மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

* இரு மொழிக் கொள்கையில் உறுதி


* நீட் தேர்வு முறையைக் கைவிட வேண்டும்


சென்னை,செப்.29 இருமொழிக் கொள்கையே எங்கள் பிரதான கொள்கை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனி யாக்கும், மாநிலங்களின் கல்வி உரிமையில் மத்திய அரசு நுழைய வழிவகுக்கும் நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.


அதிமுக செயற்குழுக் கூட்டம் நேற்று (28.9.2020) அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அதில் 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில் இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இது தவிர, மத்திய அரசை வலியுறுத்தி மேலும் 3 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.


இருமொழிக் கொள்கையே பிரதான கொள்கை: தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங் கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென் றைக்கும் அதிமுகவின் மொழிக் கொள்கை. எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல. எந்த மொழியும் எம் மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது என்ற கருத்தில் அதிமுக உறுதியாய் இருக்கும்.


'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த மனிதாபிமான சிந்தனையும், சகோதரத்துவ உணர்வும், உலகப் பார்வையும் கொண்ட பண்பாடு தமிழர் பண்பாடு. எல்லோரையும் உற்றார் உறவின ராகப் போற்றி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, அறவழிப்பட்ட வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டிருப்ப வர்கள் தமிழர்கள். அன்னைத் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று, அதன் இலக்கியச் சுவையையும், அதுகூறும் அற உணர்வுகளையும் கற்றறிதல் வேண்டும். உலகெங்கும் சென்று உறவாட ஆங்கிலம் என்னும் இணைப்பு மொழியையும் படித்திடல் வேண்டும் என்ற இருமொழிக் கொள்கை அண்ணா நமக்குக் காட்டிச் சென்ற லட்சிய வழியாகும்.


இருமொழிக் கொள்கை ஆய்ந்து, அறிந்து மேற்கொள்ளப்பட்ட அறிவுவழிக் கொள்கை. வெறுப்பால் உருவான கொள்கையல்ல. மாறாக, அறிவியல் உண்மைகளின் அடிப் படையில் உருவான கொள்கை என்பதை அண்ணா விளக்கியுள்ளார்.


ஒருமொழி பேசப்படாத சூழலில் வாழும் மாணவச் செல்வங்கள் அந்த மொழியைக் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக நாம் அறியலாம். அதிலும் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், தங்கள் வாழ்க்கைச் சூழலில், வழக்கத்தில் இல்லாத மொழியைப் புதிதாகப் படிப்பதென்பது அவர்களுடைய சுமையைப் பலமடங்கு அதிகரிக்கும்.


கூடுதலாக ஒரு மொழியை ஒருவர் தெரிந்துகொள்வதால், அவர் அந்த மொழி தெரியாதவரை விட அறிவில் சிறந்தவர் என்பதை யாரும் ஏற்க முடியாது. பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் இன்றைய தேவைகளுக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் இன்றியமையாத பாடத் திட்டங்களைப் பயில்கின் றனர். இந்தப் பாடத் திட்டங்களில் மாணாக்கர்கள் தங்கள் மனதைச் செலுத்தி, மனச் சுமை இன்றி கற்ற லின் இனிமையை உணர்ந்து படித்தல் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிக்கு வெளியே பேசி, பழக வாய்ப்பில்லாத ஒருமொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மாணாக்கர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். ஏற்கெனவே உலக இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயில வேண்டிய இன்றியமையாத கடமை மாணாக்கர்களுக்கு இருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் அறிவுசார் தொழில்களில் முதன்மை பெற்றி ருப்பதற்கு அவர்கள் பெற்ற ஆங்கிலக் கல்வி அடிப்படையாகத் திகழ்வதை யாரும் மறுக்க முடியுமா?


எனவே, இருமொழிக் கொள்கை (தாய்மொழியாம் தமிழ் மொழியும், ஆங்கிலமும்) நடைமுறையில் இருப் பதுவே சாலச் சிறந்தது. இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு என்றைக் கும் உறுதியாக இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் மக்கள், தங்கள் மீது ஒரு மாற்றுமொழி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அனைத்து மொழிகளையும் மதிக்கும் தமிழ்நாடு என்றென்றைக்கும் இருமொழிக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் என்பதை இச்செயற் குழு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.


நீட் தேர்வைக் கைவிட வேண்டும்: 'நீட்' என்ற மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது. மாநிலங் களின் கல்வி உரிமையில் நீட் தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவ தாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதிமுக செயற்குழு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment