சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு!

உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அந்த நண்பர், தமிழ்நாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது.


இங்கு அவரின் பெயர் இரமேஷ். 'டைல்ஸ்' பதிக் கும் வேலை செய்பவர்.


ஊரடங்கு தொடங்கும் முன் இயல்பாக ஊருக்குச் சென்றார். வேலை காரணமாகத் தமிழகம் வந்தே ஆக வேண்டிய சூழல்.


அவரின் மாநிலத்தில் இருந்து திருச்சி 3000 கி.மீ.


போக்குவரத்து எதுவும் இல்லை. துணிச்சலாக இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, மற்றொரு நண் பரை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.


தினமும் 300 கி.மீ வீதம், 10 ஆவது நாளில் திருச்சி வந்துவிட்டார்.


இன்று அவரைச் சந்தித்தேன்.


ஏன் இவ்வளவு அவசரம்? ஆபத்தான பயணம் தேவையா என்றேன்?


"நானும் பயந்து கொண்டு தான் வந்தேன். எனினும் எப்போது ஊருக்குச் சென்றாலும் 10 நாட்களுக்கு மேல் இருக்க மாட்டேன், தமிழகம் வந்து விடுவேன்" என்றார்.


"எங்கள் ஊரில் நான் மதிப்புடன் வாழ்ந்ததே இல்லை. என் வயது 40.


ஜாதியின் பெயரால், பொருளாதாரத்தின் பெயரால், கிராமத்தில் வாழ்ந்ததன் பெயரால், கூலி வேலை செய்பவன் என்கிற பெயரால் பலமுறை நான் அவமதிக்கப்பட்டுள்ளேன்.


பூனைக்கு முன்னால் எலி வாழ்வது போல கூனிக் குறுகிய வாழ்க்கை எங்களுடையது.


அக்காலத்தில் தான் தமிழகம் வந்தேன். எங்கள் ஊரில் மாதத்தில் 15 நாள் வேலை இருக்கும். அப்படி இருந்தாலும் முழு சம்பளமும் கிடைக்காது.


ஆனால் தமிழ்நாட்டில் நன்றாக வேலை செய்தால் மாதத்தில் 25 நாட்கள் வேலை; சம்பளமும் அதிகம்.


குறிப்பாக "மரியாதை" என்பதைத் தமிழகம் வந்து தான் தெரிந்துக் கொண்டேன்!


சில வீடுகளில் வேலை செய்யும் போது, "அண்ணே டீ சாப்பிடுங்கள்", என்பார்கள், சில கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, "இந்தாங்க சார்", என் பார்கள்.


நம்மையும் 'அண்ணா', 'சார்' என்று அழைக் கிறார்களே என அறையில் நான் அழுதது உண்டு.


நீங்கள் எந்த ஜாதி என இந்த 10 ஆண்டுகளில் என்னை யாரும் கேட்டதில்லை. என் வருமானம் குறித்து யாரும் கேட்டதில்லை. படிப்பு குறித்தோ, என் ஊர் குறித்தோ கூட யாரும் கேட்டதில்லை.


உத்தரப்பிரதேசத்தின் சொந்த ஊரில் இருந்ததை விட இங்கு பாதுகாப்பாய் உணர்கிறேன்.


குறிப்பாக நம்மையும் மதித்து நடக்கிறார்களே என்பதில் தான் நான் அசந்து போகிறேன்" என்றார்.


தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலக மனிதர்களுக்கும் சேர்த்துத்தான் பெரியார் சொன்னார்!


சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு!


- வி.சி.வில்வம்


(முகநூல் பதிவு)


No comments:

Post a Comment