சிறப்புக் கேள்வி: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

சிறப்புக் கேள்வி:

சிறப்புக் கேள்வி:


பொள்ளாச்சி மா.உமாபதி,


மாநிலச் செயலாளர், கலை இலக்கிய மற்றும் பகுத்தறிவு பேரவை, தி.மு.க.



கேள்வி  1 :  ”மனுஸ்மிருதி இந்துக்களின் ஆகப்பெரிய சட்ட நூல்” என்று ஒரு பிரிவினரும், “மனுஸ்மிருதி இந்துக்களின் நூலே அல்ல; அது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது” என்று ஒரு பிரிவினரும்,


”மனுஸ்மிருதி இப்போது நடைமுறையில் இல்லை; அதை ஏன் எடுத்து வருகிறீர்கள்” என்று வேறு ஒரு பிரிவினரும் கூறிக் கொண்டிருக்க, மனுஸ்மிருதியின் அடிப்படையில் உச்சநீதிமன்றமே பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளதே! ஒரே நூலைப் பற்றி ஒரே பிரிவினர் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஏன்?


பதில்: நன்றி தோழர் பொள்ளாச்சி மா.உமாபதி அவர்களே,


மனுஸ்மிருதி ஆரியர்கள் - (பவுத்த செல்வாக்கை ஒழிக்க) உருவாக்கியது - அதுவும் அவர்கள் பிரச்சாரம் செய்வது போல் ஆதிநூல் அல்ல! சுங்க வம்சம் வடபுலத்தில் ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட ஒரு நூல் என்பது ஆய்வாளர்கள் கருத்து.


மனுதர்ம சாஸ்திரம் என்ற இந்த குலதர்ம நூல் ஒரே நபரால் எழுதப்பட்டதல்ல என்பது ஆய்வாளர்கள் கருத்து.


உயர்நீதிமன்ற வழக்குகளை - தீர்ப்புகளை மாதந்தோறும் வெளியிடும் Madras Law Journal (MLJ) என்ற ஓர் ஏட்டில், 1947ஆம் ஆண்டு பக்கம் 27-38இல் வந்துள்ள கட்டுரையில்  சில செய்திகளில் - மூன்று மனுக்கள் பேசப்படுகின்றனர்!


இது தவிர வேறு ஆறு மனுக்களும், பேசப்படுகிறார்கள். (இவர்கள் சுயம்புவான மனுவின் புத்திரர்களாம் - இதுவே முரண் அல்லவா!)


மனுபற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்,



  1. மாக்ஸ் முல்லர் 2. பூலர் (Buler) 3. டாக்டர் ஜோலி 4. ஜெய்ஸ்வால் 5. பி.டி.கானே ஆகியோர் முக்கியமானவர்.


ஜெய்ஸ்வால் கருத்துப்படி, மனுஸ்மிருதி கி.மு.150-க்கும், கி.பி.100-க்கும் இடைப்பட்டதாக இருக்கவேண்டும். புஷ்ய மித்திர சுங்கனால் உருவாக்கப்பட்ட சுங்க ஏகாதிபத்தியத்தின் புத்த கொள்கை எதிர்ப்பாக வந்த சாஸ்திரமாக்கப்பட்ட நூல் இது!


ஆங்கிலேயர்கள் மொழி பெயர்த்து, ஹிந்துக்களுக்கு நீதி வழங்க என்று ஆரம்பித்தனர் - வெள்ளைக்காரர் நெல்சனின் மொழி பெயர்ப்பு -  வில்லியம் ஜோன்ஸ் மொழி பெயர்ப்பு.


200 ஆண்டுகளுக்குமுன், அதன் பொருள் தெரியாத சமஸ்கிருதத்தில் இருந்ததால், உயர்நீதிமன்றத்தில் பல பார்ப்பனர்கள் மொழி பெயர்ப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றி, திரித்துக் கூறுவதைக் கண்டறிந்த, பிறகு அம்முறை நீக்கப்பட்டது.


'இந்துலா' பற்றியே கூட சமஸ்கிருதம் தெரியாத வெள்ளைக்காரர்களாலும், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும் உருவாக்கப்பட்டது என்ற கூற்றும்கூட உண்டு!


எனவே, வெள்ளைக்காரர்கள் அந்நூலை ஆரியப் பார்ப்பன செல்வாக்கைக் கண்டு அஞ்சி, அவர்களைத் தங்களது வசப்படுத்தியதன் விளைவே இது!


திட்டவட்டமான காலமோ, வரலாறோ இல்லாததினால் இந்தக் குழப்பம், அவ்வளவுதான்!


''வருண ஜாதி அமைப்புக்கு வரைவுச் சட்டம் அளிக்க இருந்த ஸ்மிருதி இலக்கியங்களின் தொடக்க காலத்துடன் அம்பேத்கர் இந்த பிராமணப் பின்னடைவைத் தொடர்புபடுத்துகிறார். அனுலோம (கணவன் ஜாதி, மனைவியினுடையதை விட உயர்வாக இருத்தல்), பிரதிலோம (மனைவியின் ஜாதி, கணவனைவிட உயர்வாக இருத்தல்), திருமணங்கள் தொடர்பான விதிகள், எல்லாவற்றையும் திட்டமிட்டு வைசியர்கள், சூத்திரர்கள், பெண்களை அடிமைப்படுத்திய தன்மை, மிக முக்கியமான சட்ட நூலானமனுஸ்மிருதிக்கு, ஆசிரியராகப் புராணப் பெயரான மனு என்பதைத் தொடர்புபடுத்தியது முழு ஏமாற்று வேலை என்பதை நிரூபிக்க அவர் (அம்பேத்கர்) பல்வேறு ஆதாரங்களைக் காட்டுகிறார்.


கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதுகின்ற நாரத ஸ்மிருதியின் ஆசிரியருக்கு மனுஸ்மிருதியின் ஆசிரியர் பெயர் தெரிந்திருந்தது. அவர் மனு என்ற புனை பெயரைக் கொண்டவர். சுமதி பார்கவ என்ற நபர் என்று கூறியுள்ளார். அதிகாரபூர்வத்தன்மை கேள்விக்குட்படாத அறிஞர்களின் கருத்துப்படி, மனுஸ்மிருதி கி.பி.150-க்கும், 170-க்கும் இடையில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். நாம் புஷ்யமித்ரனின் பார்ப்பனப் புரட்சி கி.பி.185 இல் நிகழ்ந்ததை மனதில் கொண்டால், மவுரியர்களின் அரசுக்கு எதிராக பார்ப்பனப் புரட்சிக்கான கொள்கை நூலாக மனுஸ்மிருதி புஷ்யமித்ரனால் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை.''


- டாக்டர் அம்பேத்கர், பாகம்-3, பக்கம் 270-271


கேள்வி 2:  தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் அதற்கு திராவிடமும், கலைஞரும் தான் காரணம் என்று பார்ப்பனர்கள் தொடர்ந்து பழி சொல்வது ஏன்?


பதில் 2:  திராவிடர் இயக்கக் கொள்கைகள், ஆழமாக மக்கள் மனதில் ஊன்றிவிட்ட சமூகநீதி- மனித உரிமை - சமத்துவம் - சம வாய்ப்பு - மாநில உரிமைகள். இதற்கு மூலக் கல் பெரியார், அண்ணா, கலைஞர். எனவே, அதை அசைத்துப் பார்க்க இப்படி பழிச் சொல்!


இந்தப் பிரச்சாரம் கண்டு நாம் அயரவேண்டாம். நம் கொள்கைப் பயிருக்கு 'அவாள்' இடும் உரம் என்பதாகக் கொண்டு, நமது கொள்கைப் பயணம் தொடரட்டும்!


No comments:

Post a Comment