“விண்வெளியில் பெண்களுக்கு முக்கியத்துவம்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

“விண்வெளியில் பெண்களுக்கு முக்கியத்துவம்”

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் விண்வெளி, அறிவியல், மகளிர் முன்னேற்றம் குறித்து சென்னையில் மாணவர்களிடையே உரையாடினார்.
டாக்டர் ஸ்வாதி மோகன் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மார்ஸ் லாஞ்ச் சிஸ்டம் தலைமைப் பொறியாளர். ஸ்வாதி மோகன் தனது 1 வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். வடக்கு வர்ஜீனியா / வாசிங்டன் டிசி மெட்ரோ பகுதியில் வளர்ந்த அவர், கார்னெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் & ஏரோஸ்பேஸ் பொறியியலில் பி.எஸ் முடித்தார்.
பின்னர், எம்.அய்.டி.யில் எம்.எஸ் மற்றும் ஏரோ நாட்டிக்ஸ்/விண்வெளியில் முனைவர் பட்டங்களை பெற்றார். சனி கோள் மற்றும் நிலா ஆய்வுகள் போன்ற பலவற்றில் அவர் பணியாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டில் இருந்து மார்ஸ் 2020 எனப்படும் செவ்வாய் விண்கல திட்டத்தில் பணிபுரிந்துள்ளார். மார்ஸ் 2020 திட்டத்தில் அணுகுமுறைக் கட்டுப்பாட்டு அமைப்பை அவர் வழிநடத்தியதோடு முன்னணி அமைப்பு பொறியாளராகவும் செயலாற்றினார்.

இந்நிலையில், (மார்ச் 5) அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக மார்ஸ் (செவ்வாய் கோள்) லாஞ்ச் சிஸ்டம் தலைமைப் பொறியாளர் டாக்டர் ஸ்வாதி மோகன், சென்னையை சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் உடன் விண்வெளி அறிவியல் குறித்து கலந்துரையாடினார்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்துடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சென்னை பிர்லா கோளரங்க வளாகத்தில் ஏற்பாடு செய்த “செவ்வாய் 2020: ஏவுதல் முதல் தரையிறக்கம் வரை” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் ஸ்வாதி மோகன், நாசாவின் செவ்வாய்ப் பயணத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் விண்வெளி உறவுகள், நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான கூட்டு செயல்பாடுகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை குறித்து அவர் விரிவாகப் பேசினார். அவரது தென்னிந்திய தொடர்பு குறித்தும் பேசிய டாக்டர் ஸ்வாதி மோகன், மாணவர்கள், குறிப்பாக பெண்கள், விண்வெளி தொழில்நுட்பத்தை தங்கள் பணியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேலும், “விண்வெளி ஆய்வில் உள்ள கடினமான சவால்களை நாம் எதிர்கொள்ளும் வேளையில் நமது குழுக்களில் பன்முகத்தன்மை அவசியம். குறிப்பாக பெண்கள் மற்றும் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாதோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆர்வம், நோக்கம் மற்றும் விடாமுயற்சியுடன், வலிமையான செயல்களை ஒன்றிணைந்து செய்ய நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்,” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment