சென்னை, மே 29 தமிழ்நாட்டில் இதுவரை 2,56,508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71,906.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாகஅனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்ச மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நபார்டு ஆர்.அய்.டி.எப். திட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 550 கி.மீ நீளமுள்ள 287 சாலை, 342 பாலங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,221 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 193 கி.மீ நீள 107 சாலை, 151 பாலப்பணிகள் ரூ.354 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 6,208.88 கி.மீ. நீளமுள்ள 4,606 சாலைப் பணிகள் ரூ.1,884.03 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.
வீட்டு வசதி
பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 2016-2017 முதல் 2019-2020 வரை, 2021-2022 ஆம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,50,405 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2016-2017 முதல் 2021 மே 6 வரை2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,97,414 வீடுகள் 2021 மே 7 முதல் இந்தாண்டு பிப்.14-ம் தேதி வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.கான்கிரீட் மேற்கூரை அமைக்க ரூ. 4,502.23 கோடி மாநில அரசால்விடு விக்கப்பட்டு, இதுவரை ரூ.4,035 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சமத்துவபுரங்கள்
முதல்கட்டமாக 201-2022ல் 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.194.44 கோடி ஒதுக்கப்பட்டு 98சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 88 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.67.01 கோடி ஒதுக்கப்பட்டு, 99 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 2021-2022-இல் இருந்து இதுவரை 1,44,489 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளில் கிராமப் புறங்களின் 63,63,379 வீடுகளுக்கு ரூ.2,010,29 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகளில் உள்ள 6,40,313 சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 58,746 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 மே 7 முதல், இந்தாண்டு பிப்.13 வரை சுழல்நிதி ரூ.629.55 கோடி, சமுதாய முதலீட்டுநிதி ரூ.629.55 கோடி, நலிவு நிலை குறைப்பு நிதி ரூ.14.59 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,56,508 மகளிர் சுய உதவிக் குழக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.71,960.43 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மூலம் 37,163 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3,76,559 பேர்பயன்பெற்றுள்ளனர். இக்குழுக்களுக்கு ரூ. 410.05 கோடி சுழல்நிதி,ரூ.24.09 கோடி கிராம வறுமைஒழிப்பு நிதியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு திட்டம்
சுய வேலை வாய்ப்பு தனிநபர் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 21,190 பேருக்கு ரூ.117 கோடி, 12,503 குழுக்களுக்கு ரூ.428.82 கோடியும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படும் 1,29,630 சுய உதவிக் குழுக்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.5,266.21 கோடி வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படும் 3,34,763 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.23,675.15 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment