ஊரடங்கில் சகிக்க முடியாத சமூகக் கேடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

ஊரடங்கில் சகிக்க முடியாத சமூகக் கேடுகள்

குழந்தைத் திருமணம் மற்றும் சிறார்களை வேலையில் அமர்த்துவது இந்தியாவில் சட்டவிரோதம் என்று இருந்தாலும்  அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு இது இரண்டுமே தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றன.


ஊரடங்கு காலத்தில் எந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருந்த போதிலும் ரகசியமாக வட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைத் திருமணங்கள்  வேக வேகமாக நடந்து வரும் அதிர்ச்சி கரமான தகவலை அய்.சி.டி.எஸ். என்ற தனியார் குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ளது


மே மாதக் கடைசி வாரத்தில் தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் முத்தாலயம்மா கோவிலில் 16 வயது சிறுமி 23 வயது இளைஞருடன் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை மணமகன், அவரது பெற்றோர், மைனர் பெற்றோர்மீதும் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தால் அந்தப் பெண் மீட்கப்பட்டு ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


குழந்தைத் திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்கள், சிறுவர் பாலியல் அத்துமீறல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக தெலங்கானா சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறி இருப்பதாவது: பொது முடக்கம் அமலில் இருந்து மார்ச் 24 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 204 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.


இந்த திருமணங்கள் சிறுமிகளின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் கல்வி, உடல்நலன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும்.


எனவே, சிறார் திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். குறிப்பிட்ட வயதை எட்டும் முன்பாகவே சிறுமிகளுக்குத் திருமணம் நடத்தி  வைக்கக் கூடாது என்பதுதான் சட்டத்தின் நிலை.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. எல்லோரும் வீட்டில் இருப்பதால், அவர்கள் கடமை முடியும் என்று குடும்பங்கள் பெரும்பாலும் நினைக்கின்றன" என்றார்.


மேலும் ஓர் அதிர்ச்சித் தகவல், கடந்த சில மாதங்களாக பலருக்கு எந்த வேலையும் இல்லாததால், சில குடும்பங்கள் தங்கள் சிறுவர்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனர்.    வட இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது


2015-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொழிலாளர் நலத்திட்டத் தின்கீழ் இருந்த பல விதிமுறைகள் நீக்கப்பட்டன. அதில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த சில கடுமையான சட்டங்களை நீக்கினார் கள். இதன் காரணமாக  2017-ஆம் ஆண்டிலிருந்து திடீரென இந் தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் வீட்டுவேலை செய்ய, கட்டடவேலைகள் செய்ய, உணவகங் கள், சாலையோர உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது,


2019-ஆம் ஆண்டு தொழில் முடக்கம் காரணமாக வேலையிழந்த பலர் தங்களது பிள்ளைகளையும் அழைத்து கொண்டு நகரங்களை நோக்கி வேலைக்குப் புறப்பட்டுவிட்டனர். அகமதாபாத், சூரத், போபால், குர்காவ், நொய்டா நகரங்கள் உள்ளிட்ட வடமாநிலங் களில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்றது. இது குறித்து பல சமூக நல அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தும், பெற்றோர்களுடன் பகுதி நேரம் சிறுவர், சிறுமிகள் பாதுகாப்பாக எளிய வேலைகளைச் செய்வதற்குத் தடையில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு விட்டது.   பல கடுமை யான வேலைகளுக்குக்கூட சிறுவர், சிறுமிகளை அழைத்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.


தொடர் ஊரடங்கு காரணமாக ஊர்களுக்குத் திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளும் கிடைத்த வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பழ மண்டிக்காரர்கள் சிறுவர், சிறுமிகளை பழங்களை விற்பனை செய்வதற்காகக் கூலிக்கு அழைத்துச் செல்கின்றனர்.


இதில் விற்பனை ஆகாவிட்டால் சிறுவர்களைத் துண்புறுத்துவது, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது என்பவை தொடர்கின்றன.


அண்மையில் கான்பூரில் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறுமிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில் 8 சிறுமிகள் கர்ப்பம் அடைந்ததும், 2 சிறுமிகளுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது,


இந்த சிறுமிகளில் பலரும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் 12, 14 வயது சிறுமிகளும் கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.  இதுதொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டும் என்றும் பிரியங்கா காந்தி அறிக்கை கொடுத்துள்ளார். இந்தச் செய்திகள் வெளிவந்து 5 நாட்கள் கடந்த நிலையில்கூட, உத்தரப்பிரதேச அரசு யார்மீதும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் விசாரணைகூட நடத்தப்பட வில்லை. மாறாக, பாதுகாப்பு இல்லத்தில் இருந்த சிறுமிகள் வேறோர் இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.


கரோனாவைவிட பெரும் கொடுமைகள் அல்லவா இவை? பா.ஜ.க. ஆட்சியில் நாடு பாசிசப் பாதாளத்தை நோக்கி விரைகிறது. 


No comments:

Post a Comment