பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

featured image

சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அந்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு:

1. நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் பலவற்றை பார்த்தவர் நீங்கள். பா.ஜ.க. கூட்டணி எதிர்ப்பு அணியினை வழி நடத்திடும் நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை எப்படிக் கருதுகிறீர்கள்?

இந்த நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மைக் கொள் கையை, பன்முகத்தன்மையை, கூட்டாட்சிக் கருத்தியலைக் காப்பாற்றும் வகையில்தான் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் களம் என்பது இவை அனைத்தையும் காப்பாற்றுவதற்கான ஜனநாயகப் போர்க்களமாக, இரண்டாவது விடுதலைப் போராட்டமாக அமைந்துள்ளது. தி.மு.க.வும் இந்தியா கூட்டணியின் கட்சிகளும் பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க ஒரு ஜனநாயக அறப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன. ‘செய் அல்லது செத்துமடி’ என்பது பிரபலமான சொற்றொடர்தான். எனினும், தி.மு.க.வின் இளைஞரணிக்கு நான் தலைமை வகித்த காலத்திலிருந்தே ‘செய்துவிட்டு செத்து மடி’ என்றுதான் கட்சித் தொண்டர்களை வலியுறுத்தி வருகிறேன். அதனால், நிச்சயம் செய்து முடிப்போம். இந்திய ஜனநாயகம், கூட்டாட்சிக்கே இது “செய் அல்லது செத்து மடி” என்ற காலம்தான். இந்த ஆபத்து உணர்ந்துதான் இந்தியா கூட்டணியே உருவாகி இருக்கிறது. அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், உத்தவ் தாக்ரே போன்றோரும் கரம் கோத்திருக்கிறார்கள்.

2. ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டை பெறுவதில் சவால்கள் இருக்கும்பொழுது, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்? நீண்ட காலம் பிடிக்கும் நீதிமன்ற முறையீடுகள் நடைமுறையில் சாத்தியமானதுதான் என கருதுகிறீர்களா?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையும் சுற்றுப்புற மாவட்டங்களும், திருநெல்வேலி – தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் கடந்த 2023 டிசம்பர் மாதம் கடும் புயல் – மழையால் பாதிக்கப்பட்டபோது, அதனை தேசியப் பேரிடராக அறிவிக்கும்படி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியும் எந்தவித நிதியுதவியும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசே குடும்பத்திற்கு தலா 6000 ரூபாய் வழங்கியது. பேரிடர் காலங்க ளிலும் பாராமுகமாக இருக்கும் ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் திட்டங்களுக்கான நிதியையும், வரி வருவாயில் உரிய பங்கீட் டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பேரிடர் நேரத்தில் நிதி வழங்காததை எதிர்த்து உச்சநீதிமன் றத்திற்குத் தமிழ்நாடு அரசு சென்றுள்ளது. எதையும் சட்டரீதியாகத்தான் கோருகிறது மாநில அரசு. அதனை ஒன்றிய அரசு மதிக்காதபோது, கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தானே! அதனால் தான், உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறோம்.
நிர்வாக ரீதியான சிக்கலை பேசித் தீர்க்க இப்போது ஏதா வது வேறு வாய்ப்புகள் உள்ளனவா? கடந்த பத்தாண்டுகளில் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை ஒருமுறையாவது மோடி அரசு கூட்டியுள்ளதா? கூட்டுறவுக் கூட்டாட்சி – துடிப்பான ஜனநாயகம் பற்றியெல்லாம் அதிகம் பேசுகிறார்கள்; ஆனால், நடைமுறையில் அதனைப் பின்பற்றவில்லை. கூட் டாட்சியே இல்லை; இதில் எங்கிருந்து கூட்டுறவுக் கூட்டாட்சி.
நாங்கள் மகிழ்ச்சியோடு நீதிமன்றத்தை நாடவில்லலை. ஒன்றிய அரசு எங்களை வஞ்சித்து பாரபட்சமாக நடத்தி நீதிமன்றம் செல்ல நிர்பந்திக்கிறது.

3. உங்கள் ஆட்சியின் திட்டங்களின் அச்சாணியாக கல்வியும், சமூகநீதியும் விளங்கி வருகின்றன. பலதரப்பட்ட துறை சார்ந்த திட்டங்களிடையேயும், சமூக நலத் திட்டங்களி டையிலும் எதனை தமிழ்நாட்டிற்கு உங்களது ஆட்சி அளித்த குறிப்பிடத்தக்க திட்டமாகக் கருதுகிறீர்கள்?

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். கல்விக்கான அடித்தளத்தையும் சமூகநீதிக்கான பாதையையும் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சென்னை மாகாணத்தில் அமைத்தது திராவிட அர சியல் இயக்கமான நீதிக்கட்சி. அதன் தொடர்ச்சியைப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு கண்டிருக்கிறது. காமராஜர் காலத்தில் ஆரம்பக் கல்வி, கலைஞர் காலத்தில் உயர்கல்வி என்று தமிழ்நாடு வளர்ந்த நிலையில், இன்றைய தலைமுறையினர் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமானக் கல்வியைப் பெற்று, உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் ஆட்சியின் நோக்கம்.
‘நான் முதல்வன்’, மாணவ – மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் அதற்கான பாதையை உருவாக்கியுள்ளன. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியார் பாடியது போல, தரமானக் கல்வி கொண்ட தமிழ்நாடு என்ற நிலையை அடைய வேண்டும். அது சமூகநீதி அடிப்படையில் அனை வருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் இலக்கு.
1960-களில் பீகார், உ.பி. போலதான் தமிழ்நாடும் இருந்தது. நவீன தமிழ்நாட்டுக்கான திட்டங்களை தீட்டி, கட்டமைப்பை உருவாக்கியதால், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி என முத்தமிழறி ஞர் கலைஞர் அழைக்கப்படுகிறார். இப்போது வளர்ந்த – நகர்மயமான – படித்தவர்கள் நிறைந்த நவீனத் தமிழ்நாட்டின் இந்த தலைமுறை மேலும் உயர்ந்து உன்னத வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும், வளர்ச்சி யைப் பரவலாக்கி, ஜனநாயகப்படுத்தி, எந்தவொரு பிரிவும் பின்தங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதும் எனது முன்னுரிமை.

4. இந்தியாவில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் நிதி தேவைகள் உயர்ந்துள்ள சூழலில், ஒரு அரசியல் கட்சியின் நிதித் தேவைகள் அரசியல் ஊழலுக்கு வழி வகுத்திடும் என்பதை நம்புகிறீர்களா?

1967-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் சேர்ந்து எதிர்கொள்ள தி.மு.க.வின் நிறுவனர் அண்ணா எதிர்பார்த்த நிதி 10 லட்ச ரூபாய். அதனை 11 லட்ச ரூபாயாக வசூலித்து தந்து பாராட்டுப் பெற்றார் கலைஞர். இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கிற வரம்பு 95 லட்ச ரூபாய். கால மாற்றத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கான நிதி தேவைப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிபர் தேர்தலுக்கென வேட் பாளர்கள் மிகுந்த நிதி பெறுகிறார்கள். அதுபோன்ற நிதியை இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகளில் பெறும் போது, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அதிர டித் தீர்ப்பால் அம்பலமான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களில் ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு எந்த அளவுக்கு ஊழலை நுணுக்கமாகச் செய்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனின் கணவர் பரகலா பிரபாகர் இது உலகிலேயே பெரிய ஊழல் என விமர்சித்திருக்கிறார்.

5. வெற்றி பெற இருக்கும் தேசியக் கூட்டணி ஆட்சியில், ஒன்றிய அரசில் பெற இருக்கின்ற சில அமைச்சர் பொறுப்பு களைத் தாண்டி, தி.மு.க. தேசிய அளவில் முக்கியமான பங் காற்றி பிரதம அமைச்சர் பொறுப்பினை பெற எப்பொழுதாவது முனையுமா?

இந்திய அரசியலில் தி.மு.க. எத்தகைய முக்கிய பங்காற்றி யுள்ளது என்பதைக் கடந்தகால வரலாறு காட்டும். வி.வி.கிரி தொடங்கி பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி வரை பல குடியரசுத் தலைவர்களைத் தேர்வு செய்வதில் தி.மு.க.வின் பங்கு, அதுவும் கலைஞரின் பங்கு மகத்தானது. அதுபோலவே வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் எனப் பிரதமர் களைத் தேர்வு செய்ததிலும் அவர் பங்கை நாடறியும். 1971-இல் இந்திராகாந்தி அம்மையாரின் நாட்டு நலன் சார்ந்த, வங்கிகள் தேசியமயம் போன்ற திட்டங்கள் நிறைவேறத் துணை நின்றதும், 1975-இல் எமர்ஜென்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி யதும், 1977-இல் இந்தியாவில் முதல்முறையாக ஆட்சி மாற்றத் திற்கான ஜனதா கூட்டணியில் தி.மு.க ஆற்றிய பங்கும், 1989இல் தேசிய முன்னணியைக் கட்டமைப்பதிலும், 1996-இல் அய்க்கிய முன்னணியை உருவாக்குவதிலும், 1999-இல் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு தந்ததும், 2004-இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யைக் கட்டமைத்து வெற்றி பெற்றதிலும் இந்திய அளவில் தி.மு.க. பெரும் பங்காற்றியுள்ளது.
தி.மு.க. என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையையும் மாநில சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சிக் கருத்தியலையும் வலியுறுத்துகிற மாநிலக் கட்சி. குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற பதவிகள் கலைஞரை நோக்கி வந்த காலம் உண்டு. என் உயரம் எனக்குத் தெரியும் என்றவர் அவர். ஆனாலும், இந்திய அரசியலில் கலைஞரும் தி.மு.க.வும் என்றும் இமயம் போல உயர்ந்து நிற்கும் சக்திகள். பதவிகளைவிட கூட்டாட்சிக் கருத்தியல், மதச்சார்பின்மை, வெறுப்பு இல்லாத இந்தியா, பன்மைத்துவம், மொழிகளுக்கும் சம மதிப்பு போன்ற உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாப்பது தான் முக்கியமனது.

6. அரசியல் கட்சிகள் கொள்கை சார்ந்து இயங்காமல் மக்களுக்கு ஒருவித தோல்வியைத்தான் அளித்து வருகின்றன என்ற கருத்து ஒரு சில மக்களிடம் நிலவுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் இத்தகைய செயல்பாடுகள், கட்சியை முன்னிறுத்து வதை விட தனிப்பட்ட தலைவர்களைப் பற்றிய அழுத்தம் கொடுத்திடும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் கருதப்படுகிறது. அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சூழலிலும் இந்தியாவிற்கான ஒரே ஒருங்கிணைப்புத் தலைவர் என்ற பிம்பத்தை மோடி அவர்கள் வளர்த்து வருகிறார் அல்லது வடமாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அதன் இந்துத்துவக் கொள்கைதான் முதன்மையானது என நினைக்கின்றீர்களா?

தலைமுறைகள் மாறும்போது அரசியல் கருத்தியல்கள் மீது இத்தகைய எண்ணம் ஏற்படுவது இயல்பானது.
ஒரு நல்ல தலைவனால் அடுத்தடுத்த தலைமுறையினரை யும் கருத்தியல் வழியில் அரசியலில் ஈடுபடுத்த முடியும். பெரியார், அண்ணா, கலைஞர் காலத்திலும் தற்போதும் திராவிட இயக்கம் அந்தப் பாதையில்தான் பயணிக்கிறது. காலத்திற்கேற்ற சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், அடிப்படைக் கொள்கையான சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை, மொழிப்பற்று இவை எப்போதும் நிரந்தரமாக இருக்கும். இவை உரிமைகளின் அடிப்படையில் உருவானக் கொள்கைகள்.
பா.ஜ.கவின் நிலை அப்படி அல்ல, மக்களின் மத உணர்வைக் கிளறிவிட்டு, வெறுப்புணர்வை விதைத்து அரசியல் குளிர்காயும் ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் அது.
அதைப் பரப்புவதற்கு இன்று மோடியை முன்னிறுத்து கிறார்கள். நேற்று வேறொருவர் இருந்தார். நாளை வேறொருவர் வருவார். அவர்களின் இமேஜை பலப்படுத்தி, இளைஞர்களை ஈர்த்துவிடலாம் என நினைப்பதுதான் பா.ஜ.க.வின் அரசியல். பிரதமர் மோடியை விஸ்வகுரு என்று இமேஜ் கட்டமைக் கிறார்கள். ஆனால், அவர் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சியிலும், எல்லையில் சீனாவின் அடாவடியிலும் விஸ்வகுருவாக இல்லை, மவுன குருவாகத்தான் இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் மோடியின் இமேஜை மட்டுமல்ல, இளந்தலைவர் சகோதரர் ராகுல்காந்தி சொன்னதுபோல ஆர்.எஸ்.எஸ்.ஸின் இமேஜையும் தகர்க்கும்.

7. 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் ஒரு பரந்துபட்ட அரசியல் கூட்டணியினை கட்டிக் காத்து வந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நிலைத்த கூட்டணியின் இரகசியம் என்ன?

2018-இல் இது ஒரு கூட்டமைப்பாக உருவானபோதே, அரசியலுக்கான அணி அல்ல. கொள்கைக் கூட்டணி என்றுதான் சொன்னேன். இந்திய ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகளைப் பாசிச சக்திகளின் கைகளிலிருந்து மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒரே இலக்கு. அதனால்தான் 2019-லிருந்து தொடர்ந்து கூட்டணியாக செயல்படுகிறோம். தமிழ்நாட்டின் பாரம்பரியமும் மக்களின் விருப்பமும் அதுவே. அதனால்தான் தொடர் வெற்றியைக் காண்கிறோம். இந்தத் தேர்தல் களத்திலும் அது தொடரும்.

8. தனிப்பட்ட பிரதிபலிப்பாக ஒரு கேள்வி! உங்களைப் பற்றியும், உங்களின் ஆட்சியைப் பற்றியும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் எப்படி நினைவுகூர வேண்டும் என்பதை விரும்புகிறீர்கள்? மக்கள் என்பது சாதாரண பொதுமக்கள்தான்; தி.மு.க.வின் அனுதாபிகள் அல்ல.

பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் தன் மீதான விமர்சனங்கள், அவதூறுகள் ஆகியவற்றை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் இப்படித்தான் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். அவர்களின் வழியில் நானும் எதிர்கொண்டேன். என் அளவுக்கு மலிவான, தரம்தாழ்ந்த விமர்சனங்களை வேறு யாரும் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள். பொறுமை காத்தேன். எல்லா விமர்சனங்களுக்கும் வெற்றிகரமான செயல்களால் பதில் சொன்னேன். அதற்காக சளைக்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஆட்சியை மக்கள் ஒப்படைத்தார்கள். திராவிட இயக்கம் மிகுந்த சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த நேரத்தில் – திமுக தலைவராக திராவிடத்துக்கு எதிரான சதியை சவாலை முன்வரிசை தளபதியாக நின்று எதிர்கொண்டேன். “மக்கள் வைத்த நம் பிக்கையை நிறைவேற்றித் தரும் உறுதிபடைத்த முதலமைச்ச ராக மு.க.ஸ்டாலின் இருந்தார்” என்று பொதுமக்கள் நினைத்தால் போதும். திராவிட இயக்க கொள்கைகளில் தோய்ந்த – சமரசம் செய்து கொள்ளாத லட்சியவாதியாக, கடைக்கோடி மனிதனுக் கும் சமஉரிமை, கண்ணியம் மற்றும் சமூக ஏற்றம் ஆகிய வற்றுக்காக பாடுபட்டவன், பெண்களின் முன்னேற்றத்துக்காக சலிக்காமல் திட்டங்களைத் தீட்டி. நிறைவேற்றியவன். என்னை காலம் குறித்துக் கொள்ளும். இதில் தி.மு.க. ஆதரவாளர்களைத் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை. அவர்களும் பொது மக்கள்தான். அவர்களுக்கும் வாக்குரிமை உண்டு. காலமும் வரலாறும் அதை சரியாகவே குறிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

9. முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு நீங்கள் பொறுமை யினை நீண்ட காலமாக கடைப்பிடித்தீர்கள். கட்சிக்குள் எந்தவித நெருக்கடியையோ எதிர்ப்பினையோ உருவாக்க முனையவில்லை உங்களை ‘பொறுமையின் சிகரமானவர்’ என நாங்கள் அழைத்தால் அதனை, வெளிப்படையாக ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது சிறு புன்னகையினை பதிலாக்கி விடுவீர்களா? வாழ்விலும் அரசியல் பயணத்திலும் உங்களது பொறுமையான அணுகுமுறை பற்றி சற்று கூற வேண்டுகிறோம்.
காலம் கனியும்வரை பொறுத்திருப்பது பொதுவாழ்க்கைக் கான இலக்கணம். தி.மு.கவைத் தொடங்கி 18 ஆண்டுகாலம் வரை பொறுமையாக இருந்துதான் அண்ணா ஆட்சியைப் பிடித்தார். எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், 13 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்துதான் கலைஞர் ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சிலர் குறுக்கு வழியில் முதலமைச்சரானதால், நான் குறிப்பிட்ட பண்பட்ட – பண்பாடுமிக்க அரசியலுக்குப் பதில், எப்படியாவது பதவிக்கு வருவதுதான் அரசியல் தகுதி என்று சிலர் நினைத் திருக்கக்கூடும். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப் பைத் தொடங்கி, கட்சியின் அடிப்படை நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்த எனக்கு அண்ணாவும் கலைஞரும் காட்டிய அரசியல் வழிதான் ஏற்றதாக இருந்தது. அதுதான் பொறுமைக்கு காரணம். உங்கள் வாழ்த்துகளைப் புன்னகை யுடன் ஏற்றுக்கொண்டு, அதனை எங்கள் இயக்கத்தின் முன்னோடி தலைவர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

10. உங்களது தனிப்பட்ட விருப்பங்களான சினிமா, கிரிக் கெட், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் உடல் பயிற்சி எப்படி உங்களது வாழ்வியல் போக்கினை வடிவமைத்தன? கிரிக்கெட்டில், நீங்கள் ஒரு அருமையான சுழல் பந்து வீச்சாளராமே! உண்மையா? அண்மையில் நீங்கள் பார்த்த பிற மொழித் திரைப்படங்களைப் பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்திட முடியுமா? வேண்டுகிறோம். மேனாள் முதலமைச்சரின் மகன், இந்நாள் முதலமைச்சர் என்ற நிலையில் உங்களது தனிப்பட்ட அழகான குடும்பம், குழந்தைகளிடையே பாடியிருக்கிறீர்களா? நடனம் ஆடியிருக்கிறீர்களா? நீங்கள் விரும்பிப் பாட – ஆட ஏதேனும் பாடல் இருக்கிறதா?

சினிமா என்பது கலைஞரில் தொடங்கி எங்கள் குடும்பத்தில் பலரும் ஈடுபட்ட – ஈடுபட்டு வருகிற துறைதான். ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற திரைப்படங்களில் பொது நலன் சார்ந்த இளைஞனாக நடித்திருக்கிறேன். நாடகம், டி.வி. சீரியல் ஆகியவற்றிலும் அப்போது நடித்துள்ளேன். கிரிக்கெட் எனக்குப் பிடித்த விளையாட்டு. சிறுவனாக, இளைஞனாக மட்டுமல்ல, சென்னையின் மேயராக இருந்தபோதுகூட கார்கில் நிதிக்காக நடந்த காட்சிப் போட்டியில் கபில்தேவ், சிறீகாந்த் போன்ற புகழ்பெற்ற வீரர்களுடன் விளையாடியுள்ளேன். உடற்பயிற்சியில் நான் எப்போதும் கவனம் செலுத்துவது உண்டு. சைக்கிளிங், ஜாகிங் எல்லாம் உடல்நலனைப் பாதுகாக் கின்ற பயிற்சிகள்தான். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தின ருடன் திரைப்படங்கள் பார்ப்பது உண்டு. பழைய பாடல்களை பாடுவதும் பிடிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உங் களைப் போன்ற உணர்வுள்ள மனிதன்தான்.

11. உங்களது அரசியல் பயணத்தில், ‘அரசியல்’ பற்றிய நினைவில் இருக்கும் நிகழ்வினை பகிர்ந்திட வேண்டுகிறோம் – ஒரு பரபரப்பான பணிச் சூழல் மிகுந்த முதலமைச்சர் கலைஞர், தனது மகனான உங்களுடன் உரையாடி செலவழித்த அந்த மனநெகிழ்வான காலம் அல்லது மாபெரும் மாநாட்டுப் பேரணியை உங்களது பள்ளிக் காலங்களில் மேடையிலிருந்து அவர் கவனித்த காலம் பற்றி…

எங்கள் கோபாலபுரம் வீடே தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமின்றி, இந்திய அரசியலின் ஆலோசனை பீடமாக இருந்துள்ளது. அதனால் கலைஞர் எப்போதும் பிஸிதான். அதுதான் அவரிடம் எங்களை அரசியல் கற்க வைத்தது. கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடியபோது, அண்ணாவை நேரில் சந்தித்து உடனடியாகத் தேதி தருமாறு நான் வற்புறுத்தியதும், “உன் அப்பா போலவே நீயும் பிடிவாதக்காரனாக இருக்கிறாயே” என்று அண்ணா சொன்னதும் பள்ளிப் பருவத்து ஸ்டாலினின் நெஞ்சின் அலைகள். இப்படி எத்தனையோ நினைவலைகள்.

12. இளைஞர்களுடன் பழகுவது – குறிப்பாக இருபதின்ம வயது இளைஞர்களுடன் மூத்தவர்கள் பழகுவது ஒரு சவா லானதுதான், எப்படி இளைய தலைமுறையுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்? குறிப்பாக இருபதின்ம வயதின் தொடக்க கால இளைஞர்களுடன் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களது தோழர்களுடைய, அதிகாரிகளுடைய, வீட்டு அரு கில் உள்ளவர்களுடைய, உறவினர்களுடைய பிள்ளைகளு டன் பழகுவதை எப்படி ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்?

பொதுவாக, நான் என்னுடைய பரபரப்பான அரசியல் பணிகளுக்கிடையிலும் இயன்ற அளவு குடும்பத்திற்கென நேரம் ஒதுக்குவது உண்டு. உறவினர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது உண்டு. பொங்கல் விழா போன்ற உற்சாகம் தரும் நிகழ்வுகளில் பங்கேற்பதும் வழக்கம். அதனால், இன்றைய தலைமுறையினரின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? அவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள்? அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. முதலமைச்சராக வெளியூர் செல்லும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவியர், இளைஞர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

13. அண்மைக்கால உங்களது பிரச்சாரங்களில் சிபிஅய் CBI), ஈடி (E.D) அய்டி (IT) மேலும் ஆர்.டி.அய். (RTI) குறித்து கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறீர்கள். ஏன் அந்த ஒன்றிய முகமைகளைப் பற்றிய பிரச்சார அணுகுமுறை?

என்னுடைய சமீபத்திய சமூக வலைத்தள பதிவு ஒன்றில் இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறேன்.
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்து, பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை அம்பலபடுத்தி விட்டது. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’

பத்தாண்டுகால ஆட்சிக்கு பின்னும் சாதனைகளை பட்டியல் போடாமல் மறைந்த பண்டிதர் நேரு, அம்மையார் இந்திரா காந்தி ஆகியோர் மீது பழி தூற்றுவதையும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதையும் முழுநேர தொழிலாக வைத்திருக்கிறது பா.ஜ.க. எதிர்கட்சித் தலைவர்கள் குறிவைத்து கைது செய்யப் படுவதை தேர்தல் ஆணையமும் கண்மூடி வேடிக்கை பார்க்கிறது. மோடி சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று இந்தக் குடும்பத்தில் R.T.I. -யையும் இப்போது இணைத்துக் கொண்டுள்ளார்!

14. கலைஞரின் இலக்கியப் பாரம்பரியத்தின் ஆர்வ உந்துதலில் சிறுகதை, திரைக்கதை என இலக்கியப் பணிகளில் ஈடுபட்டதுண்டா? அப்படியானால் அவை பற்றி சற்று கூறலாமே?

கலைஞரின் மூத்த பிள்ளை எனப்படும் ‘முரசொலி’ நாளேட்டுக்கு தலைவர்களின் மேடைப் பேச்சை உரையாக மாற்றும் பணியை செய்திருக்கிறேன். பல ஊர்களில் நடை பெறும் கழக நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதியிருக்கிறேன். இப்போதும் தி.மு.க. தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் என்ற செய்தி மடலை எழுதுகிறேன். இவையெல்லாமே இயக்கம் சார்ந்த எழுத்துகள்தான். முத்தமிழறிஞர் கலைஞரைப் போல இலக்கியம், நாடகம், திரைப்படம், புதினம், சிறுகதை, கவிதை, உரையாடல், உரைநடை எனத் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்ட எவராலும் முடியாது. நான் கலைஞரின் மகன். அவர்தான் பன்முக ஆற்றல் கொண்ட கலைஞர். நான் அவரிடமிருந்து எடுத்துக்கொண்டது, அயராது உழைக்கும் பேராற்றலை.

15. வளர்ந்து வரும் ஊடகத்துறை, தொடர்புத் துறை, நிலப்பரப்பு ஆகிய அண்மைக்கால சாதகமான சூழல்களி லிருந்து திரைப்படம், இசை வழியாக அரசியல் கருத்துப் பிரச்சாரத்தினை நடத்திட ஏன் தி.மு.க. முழுமையாக முனைய வில்லை? இதற்கு உரிய காரணம் உள்ளதா? அல்லது சுய விமரிசனமாக இந்த நிலையை கட்சித் தலைமையின் குறைபாடு என கருதலாமா?

திரைப்படங்களை அரசியல்-சமுதாய தளத்தில் வலிமையான ஆயுதமாகப் பயன்படுத்தியதில் தி.மு.க. போன்ற இன்னொரு இயக்கம் கிடையாது. அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, முரசொலி மாறன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி, வாகை சந்திரசேகர், இராமநாராயணன் எனப் பலரும் தி.மு.க சார்ந்து திரையில் பங்களித்துள்ளனர். தற்போதைய சூழல் மாறியிருந்தாலும், அன்றைக்கு தி.மு.க விதைத்த சமூகநீதிக் கொள்கையை, ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரானக் குரலை தமிழ்த் திரைப்படங்களில் பலரும் முன்வைப்பதே தி.மு.க. ஏற்படுத்திய தாக்கம்தான். உதயநிதி நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்கள் தி.மு.க.வின் கொள்கைகள் சார்ந்த படம்தான். திரைப்படம் என்பது அடிப்படையில் பொழுதுபோக்குச் சாதனம். அதில் எந்த அளவில் கருத்துப் பரப்புரைச் செய்ய முடியுமோ அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment