பனகால் அரசர் மறைந்தவுடன் ‘குடிஅரசு' இதழில் ஏழு பக்கம் இரங்கல் இலக்கணம் எழுதினார் தந்தை பெரியார்
இயக்கத்திற்கு மட்டுமல்ல - இயக்கத்தினுடைய தலைமைக்கு அடித்தளமானது அந்த இலக்கணம்!
சென்னை, ஜூன் 25 பனகால் அரசர் அவர்கள் மறைந்த காலகட்டத்தில், ‘குடிஅரசு' இதழில் ஏழு பக்கம் எழுதினார் தந்தை பெரியார் அவர்கள். பனகால் அரசரைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள், எவ்வளவு ஆழமாகச் சொல்லியிருக்கிறாரோ, அந்த ஆழமான இலக்கணம், ஓர் இயக்கத்திற்கு மட்டுமல்ல, இந்த இயக்கத்தினுடைய தலைமைக்கு அடித்தளமா னது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 20.6.2020 அன்று மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களி டையே சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பல தலைவர்களை சந்தித்த அனுபவம்,
கடல் போன்ற அனுபவம்!
தந்தை பெரியாருடைய தலைமை ஆற்றல், வழி நடத்தக் கூடிய பண்பு எப்படி என்பதை - தொலை நோக்கு முன் உணர்வோடு பனகால் அரசர் புரிந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால், பல தலைவர்களைச் சந்தித்த அனுபவம், கடல் போன்ற அனுபவம், எதிர்ப்புகளைச் சந்தித்த அனுபவம் எல்லாம் உண்டு தந்தை பெரியார் அவர்களுக்கு!
அப்படிப்பட்ட பனகால் அரசர் அவர்கள் மறைந்த நேரத்தில், இதுவரையில் இல்லாத ஓர் அதிசயமாக ஏழு பக்கத்திற்குக் ‘குடிஅரசு' இதழில், இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார். அதைக் கட்டுரை என்றுதான் சொல்லவேண்டும்; இரங்கல் செய்தியல்ல!
அந்த இரங்கல் செய்தி - இன்றைய தலைப்பாக - உன்னதத் தலைமை என்பதற்கு - ஒப்பற்ற தலைமை என்பதற்கு அதுதான் அடித்தளமாக இருக்கப் போகிறது.
வழமையாக, இந்தக் கட்டுரையில் இருக்கின்ற சிறப்புகள், ‘தோழன்' கட்டுரையில் இருப்பதைப்பற்றி நான் சொல்வதெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம்.
அதற்குமுன்பு, நம்மவர்களுக்கு அடித்தளம் எப்படி இருந்தது? நீதிக்கட்சி, திராவிடர் இயக்கத்தி னுடைய அடித்தளத்தை இன்றைக்கு அசைத்துப் பார்க்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது மதவாத சக்திகளாக இருந்தாலும் சரி அல்லது ஆரிய சக்திகளாக இருந்தாலும் சரி - நேரிடையாக இரண்டு பேரும் வர முடியாத நேரத்தில், நம்மில் விபீடணர் களைப் பிடித்துக் கொண்டு, பிரகலாதன்களைப் பிடித்துக்கொண்டு, அனுமார்களைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் மூலமாக பல ரூபத்தில், நாம் எந்த உணர்வை ஊட்டி வைத்திருக்கிறோமோ, அந்த உணர்வையே வேறு விதத்திலே திருப்பி, அதன் மூலமாக தாங்கள் வரலாமா என்று கருதி, பல உத்தி களைப் புகுத்தி, நம்மைக் கொச்சைப்படுத்துவது, நம் முடைய இயக்கத்தைத் தாறுமாறாக விமர்சிப்பது என்பவற்றையெல்லாம் செய்து பார்த்தார்கள்.
எதை வீசினாலும், இந்த இயக்கம் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறது
பெரியார்மீது மலம் வீசப்பட்டது; சாணி வீசப் பட்டது; அழுகிய முட்டை தந்தை பெரியார் மீது வீசப்பட்டபொழுதுகூட, தன்னுடைய பிரச்சார உரையை நிறுத்தாமல், அதைத் துடைப்பதற்குக் கூட நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், சால்வையைப் போர்த்திக்கொண்டு தன்னுடைய உரையைத் தொடர்ந்தார் என்பதை எல்லோரும் அறிவீர்கள்.
அதுபோலத்தான், எதை வீசினாலும், இந்த இயக்கம் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக் கிறது என்பதற்கு, அண்மைக்கால உதாரணத்தைத் தான் தோழர் அருள்மொழி அவர்கள் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்கள்.
இந்தியாவிலே மட்டுமல்ல, மற்ற நாடுகளில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் என்று வருகின்ற நேரத்தில், இதுவரை நேரிடையாகப் பிடி கொடுக்காதவர்கள் எல்லாம், எப்படியாவது இதிலே ஒப்புக்கொண்டு, அதன்மூலமாக சமூகநீதியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று காட்டி, நமக்கும் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருவார்கள்.
‘‘இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விரோதிகள் அல்ல'' என்று சொல்கிறார்கள்!
ஒரு பழமொழி உண்டு, பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில். ‘‘பாம்பு திங்கிற ஊருக்குப் போனால், நடுக்கண்டம் நம்முடையது'' என்று சொல்லக்கூடிய புத்திசாலிகள் அவர்கள். தங்களை அப்படித்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பவர்கள்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விரோதிகள் அல்ல'' என்று சொல்கிறார்கள்.
இட ஒதுக்கீடே கூடாது - தகுதி திறமை என்று சொன்னவர்கள்; இன்றைக்குத் தங்களுக்குப் பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால், 50 சதவிகிதம் தாண்டினால்கூட பரவாயில்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் வேடிக்கையான மாற்றங்கள்தான்.
எனவே, இதற்கெல்லாம் அடித்தளம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் நண்பர்களே, திராவிடர் இயக்கம்; அந்தத் திராவிடர் இயக்கத்தினுடைய தலைமைதான்.
பனகால் அரசர் அவர்கள் மறைந்த நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள், தலைமை என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி சொல்வதைத்தான் நான் பாடமாக உங்களிடத்தில் சொல்லுகிறேன்.
‘‘இரங்கல் இலக்கியம்'' என்று சொல்லுகின்ற நேரத் தில், அது ஏதோ ஓர் உணர்ச்சிபூர்வமான பரிதாபம், அனுதாபம், துக்கம், இழப்பு என்ற அளவிலே மட்டும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், அதை வகுப்புப் பாடமாக, இயக்கப் பாடமாக, என்றென்றைக்கும், காலங்காலமாகப் பின் பற்றப்படவேண்டிய ஒரு பாடமாக இந்தப் பகுதி இருக்கின்ற காரணத்தால் நண்பர்களே, இது வழமையான உரை போல இருக்காது.
பெரும்பாலும், ஒரு வகுப்பிலே பாடங்களை எடுத்துச் சொல்வதைப்போலத்தான் இருக்கும். ஆகவே, நான் அதை முதலில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
ஏனென்றால், ஒப்பற்ற தலைமை என்று நாம் யாரைக் கருதுகிறோமோ, அவர் யாரை ஒப்பற்ற தலைமை என்று சொன்னார்கள்? இதுதான் மிக முக்கியம்.
அதற்கு என்னென்ன இலக்கணம் வகுத்தார்கள்? இது மிகவும் ஆழமாக, நம் மனதில் பதிய வேண்டிய ஒரு மிக முக்கியமான செய்தியாகும்.
தலைமைக்கு
என்ன இலக்கணம்?
அந்த அடிப்படையில், 1928 இல், அய்யா அவர்கள் எழுதினார். நம்மில் பலர் பிறக்காத காலத்தில் ‘குடிஅரசு' இதழில் எழுதுகிறார்.
பனகால் அரசர் அவர்கள் மறைந்த காலகட்டத்தில், ‘குடிஅரசு' இதழில் ஏழு பக்கம் எழுதினார் தந்தை பெரியார் அவர்கள்.
அதில் இருக்கிற செய்தியைத்தான் நான் உங் களுக்குச் சொல்கிறேன். தலைமைக்கு என்ன இலக் கணம்? அந்தத் தலைமைக்கு இலக்கணத்தை எங்கே இருந்து எடுத்துச் சொல்கிறோம் என்றால், ஓர் இரங்கல் கட்டுரையில் இருந்துதான்.
பனகால் அரசரைப்பற்றி தந்தை பெரியார் அவர் கள், எவ்வளவு ஆழமாகச் சொல்லியிருக்கிறாரோ, அந்த ஆழமான இலக்கணம், ஓர் இயக்கத்திற்கு மட்டுமல்ல, இந்த இயக்கத்தினுடைய தலைமைக்கு அடித்தளமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தலைமை, எப்படிப்பட்ட தலைமையாக இருக்கவேண்டும்; எதையும் சந்திக்கக்கூடிய துணிவைப் பெறவேண்டும்
ஆகவே, இந்தத் தலைமை என்பது, எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் சந்திக்கக் கூடிய தலைமை. எவ் வளவு இக்கட்டுகள் வந்தாலும், எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் செய்யக் கூடிய தலைமையாகும்.
‘‘ஒரு யுத்தம் முளைத்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர் பார்த்துத் திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய்விட்டார் என்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப் போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக் கள் துடித்திருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை''
என்று சொல்லி, பனகால் அரசருடைய சிறப்பைப் பற்றிச் சொல்லும்பொழுது, தலைமைத்துவத்தினுடைய சிறப்பை நீங்கள், வெறும் பனகால் அரசர் என்ற ஒரு தனி நபரை மட்டும் நினைக்கக்கூடாது. நம்முடைய தலைமையினுடைய அடித்தளம், எவ்வளவு பலமான தளம் - நூறாண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கின்ற நேரத்தில், இந்தப் பகுதியை மனதிலே நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். தலைமை, எப்படிப்பட்ட தலைமையாக இருக்கவேண்டும்; எதையும் சந்திக் கக்கூடிய துணிவைப் பெறவேண்டும் என்பதை இங்கே சொல்லுகிறார்கள்.
எனவேதான், இது ஓர் இலக்கியம். தலைமைக்கு இலக்கணம். கட்டுரையில்,
‘‘திரு. ராஜா சாஹேப் (பனகால் அரசர்) அவர் கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மை யான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும், பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் ‘‘கோவிந்தா'' போட்டுக் கொண்டு பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க் கொண்டு வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும், அழகாகவும் பேசுவதும், எழுதுவதும் சமயம், சந்தர்ப்பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும், கண்டித்தும் பேசுவதுபோல் காட்டுவதும் ஆகிய காரியங்க ளாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமையும் பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு தலைவ ரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.''
எத்தனைத் தலைவர்கள்?
எத்தனை வகையான தலைமை இருக்கிறது?
தந்தை பெரியார் அவர்களுடைய எழுத்துகள் எப்பொழுதுமே ஒரு வாக்கியம் என்பது ஒரு பத்தியாக இருக்கும். அந்த எழுத்தை ஆழமாகப் படிக்க வேண் டுமானால், ஒருமுறை அல்ல பலமுறை படிக்க வேண்டும். அதை வரி வரியாக வரி பிளக்கவேண்டும். ஒரு சட்டத்தை எடுத்து நாம் விளக்கிச் சொல்வோமே, அதுபோல, வரி வரியாகப் படிக்கவேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் இருக்கின்ற தலை வர்களை அழகாகப் படம் பிடிக்கிறார்கள் - அன்றைய காலகட்டம் மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்திலும், இதே நிலையில், தலைவர்கள் என்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால், எப்படி அந்தத் தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள்? எப்படி மக்கள் மத்தியில் அவர்கள் போய் நிற்கக் கூடியவர்கள்? என்று சொல்லுகின்ற நேரத்தில், அய்யா அவர்கள், எப்படி அதைச் சொல்லுகிறார்கள்.
எத்தனைத் தலைவர்கள்? எத்தனை வகையான தலைமை இருக்கிறது? என்று சொல்லுகின்ற நேரத் தில், அதை மீண்டும் இங்கே படிக்க வேண்டும்.
ஏனென்றால் நண்பர்களே, ஒரு புதினத்தைப் படிப் பதைப் போல அல்லது சுவையான ஒரு செய்தியை நாம் அறிந்துகொண்டு போவதைப்போல, விவாதிக் கின்ற பிரச்சினையல்ல. இது ஒரு கடினமான பாடத்தை எடுத்துக்கொண்டு, அதிலே பொருள் விளக்கம் தேடுகின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிலே இருப்பது.
‘‘நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மை யான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும், பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் ‘‘கோவிந்தா'' போட்டுக் கொண்டு பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க் கொண்டு வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும், அழ காகவும் பேசுவதும், எழுதுவதும் சமயம், சந்தர்ப் பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும், கண்டித்தும் பேசுவதுபோல் காட்டுவதும் ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமையும் பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு தலைவரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.''
அடிப்படை மாறாத ஒரு மிகப்பெரிய உண்மையாக இதைக் கொள்ளலாம்.
(தொடரும்)
No comments:
Post a Comment