சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் (ஜூன் 25) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் (ஜூன் 25)

வீ. குமரேசன்



ஆட்சிப் பொறுப்பில் எவ்வளவு காலத்திற்கு இருந்தோம் என்பதை விட ஆட்சிப் பொறுப்பில் என்ன செய்தோம் எனும் கொள்கை உறுதியோடு இந்த நாட்டின் 7ஆவது பிரதமராக சுயமரியாதை உணர்வுடன் மக்கள் சேவையில் ஈடுபட்ட சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேத சாஸ்திரம் மனுஸ்மிருதி அடிப்படையில் பெரும்பான்மை யான உழைக்கும் மக்களை, தாசியின் மக்கள்-தாசியின் பிள்ளைகள் எனப் பொருள்படும் ‘சூத்திரப்’ பட்டமளித்து இழிவுபடுத்தி வந்த நிலையிலிருந்து அவர்களுக்கு முதன்முறையாக மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு அளித்து அரசு நிர்வாக அதிகாரத்திற்கு உரியவர்களாக்கி சமூகநீதி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் வி.பி.சிங் அவர்கள்.


கொள்கை பேசுபவர்கள் பலர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் கொள்கையை நடைமுறைப்படுத்திடும் அரசியல் உறுதிப்பாடு இல்லாதவர்களாக இருக்கும் நிலை யில் சமூகநீதிக் கொள்கை உணர்வினை குறுகிய கால அளவிலேயே பெற்று, உறுதிப்பாடு கொண்டவராக விளங்கியவர் வி.பி.சிங்.


30 ஆண்டுகளுக்கு முன்பு (1990களின் தொடக்கத்தில்) வி.பி.சிங் மூட்டிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நாடு தழுவிய ‘இடஒதுக்கீடு எனும் சமூக கனலை அணைத்துவிட ஆதிக்க சக்திகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இன் றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாளர்கள் போல காட்டிக் கொண்டு, திரைமறைவில் இடஒதுக்கீட்டை குழித் தோண்டி புதைத்துவிடும் செயலை மிகவும் கமுக்கமாக செய்து வருகின்றனர். அகில இந்திய மருத்துவப் படிப்புத் தொகுப்பில், தொடர்ந்து பிற்படுத்தப்பட்டவர்கள் புறக் கணிக்கப்பட்டு வருவது தற்பொழுது பற்றி எரிகின்ற சமூகநீதிப் பிரச்சினையாக இருக்கிறது.’


ஓராண்டு கூட பிரதமர் பதவியில் நீடிக்கவிடவில்லை ஆதிக்க சக்திகள். அவருக்கு ஆதரவு அளித்து வந்த ஆதிக்க சக்திகளின் முகத்தில் கரியைப் பூசி, மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். சமூகநீதிக் கொள்கையில் அசாதாரண உறுதிப்பாடுடன் இருந்த வி.பி.சிங் அவர்களுக்கு அதுவரை அளித்துவந்த ஆதரவினை திரும்ப பெற்று, அவரை பதவி விலகச் செய்தனர். பதவி விலகுவதற்கு சற்றும் தயங்கவில்லை வி.பி.சிங். பதவியா, பிற்படுத்தப்பட்டவர் மேம்பாட்டை வலியுறுத்தும் சமூகநீதிக் கொள்கை நடைமுறையா? என வந்தபொழுது துணிச்சலாகப் பதவியை தூக்கி எறிந்தவர் வி.பி.சிங். அதுபற்றி அவரிடம் கேட்டபொழுது அவர் அளித்த பதில்தான் அவரது கொள்கை உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக, அவரைப் பற்றி ஒடுக்கப்பட்ட மக்களே புரிந்து கொள்ள வைத்தது. 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே ஆட்சிபொறுப்பில் இருந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலை அவர் செய்தார்.


பதவி விலகிய வி.பி.சிங் கூறிய விளக்கம்:


“ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால் அதற் குரிய விலையை அளித்திட வேண்டும். இதுதான் நடை முறை. பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பதற்கான விலைதான் நாட்டின் பிரதமர் பதவி. விலையைக் கொடுத்து, பொருளை வாங்கி விட்டோம்.”


சமூகநீதிக் கொள்கையில் எப்படிப்பட்ட உறுதிப்


பாடு கொண்டிருந்தார் வி.பி.சிங் என்பதை நினைக்கும் பொழுது அம் மாமனிதர் எப்படி மகத்தானவர் என்பது விளங்கும்.


பிரதமர் பதவியில் இருந்து விலகிய வி.பி.சிங் அவர் களை திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் டெல்லியில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த பொழுது வி.பி.சிங் கேட்டார்.


‘பிரதமர் பதவியில் அமரும் பொழுது வாழ்த்து தெரிவிப்பது வாடிக்கை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகிய இந்நிலையில் வாழ்த்து தெரிவிக்கின்றீர்களே?’ என்று.


அதற்கு ஆசிரியர் கூறியது:


“பிரதமர் பதவியில் அரசியல் ஆதரவு பெற்ற யாரும் அமரலாம். நீங்கள் பிரதமர் பதவியிலிருந்து இறங்குவதற்கு காரணம் நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டல் பரிந்து ரையை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்ததுதான். சமூகநீதிக்கான உங்களது அந்த பங்களிப்பிற்கு வாழ்த்து, நன்றி தெரிவிக்கிறோம்.” என்றாராம்.


பதவி விலகிய வி.பி.சிங் அவர்களை அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் கள் தமிழகத்திற்கு வரவழைத்து மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டங்கள் நடத்தி அவருக்கு பாராட்டு, நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியைப் பார்த்த வி.பி.சிங். சமூகநீதி மண்ணின் மாண்பினை நேரடியாக உணர்ந்தார். உணர்ந்து அவர் கூறியதுதான் நம்மை மிகவும் நெகிழ வைத்தது.


“எனக்கு மறுபிறவி என ஒன்று இருக்குமானால், நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும், என்று பொது வெளியில் அறிவித்தவர் வி.பி.சிங். அவர் பிறந்தது அரச குடும்பம், அவர் கடந்து வந்த அரசியல் பாதை சமூகநீதித் தடம் பற்றி அறிந்திட வாய்ப்பு இல்லாதது. பின்னாளில்தான் சமூகநீதி பற்றிய புரிதல் அவருக்கு ஏற்பட்டது” என அவர் கூறுகிறார்.


“நான் நல்ல கொள்கைகளை பல தலைவர்கள், முன்னோடிகளிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் சமூகநீதிக் கொள்கை, சமூகநீதி உணர்வினை


கி. வீரமணி அவர்களிடமிருந்துதான் பெற்றேன்” என மிகவும் பெருமையாகக் கூறியவர் வி.பி.சிங்.


தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை உணர்வு மிக்கவராக இருந்தவர் மட்டுமல்ல வி.பி.சிங். சுயமரியா தைக்கு அவர் தந்த விளக்கம் அருமையாக, எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இருந்தது.


“ஒரு கம்யூட்டர் இருக்கிறது; அதன் மீது எச்சில் துப்பினால் அது எதிர்வினை காட்டாது. ஆனால் ஒரு மனிதன் மீது அவனை இழிவுபடுத்தும் வகையில் எச்சில் துப்பினால் அவனுக்கு ஆத்திரம் வர வேண்டும்; எச்சில் துப்பியவனை எதிர்க்க வேண்டும். அதுதான் சுயமரி யாதை.”


சுயமரியாதை உணர்வுக்கு வி.பி.சிங் அவர்கள் அளித்த விளக்கம் காலக் கல்வெட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உணர் வினை ஊட்டிக் கொண்டே இருக்கும்.


வி.பி.சிங் ஒரு நல்ல கவிஞர். ஆம் இந்தியில் அவர் எழுதிய கவிதைகளை தமிழாக்கம் செய்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறது. இன்று பிரதமர் பதவியை அலங்கரிப் பவர்கள் அறிவியல் விளக்கமாக புராணங்களை எடுத் துக்காட்டி பின்னோக்கி மக்களை இழுத்துச்செல்லும் நிலையில் அறிவியல் பற்றி பிரதமர் பதவியில் இருக்கும் பொழுது வி.பி.சிங் கொடுத்த விளக்கம் மனிதனுக்கு பகுத்தறிவைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் செயல் பட்டு மானுடத்தை முன்னேற்றும் முனைப்பு கொண்டது.


"Science is the unifier of our rational thinking.  It could see order in chaos. Man knows neither his origin nor his future.  Science teaches man not to surrender to the unknown but to stand up and confront the realities."


மனிதரது பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிவியல் ஒன்றிணைக்க வல்லது. ஒழுங்கான நிலைமையையும் கலவரச் சூழலையும் எதிர்நோக்க வல்லது. மனிதனுக்கு முழுமையாகத் தனது தொடக்கமும் தெரியாது; வருங்கால மும் தெரியாது அறியமுடியாதவை மீது பயம் கொண்டு (பக்தி செலுத்தி) அவைகளிடம் சரணாகதி அடைய அறிவியல் அனுமதிக்காது. அந்தச் சூழலை எழுந்து நின்று எதிர்த்து நடைமுறை உண்மையினை உணர்த்திட வல்ல ஆற்றல் அறிவியலுக்கு உண்டு.”


எளிமைப்படுத்திச் சொல்லும் ஆற்றல் வி.பி.சிங் அவர் களுக்கு நிறையவே உண்டு. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அவர்தரும் விளக்கம் மனிதரை அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்ந்திடத் தூண்டும் வகையில் இருக்கிறது.


"Scientific and technological progress made the extension of the physical power of humanity.  The mike is an extension of human tongue, the radio an extension of the ear and the missiles, the extension of the hand."


“உலகில் ஏற்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது மனித அவயவங்களின் ஆற்றல் நீட்சி வெளிப்பாடே. ஒலி பெருக்கி என்பது மனித நாக்கின் நீட்சியே; வானொலி என்பது மனித செவியின் நீட்சியே; ஏவுகணை என்பது மனிதக் கைகளின் நீட்சியே.”


வெறும் விளம்பரத்திற்காக, அரசியல் பகட்டிற்காக ஆட்சியில் அமர்ந்தவர் இல்லை வி.பி.சிங். சுயமரியாதை உணர்வு கொண்டு, சமூகநீதி நடைமுறைக்கு ஆக்கம் காட்டியவர். புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்தவர். மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து அகற்றி அறிவியல் அடிப்படையில் தன்னம்பிக்கை கொண்டு முயற்சியின் மூலம் முன்னேற்றம் காண ஊக்கம் ஊட்டியவர். இந்த உணர்வுகள் இன்றைய தலைமுறையினரிடம் வேரூன்ற வேண்டும். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளில் சமூக நீதியினை வென்றெடுக்கும் உறுதிப்பாடும், அவர் காட்டிய போர்க்குணமும் நம்மிடம் பெருக வேண் டும். அதுதான் வி.பி.சிங் அவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை. வி.பி.சிங் பிறந்தநாளில் அத்தகைய உறுதியைப் பெறுவோம்!


வாழ்க வி.பி.சிங்! வளர்க சமூகநீதி நடைமுறை!


No comments:

Post a Comment