செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

செய்தியும், சிந்தனையும்....!

யாரைக் கேட்கவேண்டும்?


சென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்டோபர் முதல் தேதி முதல் உயர்வு.


பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் சுங்கக் கட்டணம் முறை ரத்து செய்யப்படும் என்று சொன்ன நரேந்திர மோடி அவர்களைத்தான் கேட்கவேண்டும்.


பதவி ருசியில் அதிகாரிகள்


அரசியலில் களமிறங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் பீகார் மாநில டி.ஜி.பி.


பி.ஜே.பி. மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் இந்தப் பதவி வியாதி பலரையும் தொற்றிக் கொண்டு விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அம்மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த டி.பி.ராய் எம்.பி.,யாக்கப்பட்டதில் தொடங்கி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.பி., ஆக்கப்பட்டது, வெளியுறவுச் செயலாளராக இருந்தவர் மத்திய அமைச்சராக்கப்பட்டது உள்பட ஏராளக் கூத்தும்; இவர்கள் எல்லாம் அரசுப் பதவிகளில் இருந்தபோது, கட்சி சார்புக் கண்ணோட்டத்தில் செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? (தமிழ்நாட்டில் டி.ஜி.பி.யாக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினரானதைக் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்).


ஆலயமா - பாடமா?


பள்ளித் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில் வீட்டுச் சுவர்களைக் கரும் பலகையாகப் பயன்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மத்தியில் இந்தப் பணியைச் செய்துள்ள ஆசிரியை சபன் பத்ரலேக் 290 மாணவர்களில், 50 மாணவர்கள் என்ற வீதம் பிரித்து, தனிநபர் இடைவெளியுடன் பாடம் நடத்தும் பணி பாராட்டத்தக்கப் பணி!


ஆலயம் தொழுவது சாலவும் கேடு - பாடம் கற்பித்தல் சாலவும் நன்றே!


பள்ளிகளில்


கழிவறை வசதி?


தமிழகத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான கழிவறை வசதி 26 சதவிகித பள்ளிகளில் மட்டுமே உள்ளது. - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.


அதனால் என்ன? தேசிய கல்விக் கொள்கை 2020 ஜோரா பட்டொளி வீசிப் பறக்கிறதே! மோடிஜிக்கு அது போதாதா?


ராமன் இருக்கப்


பயம் ஏன்?


கரோனா தடுப்பூசியை வாங்கி விநியோகிக்க மத்திய அரசிடம் ரூ.80 ஆயிரம் கோடி இருக்கிறதா? - இந்திய மருத்துவ நிறுவனம் கேள்வி.


அதனால் என்ன? ராமன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டி விட்டாரே பிரதமர் - இனிமேல் இந்த செலவு எல்லாம் எதற்கு?


பெண்ணுரிமைப் போராளிகள் திரும்ப வேண்டிய பக்கம் எது?


உரிமை பெற்ற பெண்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்கிற அளவுக்குப் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. - இன்று வெளிவந்த ‘துக்ளக்'.


பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறுகிறது கீதை (அத்தியாயம் 9; சுலோகம் 32).


இந்தக் கீதையையும், இதனை உருவாக்கியதாகக் கூறும் ‘லீலைகளின்' மன்னன் கிருஷ்ணனையும் உருகி உருகி, உருவி உருவிப் போற்றுவதும் - படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனு அத்தியாயம் 9; சுலோகம் 17) என்னும் மனுதர்மத்தை மயிர்க்கால் பிடித்துப் போற்றும் ‘துக்ளக்' வகையறாக்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? பெண்ணுரிமைப் போராளிகளின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பாதவரை இந்த மனுவாதி கூட்டம் இன்னும் எந்த எல்லைக்கும் சென்று பெண்களை இழிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கும்.


பந்தியில் இடமில்லை...


முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்ஸா - இ.பி.எஸ்ஸா என்ற விவாதம் அ.தி.மு.க. செயற்குழுவில் காரசாரம்.


அடுத்த முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். ‘‘பந்தியில் இடமில்லை, இலை ஏன் பொத்தல்'' என்று சண்டையிட்டுக் கொள்கிறார்களாம்.


செருப்புக்காலுடன் கலப்பைப் பிடித்த ராஜாஜி!


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மத்திய பி.ஜே.பி. அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செருப்பைக் கழற்றிவிட்டு வயல்வெளியில் நடந்தார் என்பது செய்தி.


முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது - அரசு வெளியிட்ட விளம்பரச் செய்திப் படத்தில் செருப்புக் காலுடன், கலப்பையைப் பிடித்த காட்சி அப்பொழுது பெரிய விமர்சனம் ஆனதுண்டு. விவசாயம் பாவத் தொழில் என்பது அவாளின் மனுதர்மம்; விவசாயம் உயிர்நாடி என்பது நமது கொள்கை. இரண்டுக்கும் அதுதான் வித்தியாசம்.


கேலிதான் செய்வார்கள்!


‘நீட்' தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் - அ.தி.மு.க. செயற்குழு தீர்மானம்.


‘நீட்டை' எதிர்த்து சட்டசபையில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சட்டை செய்யாதவர்கள் சட்டசபையில் நீட்டை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததைக்கூட வெளியில் சொல்லாதவர்கள் - இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டு கேலிதான் செய்வார்கள்.


அறிவிப்பு


காற்றுமூலமும் கோவிட்-19 வைரஸ் பரவுகிறது.


200-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு.


ஊரடங்கு உத்தரவு ஒரு பக்கத்தில் தளர்த்தப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம், வாகனங்களின் அணிவகுப்புப் பெருகுகிறது. குறைந்தபட்சம் முகக்கவசம் அணிவதைக் கூடப் பொது மக்கள் தவிர்த்தால் எப்படி? தலைக்கவசம் அணிவது, முகக்கவசம் அணிவது நம் பாதுகாப்புக்காகத்தானே தவிர - காவல்துறைக்காகவோ, அரசுக்காகவோ அல்ல என்பது நினைவில் இருக்கட்டும்!


No comments:

Post a Comment