கேள்வி: எங்காவது தி.க.வினர் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?
பதில்: கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஏழை - எளிய மக்களுக்கு தனது கஜானாவை திறக்க மன மில்லையே. வாங்கியே பழக்கம் கொடுத்து பழக்கமல்ல.
- 'விஜயபாரதம்' ஆர்.எஸ்.எஸ். இதழ் 22.5.2020
ஊரில் எங்கு பிணம் விழும், திவசம், திதி என்று அலையும் கூட்டமல்லவா! போகிற வழியில் ஒரு தர்ப்பைப் புல்லைப் பிடுங்கிக் கொண்டு போய் ('வல்லவனுக்கு' புல்லும் ஆயுதம் என்பது இதுதான்!) ஏமாந்த பார்ப்பனரல்லாத மக்களின் வீட்டிலிருந்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு வெளியேறும் உஞ்சி விருத்திக் கூட்டத்தின் புத்தி போகுமா?
பேரிடர் நிகழும் போதெல்லாம் பெரியார் அறக் கட்டளையின் சார்பில் சக்திக்கேற்ப நிதியை வழங்கி தான் வந்திருக்கிறது. இப்பொழுதும் வழங்கியும் உள்ளது.
இயக்கத்தின் சார்பில் ரூ.5 லட்சம் நிதி தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கை படிக்காதவர்கள் எல்லாம் பத்திரிக்கை நடத்துவது பரிதாபமே! முதலில் பத்திரிக்கை படியுங்கள் தோழரே!
பல ஊர்களிலும் கழகத்தின் சார்பில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருள்களை அளித்துக் கொண்டுதான் வருகிறார்கள் - விளம்பர வெளிச்சமின்றி - ஆர்ப்பாட்டம் இன்றி!
கஜா புயலும் - வர்தா புயலும் வெள்ளமும் சூழ்ந்து மக்களைப் பேரிழப்புக்கு ஆளாக்கிய போதுகூட போர்க் காலப் பணி போல ஓடோடிச் சென்று உற்றுழி உதவிய கரங்களுக்குச் சொந்தமானது கருஞ்சட்டைப் பட்டாளம்!
கரோனாவால் கடும் பாதிப்புக்கு ஆளான நிலையில் இந்து அறநிலையத் துறையின் சார்பில் வெறும் 10 கோடி ரூபாய் அளிப்பதைக் கூடப் பொறுக்காமல் உயர்நீதிமன்றம் சென்று கதவைத் திட்டும் 'காரியக்காரர்கள்' கழகத்தைப் பற்றிப் பேசலாமா! இந்த இலட்சணத்தில் கருணையே வடிவமானவன் கடவுள் என்று பேசும் கித்தாப்பு வேறு!
எட்டு டன் தங்கமும், 14 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையுடனும் நிரம்பி வழியும் கல் முதலாளி திருப்பதி ஏழுமலையானுக்கு ஊரடங்கு காரணமாக கல்லாப் பெட்டி நிரம்பவில்லையாம் - பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடப் பணம் இல்லையாம் ஹி... ஹி... ஹி.....
அரசாங்கமாவது ஏதோ பார்த்து உதவி செய்தால் கோடிப் புண்ணியமாக இருக்கும் என்று இராப் பிச்சைக்காரன் போல மூக்கால் அழும் அழுகிப் போன புத்திக்குச் சொந்தக்காரர்கள், முதலில் கல் முதலாளிகளின் கஜானாவைத் திறந்தாலே போதும்.
ஏழைப் பாழைகளின் பசியை விரட்டி விடலாம். தூங்கி வழியும் வைப்புத் தொகையால், தங்கக் கட்டிகளால் என்ன பயன்?
பொதுப் பணியைத் தொண்டறமாக மேற்கொண்டு வரும் திராவிடர் கழகத்தைப் பற்றி எழுதிடத் தகுதி யில்லை - இல்லவே இல்லை விஜயபாரதங்களுக்கு.
No comments:
Post a Comment