ஸநாதனிகளின் காலம் அல்ல - சமூகநீதிப் போராளிகளின் காலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

ஸநாதனிகளின் காலம் அல்ல - சமூகநீதிப் போராளிகளின் காலம்!

பாணன்

சமூகநீதியின் குரல் எங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஸநாதனிகளின் அருவருப்பான நடத்தைகள் நர்த்தனமாடும்.

 7.11.1990ஆம் ஆண்டு இந்தியாவில் மண்டல் குழு ஆணையை அமல்படுத்திய விபிசிங் ஆட்சியை அகற்றி - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளைத் தரும் பாதையைத் திறந்துவிட்டாரே என்ற ஒரே காரணத்திற்காக - விஷ்ணு பிரதாப் சிங் என்ற வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது ஸநாதனக் கூட்டம்.

அன்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வி.பி.சிங் பேசியதில் சில... 

"அரசியலையும், மதத்தையும் கலப்பது என முடிவு செய்தால், நாட்டில் மதரீதியாக பிளவுகள் உருவாகும். இவ்வாறு உருவானால், பஞ்சாப், காஷ் மீர், வட இந்தியாவில் அதன் பாதிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? ராணுவத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாங்கள் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு,  எதிர்ப்பு இருந்தது. தற்போதைய பிரச்சினைக்குப் பின்னால் இதுவும் ஒரு காரணம்.

ஆயிரம் ஆண்டு பழைமைவாத முறையை நாங்கள் எதிர்த்துப் போராடி வருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு எதிர்க்கும்போது, சிக்கல்களுக்கு ஆளாவோம் என்பதில் அய்யமில்லை.

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கருத்துகளால், பொருளாதார அமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. அதனால் அந்த பதவியில் இருந்து நான் விலக வேண்டியிருந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, எனது கருத்துகளால் அரசியல் அமைப்போடு மோதும் நிலை ஏற்பட்டது. மீண்டும் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். நான் இப்போது பிரதமராக உள்ளேன். எனது சிந்தனைகள் தற்போதைய சமூக அமைப்புக்கு மாறாக உள்ளது. நான் இப்பதவியில் இருந்தும் விரைவில் விலக வேண்டும் என சொல்லப்படுகிறது."

அவரது விரிவான பேச்சில் முக்கியமான ஒன்றை கோடிட்டுக்காட்டினால் அதாவது ’மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாங்கள் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு,  எதிர்ப்பு இருந்தது. தற்போதைய பிரச்சினைக்குப் பின்னால் இதுவும் ஒரு காரணம்’ என்றால் - அன்று இதை பாஜகவினரும் இதர வலதுசாரி ஆதரவு அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். 

 இதில் என்னவியப்பு என்றால் வி.பி.சிங் பேசியது, உண்மைதான் என்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு லால்கிருஷ்ண அத்வானியே தனது சுயசரிதையில் ஒப்புக்கொண்டுள்ளார்..

நமது நாட்டில் எப்போதெல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கான சமூகநீதிக்குரல் அரசியல் மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் நேரம் வருகிறது  - அப்போது எல்லாம் அசிங்கங்களை அரங்கேற்றி மறக்கடிக்கும் ஒரு அருவருப்பான அரசியலை பஜனைக் கோஷ்டிகள் (பாஜக உள்பட இதர ஹிந்துத்துவ அமைப்புகள்) அரங்கேற்றும். வரலாறு இதனை அடிக்கடி நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டபோது, ​​ஜகஜீவன் ராம் பிரதமராக அமர்த்தப்படும் சூழல் உருவானது.

 அப்போது இன்றைய பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திராகாந்தியின் மருமகளுமான மேனகா காந்தி நடத்திய இதழின் நடுப்பக்கத்தில் ஜகஜீவன்ராமின் மகன் தொடர்பான படம் வெளியானது. இந்த மண்ணின் எஸ்சி, எஸ்டி ஒபிசி மக்களின் குரலாக ஒலிக்கும் ஒருவர் பிரதமராக வரப்போகிறார் என்று ஒட்டுமொத்த மண்ணின் மைந்தர்களும் எதிர்பார்த்த நேரத்தில் வெளியான அந்தப் பத்திரிகையின் படமானது பாபுஜெகஜீவன்ராமின் அரசியல் எதிர்காலத்தையே முடக்கிவைத்தது. 

கலைஞரின் அரசியல் சகாப்தம் கறைபடியாத ஒன்று. ஆனால், அவர் மீது போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை இன்றளவும் விவாதம் என்ற பெயரில் பேசிவரும் வலதுசாரிகள் - சட்டைப் பொத்தானைக் கூட போட மறந்துவிடுவார்கள். ஆனால் கலைஞர் பற்றி குறைசொல்லி குறிப்பெழுதுவதை மறக்கமாட்டார்கள் - திரிணூல் கூட்டம் நடத்தும் ’பத்ரிகா’விலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பார்கள். தன்னுடல் மக்கள் வெள்ளத்தில் அமைதியாக இறுதி உறக்கத்தில் இருந்த போதும் வழக்காடி வென்றவர் கலைஞர் என்பது குறித்து எல்லாம் எந்தத் திரிணூல் ஊடகமும் மறந்தும் எழுதிவிடாது.  ஆனாலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுதிக்கொண்டே இருப்பார்கள்..   வியப்பு என்னவென்றால் தற்போது டில்லி பாஜகவரை திமுக குறித்து பேசத்துவங்கிவிட்டார்கள். ஆனால் கலைஞரோ Troy டிராய் போரில் பலசாலியான போகரயிஸை Boagrius வென்ற மாவீரன் அக்லீஸ் Achilles போல் சாதுர்யமாக செயல்பட்டு தன்னுடைய அரசியல் எதிர்களை துவம்சம் செய்து அரசியல் களத்தில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக களம் கண்டு வென்றார். 

 வடக்கிலும் இதே சூழல் தான் - லாலுபிரசாத் தனது அசாத்திய திறமையால் கிட்டத்தட்ட முடங்கிய நிலையில் இருந்த ரயில்வேத் துறையை பொதுத்துறை நிறுவனங்களிலேயே முதலிடத்தில் கொண்டுவந்தார். இவரது நிர்வாகத்திறமைகளைக் கண்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் அவரை சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்து பெருமைப்படுத்தியது. 

முக்கியமாக அவரது காலத்தில் ரயில்வேத் துறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பெரும் பதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டது. இதை ஜீரணிக்க முடியாத குள்ளநரிக் கூட்டம் அவரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி முடக்கிவிட்டது. 

 இருப்பினும் பீகார் சமூகநீதிப் பாதையில் இருந்து விலகவில்லை, இந்தியாவில் சமூகநீதிக் களம் எப்போதும் கனன்றுகொண்டே இருக்கும் மாநிலங்கள் 3. மகாராட்டிரா, பீகார் மற்றொன்று தமிழ்நாடு, தமிழ்நாட்டைத் தவிர மற்ற இரண்டு மாநிலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போது எல்லாம் அரசியலில் அதிகாரம் பெறுகிறார்களோ அப்போது எல்லாம் அவர்கள் மீது பழியைச் சுமத்தி - அவர்களின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்டும் வேலை அதிகம் நடந்தது. 

மகாராட்டிராவில் யசவந்தராவ் சவான், சரத்பவார், அசோக் சவான் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் அரசியலில் கோலோச்சிய போது அவர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை திரிணூல் பத்திரிகைகள் முதல் பக்கத்திலேயே தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்தன.

பிரதமராகும் வாய்ப்பு சரத்பவாருக்கு கிடைக்கவிருந்ததை உத்தரப்பிரதேச பார்ப்பனக் கூட்டம் தந்திரமாக தடுத்தது மட்டுமல்லாமல் அவர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே தேசிய அரசியலில் இருந்து அவரை அகற்ற முனைந்தனர்.  

இன்று சரத்பவாரின் அரசியல் முகமாக கருத்தப்படும் அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே மீது எந்த குற்றச்சாட்டை சுமத்தலாம் என்று மராட்டிய மற்றும் தேசிய பார்ப்பன ஊடகங்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு காத்திருக்கின்றன. 

  இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வெளிக்கொண்டு வர யாருமே இல்லை என்பது ராகுல் காந்தியின் ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது இதை "அம்ருத் கால்" என்று பஜனை கோஷ்டிகள் கொண்டாடி வருகின்றன. 

 ஆனால் இந்த அம்ருத்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைச் சொல்வதற்கு ஒரே ஒரு ஊடகவியலாளர் கூட இல்லை என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.

 2023 செப்டம்பர் மாதம் பீகார் அரசு வெளியிட்ட ஜாதிவாரி ஆய்வறிக்கை இந்திய அரசியலைப் புரட்டிப் போட்டது. இதுவரை ராமர் கோவிலை வைத்தே 2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு கனவுலகில் மிதந்த மோடி அண்ட் கம்பெனிகளுக்கு பேரிடியாக விழுந்தது நிதீஷ் குமார் வெளியிட்ட ஜாதிவாரி ஆய்வறிக்கை. 

 இதன் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கத்துவங்கியுள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்புகளும் அதன் அரசியல் அமைப்பான பாஜகவும், பாபு ஜெகஜீவன் ராம், யசுவந்தராவ், சவான் மற்றும் லாலுபிரசாத் மீது குற்றச்சாட்டுகளை வீசி நிதிஷ்குமாரின் அரசியலையும் முடிக்க திட்டமிட்டு வந்தனர். 

 இந்த நிலையில் ஜாதிவாரி ஆய்வறிக்கையை அடுத்து அவர் பொருளாதர ரீதியில் எடுத்த ஆய்வறிக்கையையும் அடுத்து வெளியிட்டார். 

 அப்போது அவர் ஆற்றிய உரையை திரிணூல் கூட்டத்திற்கே உரித்தான அசிங்கங்களைப் பூசத் துவங்கிவிட்டார்கள். 

அப்படி என்ன பேசி இருக்கிறார் -   சட்டமன்றத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் பின்வருமாறு பேசுகிறார்:

ஆணாதிக்கம் இங்கே அதிகம் உள்ளது. பாலியல் உறவின் போது ஆண்கள் மட்டுமே அனைத்துமாக உள்ளனர். நாள்தோறும் பாலியல் இச்சைகளை பெண்கள் மீது காட்டுகின்றனர். இவர்களின் பொறுப்பற்ற சுயநலத்தால் குழந்தை பிறப்பு அதிகரிக்கிறது. படித்த பெண்களாக இருந்தால் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தக் கூறுவார்கள்  குழந்தைப் பிறப்பு தடுக்கப்பட்டு விடும். இப்படி படித்த பெண்கள் அதிகரிப்பதினால்தான் பீகாரில் மக்கள் தொகை கட்டுக்குள் வருகிறது.' என்று கூறினார். இதையே பொதுவாக பேசும் சொற்களில் கூறினார். அதில் எந்த ஆபாசமும் இல்லை இது ஆணாதிக்கத் தனமாக இருக்கிறது; பெண்களை இழிவுபடுத்துகிறது, என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகிறது

மணிப்பூரில் இளம்பெண்கள் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போதும், ஹத்ரஸில் பாலியல் கொடுமைக்கு ஆளாகிய சிறுமியை கொலை செய்த கும்பலை காப்பாற்றும் நோக்கில் அந்த மாநில காவல்துறையே ஊருக்கு வெளியே குப்பைமேட்டில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்த போதும், சுமார் ஒரு மாதமாக மல்யுத்த விராங்கனைகள் டில்லி சாலைகளில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய போதும், இதர முக்கிய வன்கொடுமைகள் பற்றியெல்லாம் இன்று வரை வாயையே திறக்காத பிரதமர் மோடிக்கு நாட்டின் நலனுக்காக குடும்பக் கட்டுப்பாடு பற்றி பொதுவான சொற்களில் கூறிய நிதிஷ்குமாரைப் பற்றி மட்டும் ஒரே நாளிலேயே விமர்சித்து விட வேண்டும் என்று தோன்றியிருக்கிறார். 

 உலகெங்கும் பெண் கல்வி அதிகரித்து, கலவியின்போது என்ன செய்வது என்பது குறித்து கணவனிடம் பேசும் உரிமை அவர்களுக்கு கணிசமாக அதிகரிக்கிறது. பாலியல் கல்வி கிடைத்து கலவி முறைகள் மற்றும் கருத்தடை குறித்த தெளிவு அதிகமாக உள்ள பிராந்தியங்களில் மக்கள் தொகை கணிசமாக குறைகிறது.

அறிவியல் பூர்வமாக இந்தப் பிரச்சினையை அணுகும் எவரும் நிதிஷ் குமார் பேசிய கருத்தை ஆமோதிக்கவே செய்வார்கள். பாலியல் கல்வியை ஆதரித்து முன் நிற்பார்கள். ஆனால் வடக்கே கிளம்பியுள்ள ஜாதிவாரி ஆய்வறிக்கையின் மூலம் சமூகநீதியின் எழுச்சி எஸ்சி, எஸ்டி, ஒபிசி மக்களிடையே ஏற்பட்டுவிட்டதை மடைமாற்றும் வேலையில் இறங்கிய சங்கப்பரிவார கூட்டங்கள்  கலாச்சார மற்றும் மதவாத மூடத்தனங்களுடன் இந்தப் பிரச்சினையை தந்திரமாக கையில் எடுத்துள்ளன. 'பாரதப் பெண்களை அவமானப்படுத்தி விட்டார் பாரு!' என்று தேர்தல் மேடைகளில் அழுவார்கள்.   சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் ரீதியில் புரட்சிகர கருத்தை தெரிவித்த குஷ்பு போன்றவர்களை நிதிஷ்குமாருக்கு எதிராக அறிக்கை வெளியிட வைத்து நிதிஷ்குமாரை நாடுமுழுவதும் உள்ள மக்களிடையே அசிங்கப்படுத்தி அவரது அரசியல் வாழ்க்கையை கொச்சைப்படுத்தப் பார்க்கிறார்கள்.

 ஆனால் இது ராஜாஜியின் காலம் அல்ல, 

மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் காலம், திருமா காலம், தேஜஸ்வி,  ஆதித்ய தாக்கரேவின் காலம், ராகுல்காந்தி - பிரியங்கா காந்தியின் காலம், கனிமொழி - சுப்ரியா சுலேக்களின் காலம், பிரியங்க கார்கேவின் காலம் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் மதவாதிகளின் ஒவ்வொரு பிம்பமும் பொதுவெளியில் உடைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. 

இது ஸநாதனிகளின் காலம் அல்ல - சமூகநீதிப் போராளிகளின் காலம் என்பதை மறந்துவிடவேண்டாம்.

No comments:

Post a Comment