‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்'' பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்'' பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

featured image

ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான
நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா?
‘‘பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான்”
பா.ஜ.க.வின் உயிர்மூச்சு!
இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!
பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பொள்ளாச்சி, மார்ச் 14 ஆட்சியில் இருந்த பத்து ஆண்டு களாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர் தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும், கட்டுக் கதைகளும் மக்களிடம் எடுபடாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை வருமாறு.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய, தாய்மார்களே, என் பாசமிகு மகளிர ணிக் குழுவின் சகோதரிகளே, அன்பிற்கினிய சொந் தங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத்துறைகளைச் சார்ந்த நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
பொலிவு மிகுந்த பொள்ளாச்சி நகரில், கோவை-நீலகிரி-திருப்பூர்-ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.

இந்த மாவட்டங்களுக்கெல்லாம் நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது!

தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளை, பின்னால் இருக்கின்ற நம்பிக்கையை சிந்தாமல், சிதறாமல் பாதுகாத்து, வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில், இதுவரை மூன்றாண்டு கால ஆட் சியை வழங்கிய பெருமையுடன் உங்களுடைய முகங் களை நான் பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வந்திருக் கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியை, எழுச்சியை பார்க்கின்றபோது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், பொது தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள்!

இந்த மூன்றாண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை தலைப்புகளாக முதலில் பட்டியலிட விரும்புகிறேன்.
· கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
· மகளிர்க்கு விடியல் பயணம்
· புதுமைப்பெண் திட்டம்
· காலை உணவுத் திட்டம்
· இல்லம் தேடி கல்வி
· நான் முதல்வன் திட்டம்
· மக்களைத் தேடி மருத்துவம்
· இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48
· களஆய்வில் முதலமைச்சர் திட்டம்
· மக்களுடன் முதல்வர் திட்டம்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் “நீங்கள் நலமா?” திட்டம்!
அடக்கத்தோடு சொல்கிறேன் – உரிமையோடு சொல்கிறேன்!

நம்முடைய திட்டங்கள் மூலமாக பயனடைந்த ஒவ்வொருவரையும் கைப்பேசியில் அழைத்து, முதலில், ‘‘நீங்கள் நலமா?” என்று கேட்கிறேன். பின்னர், திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கேட்கிறேன். கோட்டையிலிருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களிடமும் பேசுகின்ற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான் தான்! இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வையும் மதிக்கின்ற வன் நான்! உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தையும் காது கொடுத்து கேட்கிறவன் நான்! உங்கள் கோரிக்கைகளை-தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்று உழைக்கின்ற முதலமைச்சர் நான்! அதனால்தான், “நீங்கள் நலமா?” திட்டத்தை தொடங்கியிருக்கிறேன். இப்படி சிந்தித்து, சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது! வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது! ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது!

அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத் துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப “வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறார்கள். அவர் களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது! வந்துவிட்டதா, இல்லையா?
நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் வரலாற்றை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்கின்ற காலம் வந்துவிட்டது! அதன் அடையாளம்தான், இங்கே நீங்கள் திரண்டு வந்திருக்கின்ற காட்சி!

நான் ஒரு கோப்பில், கையெழுத்திடுகிறபோது, இலட்சக் கணக்கான மக்கள் கோடிக்கணக்கான மக்கள் – மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள்!
அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?

மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என்று சொல்லிக்கொண்டார்களே! வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?
மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி நிகழ்வு!
இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச் சர்கள் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்குச் செய்தது என்ன?
மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி நிகழ்வு! மறந்திட முடியுமா! பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரிய மாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள்! புகார் கொடுத்த வர்களை மிரட்டினார்கள்!
திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார் கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள்! ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்!

பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க” என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.
அந்த வழக்கு சிபிஅய் விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது! அதுமட்டுமா! முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா!

அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?

தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?
கஞ்சா – குட்கா மாமூல் பட்டியலில், அமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குநருமே இருந்தார்களே, அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான், இன்றைக்கு உத்தமர் வேடம் போடுகிறார்கள். இந்தக் கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு வருகிறார்கள். நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்!

தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை வளமாக்க – தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்!
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கின்ற ஒன்றிய அரசு அங்கே அமைந்திருந்தால், இன்னும் பத்து மடங்கு சாதனைகளை இந்த திமுக செய்திருக்கும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது!
பிரதமர் மோடி அவர்களே நீங்கள் கொடுத்த பழைய வாக்குறுதிகள் என்னாயிற்று?

நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர், ’மோடியின் உத்தரவாதம்’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம், தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.
பிரதமர் அவர்களே! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன?
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உத்தரவாதம் தந்தீர்களே அதன் கதி என்ன? அதை சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!
அதுகூட வேண்டாம், அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. வரப்போகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுங்கள்! என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் கேட்கவேண்டும்! ”பதில் சொல்லுங்க பிரதமரே..” என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா!

கடந்த முறை வந்தபோது பேசுகிறார்! பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை தி.மு.க. தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் அவர்கள் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாம் சென்று தடுக்கிறோமா!

‘‘அண்ட புளுகு ஆகாசப் புளுகு” – இது மோடியின் புளுகு!

நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், ‘‘அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு” சொல்லுவார்கள் – அது மாதிரி, இது மோடி புளுகு! அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014 இல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்? மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.
அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே! ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா?
பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!

பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்!

மாநிலத்தைக் கெடுத்த அதிமுக – மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க! இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய, நமது ‘திராவிட மாடல்’ அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! இந்தியாவை காப்போம்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment