எச்சரிக்கை மதவாரியாக மக்களைப் பிரிக்கும் வாக்கு வங்கி அரசியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 29, 2020

எச்சரிக்கை மதவாரியாக மக்களைப் பிரிக்கும் வாக்கு வங்கி அரசியல்

டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தொடங்கிய கலவரம் அடுத்தடுத்து, 4 நாட்களாக நீடித்தது. இதில், 3ஆவது நாளான செவ்வாய்க் கிழமை மட்டும் டில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 7,500 அழைப்புகள் உதவி கேட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த தகவலில், 2ஆவது நாளான திங்கட்கிழமை மட்டும் காவல்துறைக்கு உதவிகள் கோரி 3,500 அழைப்புகள் வந்ததாகவும், ஞாயிற்றுக் கிழமையன்று 700 அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து, புதன்கிழமையன்றும் காவல்துறை கட்டுப் பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் உதவிகோரி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


டில்லியின் வடகிழக்குப் பகுதியில் குடியரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர் களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் அடுத்தடுத்து வளர்ந்து, பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் வன் முறையாளர்களால் வாகனங்கள், கடைகள், கட்டடங்கள் தீ வைத்துச் சேதப்படுத்தப் பட்டன.


இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யாத காரணத்தினாலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்காததாலும் டில்லி காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


டில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்திலும், அடுத்தடுத்த நாட்களில் நடந்த போராட்டத்தின் போதும், போதுமான அளவு காவல்துறையினர் இல்லை என சமூகவலைத்தளங்களில் மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


இந்த நிலையில், டில்லியின் தற்போதைய நிலைமை குறித்துப் பரவலாக ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டில்லியில் தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது. வட கிழக்குப் பகுதியில் மக்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தடையிலிருந்து,  10 மணி நேரம் மட்டும் விலக்கு அளிக்கப்படும், காலை 4 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு  8 மணி வரையும் மட்டும் இந்த விலக்கு இருக்கும். கடந்த 36 மணி நேரத்தில் பெரியளவில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், டில்லி காவல்துறை, இரு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகச் சமாதானக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிலைமை இயல்பாகும் வரை இதுபோன்ற அமைதிக் குழுக் கூட்டங்கள் தொடரும் என்றும், இதுவரை 330 கூட்டங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பிஜேபி - சங்பரிவார் வகையறாக்களை அறிந்தவர்களுக்கு நன்றாகவே ஒன்று தெரியும்.


மத ரீதியாக மக்களைப் பிரித்து, தாங்கள் இந்துக்களின் பிரதிநிதிகள் என்று மக்களை நம்ப வைப்பது. அந்த வெறியினை ஊட்டுவது - அதன் வழி பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அள்ளிக் குவித்து, ஆட்சி அதி காரத்தைப் பிடித்து இந்து ராஜ்ஜியத்தை, ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது என்பதுதான் அவர்களின் அடிப்படைச் சித்தாந்தமும், நோக்கமும், செயலுமாகும்.


ஆனால் அந்த இந்து ராஜ்ஜியம் என்பது பார்ப்பன உயர் ஜாதிக்காரர்களுக்கானது, பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள்மீதும், பிற்படுத்தப்பட்டோர் மீதும் ஏறி சவாரி செய்வது என்பதை வெகு மக்கள் மத்தியில் புரிய வைத்தால் இவர்கள் சங்கதி ஆணி வேர் இல்லாமல் நொறுங்கிப் போய்விடும்.


தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சித்தாந்தங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு செல்லுவதுதான் இதற்கான சரியான மார்க்கமாகும் - செய்வோம் - செய்து முடிப்போம்!


No comments:

Post a Comment