சுயமரியாதை இயக்க தொடக்கக் கால சுடரொளிகளைப் போற்றிடும் வாய்ப்பினை வழங்கிய நினைவேந்தல் - ஒரு தொகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

சுயமரியாதை இயக்க தொடக்கக் கால சுடரொளிகளைப் போற்றிடும் வாய்ப்பினை வழங்கிய நினைவேந்தல் - ஒரு தொகுப்பு

featured image

வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் உரிய அமைப்புடன் தொடங்கிய காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த போராளி மாயவரம் நடராசன் அவர்களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 92) அவர்கள் அண்மையில் காலமான நிலையில் அவரது படத் திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 29.1.2024 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் மாயவரம் நடராசன் (7.1.1902 – 10.7.1939) – ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (20.5.1932 – 19.1.2024) ஆகியோரது உருவப் படங்களை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் நினை வேந்தல் உரை ஆற்றினார்.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் தமது தொழிலில் உருவாக்கிய, பயிற்றுவிக்கப்பட்ட, பழகிய பட்டயக் கணக்காளர் பலர், வழக்குரைஞர்கள், மாயவரம் நடராசன் அவர்களின் மூன்று தலைமுறையினைச் சார்ந்த வழித் தோன்றல்கள், கழகத் தோழர்கள் எனப் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிட்டர் அவர்களின் நினைவுகளையும், அவரது தந்தையார் மாயவரம் நடராசன் அவர்களின் நினைவுகளையும் போற்றிச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் படத்திறப்பிற்கு முன்னர் சுய மரியாதை இயக்கத் தந்தை – மகன் பற்றிய அறிமுக உரையினை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனார் வழங்கினார்.

கவிஞரின் அறிமுக உரை
இன்று மயிலாடுதுறை என்ற அழைக்கப்படும் அன்றைய மாயவரத்தில் பிறந்து வளர்ந்த கவிஞர் அவர்கள் மாயவரம் நடராசனின் வழித் தோன்றல் களை அறிந்தவர் – பழகியவர் என்ற நிலையில் பல வரலாற்றுச் செய்திகளை தனது உரையில் எடுத்துரைத்தார்.
தந்தை பெரியாருக்கு மெய்க்காப்பாளர் போல இருந்து சுயமரியாதை இயக்கத்தில் மாயவரம் நடராசன் அவர்கள் சேவையாற்றினார். பெரியார் பயணம் செய்திடும் இடங்களுக்கு ஒரு நாள் முன்னரே சென்று நிகழ்ச்சி ஏற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள் குறித்து கலந்து பேசி ஆவன செய்தவர். ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக விளங்கியவர். 35 ஆண்டு காலமே வாழ்ந்த மாயவரம் நடராசன் அவர்களுக்கு ஒரு மகன் – ஆடிட்டர் சி.என்.ஜெயசந்திரன், ஒரு மகள் – மங்கையர்கரசி. தந்தை மறைந்த பொழுது மகனுக்கு அய்ந்து வயது; மகளுக்கு ஒன்றரை வயது. தந்தையின் முகத்தை நேரடியாகப் பார்த்த நினைவுகள் கூட இல்லாத நிலையில் பிள்ளைகள் சுயமரியாதை, பொதுவுடைமை, முற்போக்குக் கருத்துகளை மனதில் இருத்தி வளர்ந்தனர். ஆடிட்டர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு தந்தை நடராசன் இட்ட பெயர் லெனின். தந்தை பெரியார் 1930களின் தொடக்கத்தில் சோவியத் ரஷ்யா சென்று வந்த நிலையில் அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பாலியல் பாகுபாடின்றி ரஷ்யா, மாஸ்கோ, ஸ்டாலின், லெனின் எனப் பெயரிடப்பட்ட சூழல் நிலவி வந்தது. ஜெயச்சந்திரன் அவர்கள் பட்டயக் கணக்காயர் பயிற்சிப் படிப்பினை முடித்து தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் பொதுவுடைமை இயக்கத்திலும் திராவிடர் இயக்கத்திலும் தமது தொழில் சார்ந்த சேவைகளை வழங்கி வந்தார். நியூசெஞ்சுரி புத்தக நிலையம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளுக்குத் தேவைப்படும் கணக் காயர் ஆய்வுப் பணிகளுக்கான சேவையினை எந்தக் கட்டணமும் வாங்காமல் வழங்கி வந்தவர். மாயவரம் நடராசன் அவர்களது குடும்பத்தார், வழித் தோன்றல்கள் இன்றைக்கும் பொதுநலம் சார்நத் சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து வருவது போற்றுதலுக்குரியது.
மாயவரம் நடராசன் அவர்களின பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை கழகம் நடத்திய நிலையில், அதில் பங்கேற்று ஆடிட்டர் ஜெயச்சந்திரன் மற்றும் குடும்பத்தார் சுயமரியாதை இயக்க பாரம்பரரியத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அந்தக் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் அந்த உணர்வுகளுடன் வாழ்ந்து வளம் சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கவிஞர் அவர்கள் தமது உரையினை நிறைவு செய்தார். சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்களைத் திறந்து வைத்திட தமிழர் தலைவரை வேண்டி அழைத்தார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு
மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் ஆகியோரது உருவப் படங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். மேடையின் முன் வைக்கப்பட்ட படங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மரியாதை செய்தார். குடும்பத்தினரும் வந்திருந்த பலரும் மலர் இதழ்களை வைத்து சுடரொளிகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்தனர்.

தமிழர் தலைவர் ஆற்றிய நினைவேந்தல்
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்த பொழுது, நாம் நேரில் சென்று மரியாதை செய்திட இயலாத நிலையில் – பிற முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக – திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்று இறுதி நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுதே தொலைப்பேசி வாயிலாக குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த வேளையில், ஆடிட்டர் அவர்களின் படத்திறப்பு நிகழ்வினை திராவிடர் கழகம் பெரியார் திடலில் செய்திடும் என நாம் கூறியபொழுது, குடும்பத்தினர் அதற்கு ஒப்புதல் அளித்து இன்று இந்த நிகழ்வில் பங்கேற்றமைக்கு எங்களது நன்றியினைத் தெறித்துக் கொள்கிறோம்.

1937இல் மறைந்த மாயவரம் நடராசன் அவர்களை எம்மைப் போன்றோர்கள் பார்த்திட வாய்ப்பு கிடைக்கவில்லை; படித்து – கேட்டுத் தெரிந்து – தந்தை பெரியார் எடுத்துக் கூறி அறிந்த செய்திகள் பல. மாவீரர் மாயவரம் நடராசன் மறைவிற்குப் பின் அவர்தம் குடும்பத்திற்குப் பாதுகாவலராக இருந்த அவரது தம்பி சி.சுப்பையா அவர்களை நாம் அறிவோம். பதிவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். கலைஞர் மற்றும் நாம், பல தோழர்கள் அன்றைய திராவிட மாணவர் கழகத்தில் களப்பணிக்குச் சென்றபொழுது எங்களையெல்லாம் தங்க வைத்து நல்ல வாய்ப்பு வழங்கியவர். நீதிக்கட்சி அமைச்சர் முத்தையா முதலியார் 1928இல் வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்த பொழுது அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை ராஜதானி பதிவுத் துறையில்தான் அதனை நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாக சுயமரியாதை உணர்வுமிக்க பார்ப்பனர் அல்லாதார் பலர் பதிவுத் துறையில் பணியாற்றிடும் வாய்ப்பு கிடைத்தது. தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திரு மணத்தை பதிவு செய்தவர் சுயமரியாதைக்காரர் சி.டி.நாயகம் அவர்கள் தான். திருமணப் பதிவு முடிந்ததும் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வகையில் பதிவுத் துறையில் பணியாற்றிய சுயமரியாதைக்காரர்கள் எங்கெல்லாம் பணியிட, மாறுதலில் சென்றார்களோ அந்த இடங்களிலெல்லாம் சுயமரியாதை இயக் கத்தை தொடங்கி, வளர்த்தனர். பல தோழர்கள் இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டு வளர்ந்தனர். மாயவரம் நடராசன் அவர்களின் இளவல் சி.சுப்பையா பின்னாளில் பதிவுத் துறை ஜெனரலாக வரக்கூடிய நிலைகளை உருவாகியது. தமது பிள்ளைகளையும், தமது அண்ணன் குழந்தைகளையும், சுயமரியாதை, பொதுவுடைமை கொள்கை சார்ந்து வளர்த்தார். ஜெயச்சந்திரன் அவர்களுக்கு எப்படி லெனின் என அவரது தந்தையார் பெயர் இட்டாரோ அதேபோல சி.சுப்பையா தமது மகனுக்கு காரல் மார்க்ஸ் எனப் பெயரிட்டார்.

மாயவரம் நடராசனின் – அவரது குடும்பத்தாரின் சுயமரியாதை இயக்கப் பற்று குறித்து தந்தை பெரியார் எத்தகைய மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ‘குடி அரசில்’ வெளிவந்த இரண்டு இரங்கல் செய்திகளே அடையாளங்களாகும். ஒன்று மாயவரம் நடராசன் அவர்களின் தாயார் மறைந்தபொழுது, தந்தை பெரியார் விடுத்த இரங்கல் செய்தி ‘குடிஅரசு’ (5.2.1933) ஏட்டில் துணைத் தலையங்கமாக வெளிவந்துள்ளது.
“அம்மையாரவர்கள் கடைசி வரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர் களுக்கும், தோழர்களுக்கும் பொங்கிப் பொங் கிப் போடுவதில் சிறிதும் சலிப்பில்லாமல் சந்தோஷத் துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மையான தொண்டர்களுக்கு மாதக் கணக்காய் இளைப் பாறுவதற்கு மாயவரம் தோழர் நடராசன் அவர்கள் வீடு ஏற்றதாய் இருந்து வந்ததற்கும் காரணம், இந்த அம்மையாரின் அன்பு நிறைந்த உபசாரமேயாகும்.”
இந்த வரிகளுக்கு மேல் ஒரு சுயமரியாதைக்காரர் எப்படி இருப்பார் என்பதற்கு பெரியாரின் இரங்கல் செய்தியின் கடைசிப் பகுதி இப்படி இருந்தது!
“தோழர்கள் நடராசனும், சுப்பையாவும், அவர்களது சிறிய தந்தையார் முத்தையாவும் இயற்கையைச் செவ்வனே உணர்ந்த ஞானவான்களானதால் அவர்களுக்கு உலக வழக்கப்படியான ஆறுதல் தேவையில்லை என்றே கருதுகிறோம்.”
இப்படியாக நிறைவு பெறுகிறது அந்த இரங்கல் செய்தி.

அடுத்து மாயவரம் நடராசன் மறைந்த பொழுது, விடுத்த இரங்கல் செய்தி; ‘குடிஅரசு’ துணைத் தலையங்கமாக 11.7.1937இல் வெளிவந்தது.
“சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர்; தனக்கென ஒர் அபிப்பிராயம் அமைத்துக் கொள்ளாத போர் வீரராய் இருந்தார்.
பணங்காசைப் பற்றியோ, தண்டனை கண்ட னங்களைப் பற்றியோ, துன்பம் தொல்லை ஆகியவை களைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி – திடீரென்று முடிவெய்தி விட்டார் என்ற தந்தி வந்தது, நம்ப முடியவில்லை. மேலாக ஒன்றும் நினைக்க முடியவில்லை; எழுத பேனா ஓடவில்லை.”

தந்தை பெரியார் மாயவரம் நடராசன் மீது வைத்திருந்த அன்பு, மதிப்பீடு எத்தகையது என்பதன் எதார்த்தம்தான் அந்த இரங்கல் செய்தி.
சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் காலத்தில் – அதே காலக்கட்டத்தில்தான் 1925இல் பொதுவுடைமை இயக்கமும் இம்மண்ணில் தோன்றியது.
தந்தை பெரியாரும், மயிலாப்பூர் சிங்காரவேலரும் உற்ற தோழர்களாக இருந்து சமுதாயப் பணியினை ஆற்றி வந்தனர். அந்த உறவு இன்றைக்கு திராவிடர் கழகத்திற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்கிறது. அந்த உறவின் அடையாளமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வு மட்டுமல்ல; மக்கள் நலம் சார்ந்த பல்வேறு பணிகளிலும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஆடிட்டர் ஜெயச்சந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் நிர்வாகப் பணிகளுக்கு உதவியாக இருந்தவர். கொள்கை சார்ந்த இயக்கப் பணிகள் பலதரப்பட்டவை. பிரச்சாரப் பணி, களப்பணி மற்றும் முழுமையும் வெளியில் தெரியாத – எந்த விளம்பரமும் தேடாத இயக்கப் பணி. இந்த மூன்றாவது வகையில் பணியில் அக்கறை காட்டி தனது பங்களிப்பினை அளித்து வந்தவர்தான் ஆடிட்டர் அவர்கள். நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் நிர்வாகத்தில் தணிக்கைப் பணியில் இருந்தார். அதே போல பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பருவ வெளியீடுகளாக வரக்கூடிய ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆகியவற்றை புதுப்பித்தலுக்கானThe Registration of News papers for India (RNI) பணிகளை எந்தக் கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் செய்து வந்தார். அவ்வப்போது வந்து சந்தித்து ‘விடுதலை’ ஏட்டின் வளர்ச்சிக்கும் நிதி அளிப்பார். பங்களிப்பு பற்றிய செய்தி வேண்டாம் எனக் கூறிவிடுவார்.

விளம்பரம் வேண்டாத தணிக்கை வித்தகர் ஆடிட்டர் ஜெயச்சந்திரன். இன்றைக்கு இந்த படத்திறப்பு நிகழ்விற்கு வந்துள்ள பட்டயக் கணக்காயர் பட்டாளமே ஜெயச்சந்திரன் அவர்கள் தமது தொழில் சார்ந்த துறையில் எப்படி இருந்தார், எப்படிப்பட்ட ஒரு தொழில் பாரம்பரியத்தை வளர்த்துச் சென்றுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வுகளால்தான் இயக்கம் சார்ந்த முன்னோடிகள் எப்படி கொள்கைப் பூர்வமாக வாழ்ந்திருக்கிறார்கள்? அவர்களின் வழித் தோன்றல்கள் எப்படி வாழ்ந்தனர், எப்படி வாழ்ந்து வருகின்றனர் என்பதை பறைசாற்றுவதாக அமைகிறது. அந்த வகையில் சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் நடராசன் குடும்பத்தார் – மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மற்றும் மகள் மங்கையர்கரசி குடும்பத்தார் – வேர்களைப் போலவே விழுதுகளும் வளர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது இந்த இயக்கத்திற்கான பெருமைகளுள் ஒன்று. அந்த வகையில் மாயவரம் நடராசன் அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த பெரியார் திடலுக்கு நெருக்கமாக, இயக்கத்துடன் தொடர்பில் இருந்திட வேண்டும்; இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்பதைக் கூறி சுயமரியாதைச் சுடரொளிகள் மாயவரம் நடராசன் -ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் படத்திறப்பிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி பாராட்டி நிறைவு செய்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசனின் உரை
தாம் ஆற்றிய நினைவேந்தல் உரையில், ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் அவர்களின் தணிக்கைப் பணியின் நுண்மான் நுழைபுலத்தினை தோழர் இரா.முத்தரசன் தெளிவாக எடுத்துரைத்தார் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் உயர்மட்டக் குழு (Board of Management) இயக்குநர்களில் தாமும் ஒருவர் என்ற நிலையில் ஆடிட்டர் அவர்களின் ஆலோசனைகளை, அறிவாற்றல்களை நேரடியாக கண்டு கேட்ட அனுபவங்களை விளக்கிப் பேசினார். இயக்குநர்கள் கூட்டங்களில் பங்கேற்கும் பொழுது அவர்களுக்கு பங்கேற்று மதிப்பூதியம் (அதுவரை கொடுக்கப்படவில்லை) வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஏற்று “தாங்கள் பெற்றுக் கொண்ட மதிப்பூதியத்தை கட்சிக்கு அளித்தோம்” என்பது குறித்து பேசியது கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளர்களின் எளிமை, சேவை மனப்பான்மை வெளிப்பட்டது.

மேலும் ஓர் இக்கட்டான நிருவாக சிக்கல் வந்த பொழுது தமிழர் தலைவர் அதை அறிந்து தம்மிடம் கேட்டதாகவும், அப்பொழுது விவரங்களை கேட்டறிந்த ஆசிரியர் அவர்கள் ஒரு அனுபவபூர்வ அறிவுரையை வழங்கினார். “பொறுப்பினை அளித்திட திறமைசாலிகளைப் பார்க்காதீர்கள்!
(நம்பிக்கையானவர்களைப் பாருங்கள். திறமையை எப்பொழுது வேண்டுமானாலும் உருவாக்கி விடலாம்; நம்பிக்கைதான் அடிப்படைத் தேவை” என ஆசிரியர் கூற்றை தாம் மதிப்புமிக்க அறிவுரையாக அதனை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.
ஆடிட்டர் ஜெயச்சந்திரன் தனது வாழ்நாள் இறுதிவரை அறிவுரைகளை தங்களுக்கு வழங்கி வந்ததாகவும், தனக்குப் பின்னர் தணிக்கைக் குறித்த பணியினை ஆற்றிட உரியவர்களை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். ஆடிட்டர் அவர்களது தன்னலம் கருதாத, தான் பார்த்த தணிக்கைப் பணிக்கு ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ள மறுத்த அந்த மாண்பு என்றைக்கும் தங்கள் நினைவில் வைத்துப் போற்றக் கூடியது. ஆடிட்டர் புகழ் வாழ்க! என தோழர் இரா.முத்தரசன் பேசி முடித்தார்.

என்.சி.பி.எச் பதிப்பாசிரியர்ப.கு.இராசன்
ஆடிட்டர் ஜெயச்சந்திரனின் உடன் பிறந்த தங்கை மங்கையர்கரசி – பன்னீர்செல்வம் இணையரின் மகன் – ஆடிட்டர் அவர்களின் இறுதி நிகழ்வின்போது ஒருங்கிணைத்து நடத்தியவரான நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் பதிப்பாசிரியருமான ப.கு.இராசன் தாம் ஆற்றிய உரையில்,
ஆடிட்டர் (தனது மாமா) அவர்களின் தாத்தா (மாயவரம் நடராசன்) அவர்களின் தந்தையார் சிதம்பரநாதன் முதலியார் 1907களிலேயே அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினராக இருந்தவர். பொதுவுடைமைச் சிந்தனை மிக்கவர். காங்கிரசு கட்சியில் தீவிரவாளராக இருந்த அரவிந்த் கோஷ் அவர்களுக்கு அணுக்கமாகத் திகழ்ந்தவர். தந்தை வழியில் தனயனும் (மாயவரம் நடராசனும்) காங்கிரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டு – அதன் அடிப்படையில் தந்தை பெரியாருடன் தொடர்பு கிடைத்து அவருடைய கொள்கையின்பால் ஈடுபாடு கொண்டு, பெரியார் காங்கிரசை விட்டு வெளிவந்த பொழுது உடன் வெளிவந்தார்.
சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கிய பொழுது பக்கபலமாக, தளகர்த்தராக விளங்கியவர். 35 வயதில் காலமாகிவிட்டார். எனது மாமா ஆடிட்டர் அவர்களும் எனது தாயார் மங்கையர்கரசி அவர்களும் அவர்களது தந்தை முகத்தைப் பார்த்தது நினைவில் இல்லை எனக் கூறுவார்கள். தந்தை வழியில் சுயமரியாதைக்காரர்ககளாக வாழ்ந்து வந்தார்கள். எனது பெற்றோர் மங்கையர்கரசி – பன்னீர்செல்வம் திருமணத்தை ஆசிரியர் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். அந்த வகையில் எங்களது மாமா ஆடிட்டர் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வினை ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழகத்தின் சார்பாக நடத்தி வைத்தது எங்களுக்குப் பெருமை. என்றைக்கும் எங்களது நன்றிக்கு உரியது.

நினைவேந்தல் வழங்கியோர்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஆடிட்டர் இரா.இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் தணிக்கையாளர் ஜான் மோரிஸ், வழக்குரைஞர் பாண்டியன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
நிகழ்வில் ஆடிட்டர் அவர்களுடன் பழகிய பலதரப் பட்டவர்களும், உறவினர்களும், குடும்பத்தாரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் மு.இரா.மாணிக்கம் ஆகியோர் கவனித்தனர்.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வினையொட்டி ஆக்கரீதியாக ஒரு புதிய கல்விப் பணியினைத் தொடங்கிட தமிழர் தலைவர் உரியவர்களுடன் – தணிக்கையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார் என்பதுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment