விடுதலையின் வீர வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 31, 2020

விடுதலையின் வீர வரலாறு

பேராசிரியர் நம்.சீனிவாசன்



மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பாக இணைய வழிக் காணொலி கருத்தரங்கம் 25.05.2020 திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம், தொழில் நுட்ப ஏற்பாடுகளை பீபிகுளம் சுரேசு அவர்களும் செய்திருந்தனர்.


நிகழ்வில் 'விடுதலையின் வீரவரலாறு' என்னும் தலைப் பில் பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் உரையாற்றினார்.  நிகழ்வின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த  திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் அவர்கள் உரையாற் றினார். அவர் தனது உரையில் விடுதலை வாசகர் விளைச்சல் பெருவிழாவிற்கான கூட்டம்  வரும் ஜூன் 1ஆம் தேதி விடுதலையின் பிறந்த நாளில் தொடங்கி தொடந்து கொண் டாட  வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் விடு தலையைப் பரப்ப சங்கிலித்தொடர் திட்டத்தினை அறிவித் திருக்கின்றார்கள்.


ஒவ்வொரு கழகத்தோழரும் தமது நண்பர்கள், உற்றார் உறவினர்கள், அறிமுகமானவர்கள் என ஒரு பட்டியலைத் தயார் செய்து தங்களது கைபேசியின் மூலமாக வாட்ஸ்அப், இணையதளம் மூலமாக அனுப்பி, விடுதலை வாசகர் வட்டத்தின் எண்ணிக்கையை விரிவாக்க வேண்டும், இது எனது தொண்டு என்று கருதி பல இலட்சம் வாசகர்களிடம் இதனைப் பரப்பிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும், விடுதலை வாசகர் விளைச்சல் பெருவிழாவை இவ்வாரத்தில்  பெருவிழாவாக ஆக்குங்கள். ஓயாதீர்கள் என்று அய்யா தமிழர் தலைவர் அவர்கள் சொன்ன கட்டளையின் அடிப்படையில்தான் இந்தக் கூட்டம் எங்கள் சிந்தனையில் உருவாகியது.


விடுதலை கடந்து வந்த வரலாற்றுப்பாதையில் கொஞ்சம் நடந்து இளைப்பாறவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. நாம் நடந்து செல்லும்போது துணைக்கு ஒருவர் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று நாம் நினைத்தபோது நமது நினைவுகளில் வந்தவர் பேரா.நம்.சீனிவாசன் அவர்கள். புள்ளிவிவரங்களோடு விடுதலை பற்றி அவர் சொல்லச்சொல்ல நாம் அவரோடு இணைந்து நடை போடலாம் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கூட் டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன். என்று உரையாற்றினார்.


தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேரு,நிகழ்வினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில்:


அய்யா ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுகின்றார் விடு தலையைப் பரப்ப...


காணொலிக். கூட்டங்களை இப்படி நடத்துங்கள் என்று கூறி அய்யா ஆசிரியர் அவர்கள் கட்டளையிட்டபின்பு தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். எப்படி இந்த இணைய வழி காணொலிக் கூட்டங்கள் நமக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறதோ அதனைப்போல இந்த வாட்சப் மூலமாக உங்களது நண்பர்களுக்கு உறவினர்க ளுக்கு விடுதலையை பி.டி.எப். பைல்களாக அனுப்பிப் பரப் புங்கள் என்று நமக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத் திருக்கும் பணி மிக அருமையான பணியாக இருக்கிறது.


இன்றைக்கு கூட விடுதலையின் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் பல்வேறு ஊர்களைச்சார்ந்த 4 தோழர்கள் ,இந்த விடுதலையைப் பரப்பும் பணியை எவ்வாறு அமுல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று எழுதியிருக்கிறார்கள். மதுரை புறநகர் மாவட்டத்தின் செயலாளர் த.ம.எரிமலை கூட தனது கருத்துக்களை எழுதியிருக்கிறார். ஒரு மிகப்பெரிய வாய்ப் பாக நமது பொதுச்செயலாளர் அய்யா தஞ்சை ஜெயக்குமார் அவர்கள்,  விடுதலையை எப்படி ஒரே நேரத்தில் அனுப்ப வது என்பதனை  நேற்று எடுத்துரைத்தார்கள். உடனே நான் நேற்று ஒரு 95 பேருக்கு அனுப்பினேன். படித்த பலர் நேர் மறையாக (பாசிட்டிவாக) பதில் அனுப்பியிருக்கிறார்கள். எப்படி சந்தா கட்டுவது என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ஒரு நண்பரிடம் தொடர்பு இல்லை. விடுதலையை அனுப்பியவுடன் செல்பேசியில் அழைத்து நீண்ட நேரம் பேசினார்.


இந்தப் பரப்புரை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக் கிறது. விடுதலை சந்தா என்றால் வீடு வீடாக சென்று நேரில் கேட்பது என்பதுதான் நமது எண்ணமாக இருந்தது. ஆனால் அய்யா ஆசிரியர் அவர்கள் முதலில் விடுதலை பி.டி.எப்.-பை தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள். பின்பு அதில் இருந்து யார் யார் சந்தா என்று கேட்கிறார்களோ அவர்களுக்கு சந்தாவின் மூலமாக தொடர்ந்து அனுப்புவோம் என்னும் இந்த அணுகுமுறை புதியது. இந்த உத்தி புதியது.நல்ல அணுகுமுறையை அய்யா ஆசிரியர் அவர்கள் காட்டியிருக்கின்றார்.


தொடர்ந்து  சிறப்புப் பேச்சாளர் பேரா.நம்.சீனிவாசன் அவர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விடுதலை என்பது நமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. நமக்கு உணவு போன்றது. அய்யா ஆசிரியர் அவர்களைப் பொறுத்த அளவில் விடுதலைதான் எல்லாம். விடுதலைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் நாம் அறிவோம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அடிப்படை பத்திரிக்கைதான். பொதுவுடமைத் தத்துவத்தை தொடர்ச்சியாக பேசி இயங் கும் தோழர்களால் கூட இன்றைக்கு அவர்களது பத்திரிக் கையை, கரோனா காலத்தில் தொடர்ச்சியாக கொண்டு வர இயலவில்லை. திணறுவதைப் பார்க்கின்றோம்.


ஆனால் தந்தை பெரியாரின் தத்துவப் போர்வாளான விடுதலை 85 ஆண்டுகளைத் தொடர்ந்து நடந்து இப்போது 86ஆம் ஆண்டு பிறந்த நாள் காணப்போகிறது. விடுதலை தொடர்ந்து நடை போடுகிறது, எழுச்சியோடு நடை போடு கிறது, நம்பிக்கையோடு நடை போடுகிறது.அந்த வகையில் நமது அய்யா ஆசிரியர் அவர்கள் அதனைப் பரப்ப வழி காட்டுகிறார்கள். விடுதலையை எத்தனை பேருக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் இந்த விடுதலை பி.டி.எப் பைலை அனுப்ப வேண்டும்.


அதற்கென தோழர்கள் நேரம் தினமும் ஒதுக்கவேண்டும். நாம் அனுப்புவதோடு நாம் அனுப்பும் நண்பர்கள், உற வினர்களிடமும் நீங்களும் விடுதலையை மற்றவர்களுக்கு அனுப்புங்கள் என்று இருபாலரிடமும் வேண்டுகோள் வைக்கவேண்டும். அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்ன தைப்போல பல இலட்சக்கணக்கான வாசகர்களிடம் விடு தலை சென்றடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விடுதலை யைப் பரப்புவோம். இந்த விடுதலையின் வீரவரலாறு என்னும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் பெருமிதமும் மகிழ்ச்சியும், கொள்கிறேன் என்று குறிப்பிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து 'விடுதலையின் வீரவரலாறு' என்னும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்..


 அனைவருக்கும் வணக்கம்.இன்று காணொலி மூலமாக ஓர் அற்புதமான தலைப்பு. விடுதலையின் வீர வரலாறு என்னும் தலைப்பு.விடுதலையின் பிறந்த நாள் ஜூன் மாதம் 1ஆம் தேதி வருகின்றது. அதனை ஒட்டி விடுதலையின் வீரவரலாறு என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துமாறு திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் அண் ணன் செல்வம் சொன்னார்கள். ஜனநாயகத்திற்கு 4 தூண்கள் உண்டு. 1.சட்டமன்றம்.2. நீதிமன்றம். 3.நிர்வாகம் 4.ஊடகம். இந்த 4 தூண்களின் மேல்தான் ஜனநாயகம் என்னும் கட்டடம் நிற்கிறது.இதனுடைய பணி மகத்தான பணி. சிந்தனையை செதுக்கும் மகத்தான உலகத்தை பார்ப்பதற்கு நாம் உதவும் ஜன்னல் பத்திரிக்கை எனப் பாராட்டுவார்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பத்திரிக்கையை பற்றிச் சொல்கின்றபோது "காரிருள் அகத்தில்..." என்று பத்திரிக்கையை புரட்சிக்கவிஞர் பாரட்டுவார்.


தலைசிறந்த சிந்தனையாளர்கள், தலைவர்கள் பத்திரிக் கையை நடத்துவதை தங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய மான கடமையாகக் கருதியிருக்கிறார்கள். எனக்கு முன்னால் டாக்டர் நேரு பேசும்போது ஒவ்வொரு இயக்கத்திற்கும் பத்திரிக்கை மிகவும் இன்றிமையாதது, தலையாயது எனக் குறிப்பிட்டார்கள்.


தலைவர்களும் பத்திரிக்கைகளும்...


தலைவர்கள்,சிந்தனையாளர்கள் உலகம் முழுவதும் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள். தந்தை பெரியார் பத்தி ரிக்கை நடத்தியது போல உலகம் முழுவதும் தலைவர்கள் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள். காரல் மார்க்ஸ் நைன் லாந்து கெஸட் என்று ஒரு பத்திரிக்கையை நடத்தினார். மாஜினி-யங்க் இத்தாலி என்று ஒரு பத்திரிக்கையை நடத்தினார். லெனின் இஸ்க்ரா என்னும் ஒரு பத்திரிக்கையை நடத்தி புரட்சிக்கு தூண்டினார். அண்ணல் காந்தியடிகள் இங்கிலாந்து சென்றவரை பத்திரிக்கைகளைப் பார்த்த தில்லை. இலண்டன் சென்றபிறகுதான் வெஜிடேரியன் என்ற பத்திரிக்கையில் 3 ஆண்டுகளில் 6 கட்டுரைகள் எழுதினார்.


1893இல் தென்னாப்பிரிக்கா சென்றபிறகு அங்கே அவர் நடத்திய இந்தியன் ஒப்பினியன் என்னும் பத்திரிக்கையின் முதுகெலும்பாக இருந்தார்.1915-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு 1919ஆம் ஆண்டு நவஜீவன், யங் இந்தியா என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். 1932இல் அந்த பத்திரிக்கை நின்றபிறகு 1933இல் ஹரிசன் என்ற பத்திரிக்கையை நடத் தினார். அன்னி பெசண்ட் நடத்திய பத்திரிக்கையின் பெயர் லீப், நியூ இந்தியா. பாபா சாகிப் அம்பேத்கர் மூக் நாயக் என்ற பத்திரிக்கையைத் தொடங்கி சிறிது காலம் நடத்தி னார்கள். அதற்குப்பிறகு பகிஷ்கருக் பாரத் என்னும் பத்திரிக் கையை நடத்தினார்கள். அயோத்திதாச பண்டிதர் நடத்திய பத்திரிக்கையின் பெயர் நம்முடைய தோழர்களுக்குத் தெரியும், ஒரு பைசா தமிழன். அதுபோல இரட்டை மலை சீனிவாசன் ஒரு சாதியின் பெயரால் ஒரு பத்திரிக்கையை நடத்தினார்கள். அண்ணா திராவிட நாடு, காஞ்சி என்னும் பத்திரிக்கைகள் நடத்தினார்கள்.திரு.வி.க நடத்திய பத்திரிக்கையின் பெயர் நவசக்தி.வரதராஜீ நாயுடு நடத்திய பத்திரிக்கையின் பெயர் தமிழ்நாடு, பாலகங்காதர திலகர் கேசரி,மராட்டா என்னும் பத்திரிக்கைகளை நடத்தினார். இராஜகோபாலாச்சாரியார் ஸ்வராஜ்யா என்னும் பத்திரிக் கையை நடத்தினார்.மா.சிங்காரவேலர்  தொழிலாளன் என் னும் பத்திரிக்கையை நடத்தினார். ப.ஜீவானந்தம் ஜனசக்தி நடத்தினார். நண்பர்களே, 1942 முதல் 1962 வரை திராவிட இயக்கம் நடத்திய பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 265.ஆங்கில இதழ்களும் நடத்தப்பட்டது. அண்ணா Homeland என்னும் பத்திரிக்கை நடத்தினார். பி.பாலசுப்பிர மணியம் - sunday observer என்னும் பத்திரிக்கையை நடத் தியிருக்கிறார். டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி முதலியார் Liberator என்னும் பத்திரிக்கையை நடத்தினார். இவையெல்லாம் சிந்தனையாளர்கள், தலைவர்கள் பத்திரிக்கையை நடத்து வதை தங்கள் கடமையாகக் கருதினார்கள் என்பதனை நமக்கு உணர்த்தும்.


தமிழ் நாடும் பத்திரிக்கைகளின் தோற்றமும்...


தமிழில் நாளிதழ்கள் என்று எடுத்துக்கொண்டால்  தின மணி பத்திரிக்கை 1934இல் வெளிவருகிறது. விடுதலை பத்திரிக்கை 1935இல் வெளிவருகிறது. விடுதலை பத்திரிக்கை 1935இல் வெளிவந்தபொழுது அது நாளிதழ் கிடையாது. வாரம் இருமுறை வெளிவந்த பத்திரிக்கை. அதற்குப்பிறகு தினத்தந்தி 1942இல் வெளிவருகிறது. தினமலர் 1951இல் வெளிவருகிறது. தினகரன் 1977இல் வெளிவந்திருக்கும் என்று கருதுகின்றேன். தீக்கதிர் 1963இல் வெளிவருகிறது. தீக்கதிர் என்று சொன்னால், லெனின் அவர்கள் வைத்திருந்த பத்திரிக்கையின் பொருள் தீப்பொறி. அதனால் மார்க்சிய சிந்தனையாளர்கள் தங்கள் பத்திரிக்கைக்கு தீக்கதிர் என்று பெயர் வைத்தார்கள். இந்து தமிழ் பத்திரிக்கை 2013இல் வெளிவந்தது. கட்சி பத்திரிக்கை என்று சொன்னால் விடு தலை 1935இல் வெளிவந்ததுபோல முரசொலி பத்திரிக்கை 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு வருடம் வந்தது. பின்பு நின்று ம்றுபடியும் 1946,1947,1948-களில் மாதப் பத்தி ரிக்கையாக வந்தது.பின்பு வார இதழாக வந்தது. பின்பு 1960-லிருந்து நாளிதழாக வருகிறது. சங்கொலி பத்திரிக்கை 1996 பிப்ரவரி மாதத்திலிருந்து வருகிறது.இப்படி தமிழ் நாளிதழ் களை நம்மால் பார்க்க முடிகிறது.


பத்திரிக்கையாளர் தந்தை பெரியார்


தந்தை பெரியாரைப் பொறுத்த அளவில் ஒரு சிந்தனை யாளர், களப்போராளி என்று சொல்வதைப் போல பெரியார் ஒரு பத்திரிக்கையாளர்.தந்தை பெரியார் அவர்களுக்கு பிரச்சாரம் முக்கியம்.தந்தை பெரியார் சொல்வார், நாதஸ்வர மாக இருந்தால் ஊதியாக வேண்டும், தவிலாக இருந்தால் அடிபட்டாக வேண்டும், எனக்கு குரல், தொண்டை  இருக்கும் வரை நான் பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பேன் என்றவர் பெரியார். குடிஅரசு பத்திரிக்கையை ஆரம்பிக்குபோது யாரும் ஆதரவு கொடுக்காவிட்டால் பரவாயில்லை, "நானே எழுதி, நானே அச்சிட்டு, நானே படிப்பேன்" என்று குறிப்பிடுகின்றார். அவ்வளவு ஈடுபாடு பத்திரிக்கை நடத்துவதில் அவருக்கு. 1922ஆம் ஆண்டு கோவை சிறைச்சாலையில் இருக்கும்போதே ஒரு பத்திரிக் கையை தொடங்கவேண்டும் என்று பெரியார் முடிவு செய்கின்றார்.


ஆனால் குடிஅரசு இதழைத் தொடங்குவதற்கு 1923-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்திடம் பதிவு செய்கின்றார்.குடி அரசின் முதல் இதழ் 1925-ஆம் ஆண்டு மேமாதம் 2ஆம் தேதி வெளிவருகிறது.1933இல் குடி அரசு இதழ் தடை செய்யப்படுகிறது.பின்பு 'புரட்சி' என்னும் இதழைப் பெரியார் தொடங்குகிறார். தொடர்ச்சியாக புரட்சி இதழின் மீது அரசாங்கம் வழக்குகள் பதிவு செய்கிறது. பின்பு புரட்சியும் பெரியாரால் நிறுத்தப்படுகிறது.பகுத்தறிவு இத ழைத் தொடங்குகிறார்.


விடுதலை பத்திரிக்கையை தொடங்கியது நீதிக்கட்சி. குடிஅரசு பத்திரிக்கை 637 இதழ்கள் நமக்குக் கிடைக்கின்றன. புரட்சி பத்திரிக்கை 30 பத்திரிக்கை கிடைக்கிறது. பகுத்தறிவு நாளிதழ் கிடைக்கவில்லை, வார இதழ் 20, மாத இதழ் 44 கிடைத்திருக்கிறது..85 ஆண்டுகளில் நமக்கு கிடைத்திருக்கும் விடுதலை பத்திரிக்கைகளின் எண்ணிக்கை 29763. .நாம் 20.9.1943 தொடங்கி இரண்டு ஆண்டுகள், இரண்டாம் உலக யுத்தத்தில்  யுத்தப் பிரச்சாரத்திற்காக விடுதலையை  வழங்கியிருக்கிறோம்.


விடுதலையின் சாதனைகள் என்ன என்று சொன்னால் இராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சராக வருகின்றார். 1937-ஆம் ஆண்டு ஜீலை மாதம் பதவி ஏற்றவர் 1939-ஆம் ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்கிறார். 28 மாதங் கள் ஆட்சி செய்கிறார்.1952-ல் மீண்டும் முதலமைச்சராகிறார். 1954-ல் பதவி விலகுகின்றார். 24 மாதங்கள்.மொத்தம் 4 ஆண்டுகள் 4 மாதங்கள் தமிழகத்தை இராஜாஜி ஆட்சி செய்கிறார். அப்போது அவரை எதிர்த்து தந்தை பெரியார் போரிடுவதற்கு ஆயுதமாகத் திகழ்ந்தது விடுதலை நாளே டாகும். இந்தி எதிர்ப்பின்போது தமிழர் படை என்று ஒரு படையை தந்தை பெரியார் தொடங்கி அந்தப்படை திருச்சியிலிருந்து சென்னைவரைக்கும் செல்கிறது. 42 நாட்கள், 234 சிற்றூர்கள், 60 நகரங்கள் வழியாக 87 பொதுக்கூட்டங்களை நடத்தியது. அந்தப்படை திருச்சியில் தொடங்கி சென்னை வந்து சேர்வதற்குள், 1939இல்  இராசகோபாலாச்சாரியார் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார். குலக் கல் விக்கு எதிராக ஒரு படை நாகப்பட்டினத்திலிருந்து 1954இல்  தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு சென்னை நோக்கி புறப்பட்டு செல்கிறது.அந்தப் படை சென்னை சென்று சேர்வதற்குள் அப்போதும் 1954-லிலும் இராசாகோபாலாச் சாரியார் பதவியைத் துறக்கிறார் என்று சொன்னால் இது விடுதலையின் வலிமையைக் காட்டுகிறது.


விடுதலை ஒரு போர்க்கருவி..


தந்தை பெரியார் விடுதலையை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தினார். 1950-லிருந்து 1960வரை திராவிடர் கழகத்தின் சார்பாக ஏராளமான போராட்டங்கள். வடவர் சுரண்டல் தடுப்பு அறப்போர் மறியல் போராட்டம், வகுப்புரி மைப் போராட்டம், விநாயகர் உருவ பொம்மை உடைப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டம் எதிர்ப்புப் போராட்டம், 1952,1953,1954,1955-களில்  இந்தி எதிர்ப்புப் போராட்டம் தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு, இராமர் பட எரிப்பு அறிவிப்பு, ஹோட்டல்களில் பிராமணாள் என்னும் பெயர் அழிப்புப் போராட்டம், தமிழ் நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டம், இராமாயண எரிப்புப் போராட்டம், உயிர்ப்பலி தடுப்புப் போராட்டம் என ஏராளமான போராட்டங்களைத் தந்தை பெரியார் நடத்தினார் என்று சொன்னால்,இந்தப் போராட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது விடுதலை ஏடு.


விடுதலை..சில விவரங்கள்...


நண்பர்களே, விடுதலைக்கு யாரெல்லாம் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள், பொறுப்பு ஆசிரியராக இருந்திருக் கிறார்கள் என்று பார்த்தால் டி.ஏ.நாதன் என்பவர்தான் விடுதலையின் முதல் ஆசிரியர்.அவருக்குப் பிறகு பண்டிதர் முத்துசாமி பிள்ளை, நா.பொன்னம்பலனார், என்.கரிவரத சாமி, அதற்குப் பிறகு கே.ஏ. மணி என்ற பெயரில் மணியம் மையார் இருந்தார்கள், திருமணத்திற்குப் பிறகு ஈ.வெ.ரா.மணியம்மை என்னும் பெயரிலேயே ஆசிரியராக இருந் திருக்கிறார். அதற்குப்பிறகு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்.விடுதலைக்கு பொறுப்பு ஆசிரியர் என்று சொன்னால் 4 பேர் .அறிஞர் அண்ணா அவர்கள் 1939 தொடங்கி 1941 வரைக்கும் பொறுப்பு ஆசிரிய ராக இருந்திருக்கிறார். சாமி.சிதம்பரனார் இருந்திருக்கிறார். குத்தூசி குருசாமி இருந்திருக்கிறார்.தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களும் பொறுப்பு ஆசிரியராகவும் இருந்திருக் கிறார்கள்.


விடுதலை எந்த எந்த முகவரியில் இருந்து வந்திருக்கிறது என்று பார்க்கலாம். 1935-ல் வந்தபோது 14,மவுண்ட் ரோடு, சென்னை என்ற முகவரி.அதுதான் நீதிக்கட்சியின் தலைமை யிடம். இன்றைக்கு காஸ்மோ பாலிட்டன் இருக்கிறது. 1937இல் தந்தை பெரியார் கைக்கு விடுதலை வந்த பிறகு ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. அதற்குப்பிறகு 43இல் தொடங்கி சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருஷ்ண பிள்ளை தெருவிலிருந்து வெளி வந்தது. அதற்குப்பிறகு 1965ஆம் ஆண்டு அக்டோவர் 31ஆம் தேதி பெரியார் திடலில் நமது விடுதலைப் பணி மனையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள். அதற்குப்பின்பு 1965 டிசம்பர் 15-ந்தேதியிலிருந்து , 50, ஈ.வெ.கி. சம்பத் சாலையிலிருந்து விடுதலை வருகின்றது. எனவே விடுதலை பத்திரிக்கை 4 முகவரியிலிருந்து வெளி வந்திருக்கிறது.


நண்பர்களே, முதலில் விடுதலையை  அச்சு இயந்திரத் தில் அச்சுகோத்து அச்சடித்தார்கள். 1969இல்  விக்டோரியா 820 என்னும் இயந்திரம் வாங்கப்பட்டது.6.6.90-ல்  'அக்கியமா’ என்னும் அச்சு இயந்திரம் வாங்கப்பட்டது.28.12.2000-ல் பி.ஓ 24 பாலிகிராப் பிளாண்டினா  என்னும் இயந்திரம் ஜெர்மனியிலிருந்து வாங்கப்பட்டது. அதனை .ஜி.கே.மூப்பனார் அவர் கள் தொடங்கி வைத்தார்கள். அதற்குப்பின்பு 8.3.2003இல் வெப் ஆப்செட்  நேப்(NAPH)30 என்னும் அச்சு இயந்திரம் வாங்கப்பட்டது..அதனை சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நமது விடுதலை கடந்த 17 ஆண்டுகாலமாக இந்த எந்திரத்தின் மூலமாகத்தான் அச்சடித்து வெளியில் வருகின்றது. 8 பக்கத்திற்கு பேப்பரை உள்ளே கொடுத்தால், அது அச்சடித்து விடுதலையாக  நமக்கு கொடுத்துவிடும். விடுதலையின் பக்கங்கள்.. இன் றைக்கு 8 பக்கங்கள். 1935-தொடங்கி 2003 வரை விடுதலை 4 பக்கங்கள் மட்டுமே வந்தது. 2003இல் இருந்து 2011 வரை 6 பக்கங்கள் வந்தது.2011இல் தொடங்கி தற்போது 2020 வரைக்கும் 8 பக்கங்களில் வருகிறது.


(தொடரும்)


(விடுதலையும் தமிழர் தலைவரும், விடுதலை


சந்தித்த வழக்குகள், விடுதலையின் சாதனைகள்....நாளை வெளிவரும்)


No comments:

Post a Comment