என்றும் சொல்லும் மனு இன்னமும் இந்திய சமூகங்களில் நிலைபெற்றிருக்கிறதே?


- எஸ். தமிழ்ச்செல்வன், சென்னை


பதில் : காரணம், பார்ப்பனீய - சனாதனத்தின் ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் 'ஆக்டோபஸ்'போல் (எட்டுகால்பிராணிபோல்) பிடித்துக் கொண்டிருப்பதன் விளைவே இது!


சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பீடிகை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில்கூட, ஜாதி பாதுகாக்கப்படும் நிலையே - அதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. அதில் மனுவை ஏற்கும் 'இந்துலா'வையும் அங்கீகரித்துள்ள பிரிவு கடைசி பிரிவாகவும் உள்ளது மற்றொரு சான்று!


கேள்வி : தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கே அரசமைப்புச் சட்டத்தில் உரிமையுள்ள போது, இருக்கின்ற கருத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதற்கு எதிராக வழக்குப் பதிவது கருத்து சுதந்திரத்திற்கு இடப்பட்ட விலங்குதானே?


- அ.சி.கிருபாகரராஜ், பெருங்களத்தூர்.


பதில்: கருத்துச் சுதந்திரம், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைக்கும் அதனையே பறித்து மக்கள் விரோத பாசிசப் போக்கு அண்மைக் காலங்களில் மத்திய - மாநில அரசுகளாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இதை நாட்டின் முக்கிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அறிவுப் பெருமக்கள் அனைவரும் சுட்டிக்காட்டியும் கூட, உரிய பலன் இல்லை - மாற்றம் இல்லையே!


கேள்வி : திராவிட இயக்கக் கொள்கைகளைக் கை கழுவும் அ.இ.அ.தி.மு.க.வின் போக்கு அக் கட்சிக்கு மட்டுமல்லாமல், பெரியார் மண்ணிலும் காவி இருள் சூழ இடம் கொடுத்துவிடுமே... விழித்துக் கொள்வார்களா அக் கட்சியினர்?


- மன்னை சித்து, மன்னார்குடி -1


பதில்: சுயநலம் - சம்பாதித்ததைப் பாதுகாத்துக் கொள்ளத் துடிப்பது போன்ற காரணங்களுக்காகப் பதவிகளைத் தேடுகின்றனர்! டில்லி 'பஜனை' இவர்களுக்குத் தேவைப்படும் ஒரு பாதுகாப்பு 'முகக்கவசமாகி' விட்டது போலும்!


கேள்வி: ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு இட ஒதுக்கீடு இல்லை என்று அப்பட்டமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்து விட்டதே?


- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.


பதில்: ஏற்கெனவே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்' என்ற கிராமத்து மக்கள் பழமொழியை நினைவூட்டிப் படியுங்கள்.


கேள்வி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர்ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீர்த்துப்போகச் செய்யும் செயல் அல்லவா? அப்படியே அளித்தாலும் வருங்காலத்தில் இந்த இட ஒதுக்கீடு போதுமா?


- மல்லிகா, மாங்காடு.


பதில்: ஆளுநர் மாளிகையில், உயர்ஜாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதலை மாநில அரசு தந்தால், இதில் கையெழுத்துப் போடப்படும் என்ற அரசியல் பேரங்கள்தான் இதற்கு மூலகாரணம் என்று மத்திய அரசு  உத்தியோக வட்டாரங்களில் பலமாக அடிபடுகின்றனவே - காதில் விழவில்லையா?


7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது 'யானைப் பசிக்கு சோளப் பொரியே!' ஒட்டகத்தின் முதுகின்மீதிலிருந்து ஒரு லேசான கட்டையை எடுத்துவிட்டு ஒட்டகத்தை சுமையில்லை என்று நம்ப வைப்பது போன்ற ஒரு அரசியல் வித்தைதான். முழு உரிமைக்குப் பதில் இப்படியா சரணாகதி பாடுவது? (எனினும் இதையேனும் ஓர் அரசு ஆணை மூலம் செய்துள்ள மாநில அரசைப் பாராட்டியுள்ளோம்).


கேள்வி: திராவிட இயக்க உழைப்பின் பயனாக, தங்களது வாழ்வில் முன்னேறிய பலருக்கும் சமுதாய சிந்தனை, பொதுத் தொண்டு மனப்பான்மை இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?


- வெங்கட. இராசா, ம.பொடையூர்


பதில்: அப்பட்டமான, நிர்வாணக் கோல சுயநலம்தான். அவர்களுக்கு இன நலன் - நாட்டு சமுதாய நலன் என்பதெல்லாம் இப்போது தேவையற்ற ஒன்று என்ற 'பரந்த சிந்தனை!' இதைத் தவிர வேறு என்ன?


கேள்வி : உடம்பில் சட்டை அணியாமல் உழைக்கும் விவசாயியை மரியாதைக் குறைவாகப் பார்ப்பவர்கள், சட்டையில்லாமல் பூணூலோடு உலவும் புரோகிதரை மட்டும் மரியாதையோடு அழைப்பது எதனைக் காட்டுகிறது?


- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: பார்ப்பனீயத்தின் மூளைச்சாயம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்ற உண்மையைக் காட்டுகிறது!


கேள்வி: கலைத்துறையில் தாங்கள் கற்றுக் கொள்ள விரும்பிய / விரும்பும் கலை எது?


- முகிலா, குரோம்பேட்டை 


பதில்: விரும்பியது இசை - பாடுவது!


               இப்போது விரும்புவது- சுவைப்பது மட்டுமே!


Comments