ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: இயக்கத்தில் இருக்கும் மூத்த பெரியார் தொண்டர்கள் மறைவுறும்போது தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

- பா.முகிலன், சென்னை

பதில் 1: வெளியிடாமல் - எனது 'கொடுமையான துயரத்தை' அடக்கிக் கொண்டு - அவர்களை வழியனுப்புகிறேன்.

குருதி உறவுகளைவிட கொள்கை உறவுகள் - பல ஆண்டுகள் எனது லட்சியப் பயணத்தில் ஒன்றாகக் களமாடிய வீரர், வீராங்கனைகளின் - பயன் கருதாது வாழ்ந்த லட்சியத் தொண்டர்களின் - தோழர்களின் இழப்பை மறக்க - துன்பத்தை துறக்க - பல நாள் ஆகிறது என்பதே உண்மை.

என்றாலும், இயற்கை வழியை ஏற்பதும், விட்ட பணியைத் தொடர்வதும் அவர்களை மதிக்கின்ற - போற்றுகின்ற மற்றொரு ஆறுதலாகும் - நமக்கு நாமே!

---

கேள்வி 2: பணமதிப்பிழப்பு அறிவித்த (8.11.2016) மோடி எனக்கு 50 நாள்கள் கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் சிரமப்பட்டால் என்னை முச்சந்தியில் வைத்து தண்டனை கொடுங்கள் என்றாரே?

- வே.மாரிமுத்து, வேலூர்

பதில் 2: 2024 பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டு மூலம் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். அதுவரை ஒவ்வொரு நாளும் உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற செய்திகளை - பழையவைகளை - வாக்காளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருங்கள்; காரணம் பொது மக்களுக்கு மறதி அதிகம். (றிuதீறீவீநீ னீமீனீஷீக்ஷீஹ் வீs ஸ்மீக்ஷீஹ் ஷிலீஷீக்ஷீt என்பது ஒரு முதுமொழி)

---

கேள்வி 3: ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்ன காரணத்திற்காக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்கிறார்கள்?

- க.ஆறுமுகம், மதுரை

பதில் 3: மக்களையும் கொள்கை எதிரிகளையும் அச்சுறுத்திட, அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டை அமளிக் காடாக்கிட அஸ்திவாரம் போடவே!

---

கேள்வி 4: ஆவின் நிறுவனம் தொடர்ந்து குறி வைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறதே?

- வா.பார்த்தசாரதி, பொற்பந்தல்

பதில் 4: குற்றம் சுமத்த வேறு அதிக சரக்கு கிட்டாததாலேயே இருக்கலாம்! முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் ஊழலை சிறிதாகக் காட்டவும்கூட இது ஓர் உத்தியாக இருக்கலாம்!

---

கேள்வி 5: "கல்வியும், மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளாரே? அப்படி என்றால் பாஜக ஆளும் மாநிலங்கள்?

- ம.நீலமேகம், திண்டிவனம்

பதில் 5: பழுதடைந்த பார்வைக்காகவே 'மனுமுறை' தவறாது ஆட்சி செலுத்துகிறார்கள்.

---

கேள்வி 6: பீகார் ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் பொருளாதார ரீதியிலான அடிப்படையிலும்கூட இட ஒதுக்கீடு எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவிற்குத்தான் அதிகம் கொடுக்க வேண்டியிருக்குமே?

- ஆ.யாப்புமொழி, தஞ்சை

பதில் 6: உண்மை அதுதான். மனுதர்மப்படி சூத்திரன் பொருள் சம்பாதித்தால்கூட அது அவனுக்கு உரியதல்ல; அடித்தும் பிடுங்கிக் கொள்ளலாம் என்பதால் என்றும் ஏழைகள்தானே அவர்கள்! அதனால் உங்கள் கருத்து உண்மைதான்!

---

கேள்வி 7: 60 மாணவிகள் தலைமையாசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டமாணவிகள் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமருக்கு புகார் மனு கொடுத்த அவலம் அரியானா மாநிலத்தில். ஆனால் இதை ஊடகங்கள் சாதாரணமாக கடந்து செல்கின்றனவே?

- க.காளிதாசன், காஞ்சி

பதில் 7: பலே பலே 'குஜராத் மாடல்'. "சாப்கா விகாஸ்" ஆட்சியாளர்களின் சாதனை!

---

கேள்வி 8: தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் தொடர்பான இடங்களில் வாரக்கணக்கில் அமலாக்கத்துறை சோதனை - தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்க்கிறதே?

- மா.சாக்கியமுனி, ஈரோடு

பதில் 8: தோல்வி பயம்; மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லையே என்ற எரிச்சல்தான் அடிப்படை நோக்கம்!

---

கேள்வி 9: பங்களாதேஷ், மியன்மாரிலிருந்து தமிழ்நாடு வந்து தொழில்நகரங்களில் வேலை செய்கின்றனர். தேசிய புலனாய்வு முகமை வேடிக்கை பார்ப்பது ஏன்?

- நா.மாயன், செங்கல்பட்டு

பதில் 9: ஏதோ இப்போதுதான் சில செய்திகள் வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!

---

கேள்வி 10: தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் என்கிறது தகவல். தமிழ்நாடு ஆளுநர், மேனாள் காவல்துறை அதிகாரி, மேனாள் முதலமைச்சர் ஆகியோர் இதற்கு மாறாக சொல்கிறார்களே ஏன்?

- எஸ்.நல்லபெருமாள், வடசேரி

பதில் 10: எப்போதும் உண்மை பேசியே பழக்கம் இல்லாதவர்களால் எப்படி இப்போது மட்டும் உண்மை பேச முடியும்? அவர்களது வழமையான பழைமை. விட்டுத் தள்ளுங்கள்!


No comments:

Post a Comment