தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

* பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை விவகாரம் -   உச்சநீதிமன்றத்தின் 18ஆம் தேதி தீர்ப்பு 22 ஆம் தேதி மாறியது எப்படி?


* நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் வந்தது என்று தலைமை நீதிபதியே கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது


உச்சநீதிமன்றத்திற்கு மேலாக மதவாத சக்திகளுக்கு அதிகாரமா?


உண்மையில் நடந்தது என்ன என்பது  வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படவேண்டும்



பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த உச்சநீதிமன்றம், அடுத்த நான்கு நாள்களுக்குப் பிறகு தீர்ப்பை மாற்றியதன் பின் னணியில் அச்சுறுத்தல் இருந்ததாக உச்சநீதி மன்றமே ஒப்புக்கொண்டுள்ளது - அதிர்ச்சிக் குரியது. இதன் உண்மை நிலை வெளிச்சத் துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


நீதித்துறையையே  அச்சுறுத்தும் அளவுக்கு மத வாத விபரீதங்கள் தலைதூக்கி இருப்பது அதிர்ச்சிக்கு உரியது.


கரோனாவின் அச்சுறுத்தல்!


கரோனாவின் தேரோட்டம் மக்கள் சமூகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சகல துறைகளும் முடக்கப்படவேண்டிய ஒரு நெருக்கடி. அதிலும் மக்கள் கூடக் கூடிய நிகழ்வுகள் எவையாக இருந்தாலும், அவை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தப்படும் வகையில் மத்திய - மாநில அரசுகளின் ஆணைகளும், அறிவிப்புகளும் இருந்து வருகின்றன.


அவற்றிற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டியது அவசியம் என்று, கட்சிகளைக் கடந்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.


கோவில்களும் விதிவிலக்கல்ல!


மக்கள் அதிகம் கூடும் கோவில்கள், அவற்றின் தொடர்பான விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றன.


கோவில்களும் திறக்கப்படக்கூடாது என்ற நிலைதான் இப்போது; யாருக்கும், எதற்கும் விதி விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.


இந்துத்துவாவாதிகள் ஒற்றைக் காலில் நின்று போராட்டம் எல்லாம்கூட நடத்தினார்கள். பிரச்சினை மதம், கோவில் என்பதல்ல - மக்கள் கூடுகிறார்கள் என்பதுதான் இதன் காரணம்; இது எல்லோருக்கும் விளங்கும்போது, மதவாதிகளுக்கு மட்டும் விளங்காதா?


18 ஆம் தேதி உச்சநீதிமன்றம்


வழங்கிய  தீர்ப்பு என்ன?


பூரி ஜெகந்நாதன் கோவில் ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், ‘‘இப்பொழுது இருக்கும் கடும் நோய்த் தொற்றும் சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி கிடைத்தால், பூரி ஜெகந்நாதரே எங்களை மன்னிக்கமாட்டார்!’’ என்று திறந்த நீதிமன்றத்தில் (18.6.2020) நீதிபதிகள் மனந்திறந்தனரா, இல்லையா?


அப்படி இருக்கும்பொழுது, திடீரென ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?


அச்சுறுத்தலால் மாறிய தீர்ப்பு


இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு உச்சநீதிமன்றம் திடீரென கூடி, அந்த வழக்கின்மீதான தீர்ப்பையே மாற்றி, அனுமதி அளித்துள்ளது என்பது அசாதாரணமானது - அதிர்ச்சிக்குரியது - நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையே சிதற அடிக்கக் கூடியதுமாகும்.


எங்களுக்கு அச்சுறுத்தல் வந்தது என்று நீதிபதிகள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.


When the SG, arguing for the Shankara charya’s participation, pointed out that the Odisha Government had initially objected, the CJI said, ‘‘Even the Shankaracharya had wel comed our decision on june 18,  now he is opposing.’’


The CJI also said the Judges had received threats after the order stalling the Rath Yatra.


(‘டைம்ஸ் ஆஃப் இந்தியா, மும்பை, 23.6.2020)


முதலில் 18 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பினை, பூரி சங்கராச்சாரியார் ஏற்றுக்கொண்ட நிலையில், அதற்குப் பின் என்ன நடந்தது? என்பதுதான் முக்கியம்.


உச்சநீதிமன்றத்தையே அச்சுறுத்த முடியும்  என்பது சாதாரணமானதுதானா?


நீதிமன்றத்துக்கும் மேல் மதவாத சக்தியா?


மத சக்திகளுக்கு - உச்சநீதிமன்றத்துக்கு மேலான சக்தியும், அதிகாரமும் இருக்கிறதா என்ற கேள்வி கண்டிப்பாக எழவில்லையா?


மத்தியில் பி.ஜே.பி. அதிகாரத்துக்கு வந்த நிலை யில், தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட அத்தனை அமைப்புகளையும் தன் அதிகாரத்துக்கும் கீழே கொண்டு வந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதைபோல், இப்பொழுது உச்சநீதிமன்றத்திற்கே அச்சுறுத்தல் வரும் சூழ்நிலை ஏற்படலாமா? இது மிகப்பெரிய கெட்ட வாய்ப்பாகும்.


மக்களுக்கு ஏற்படும் அச்சம்


மதவாத ஆதிக்கத்தின் கரங்கள் ஆட்சியிலும் மிகப்பெரிய அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றத்திலும் நீளுமேயானால், மக்களின் உரிமைகளும், வாழ் நிலையும் எந்த இடத்திற்குத் தள்ளப்படும் என்ற கேள்வியும், அச்சமும் எழாதா?


உச்சநீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் கொடுத்தது யார்? அது எந்த சக்தி? என்பது வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும் - அதன்மீது உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்; இல்லா விட்டால், நீதிமன்றத் தீர்ப்பு ஒவ்வொன்றையும் மக்கள் சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுவிடும் - இது முக்கியமான,  மிகமிக முக்கியமான ஒன்றாகும்.


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


24.6.2020


No comments:

Post a Comment