நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை கடிதம்

சிதம்பரம், நவ.10- சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் இந்து சமய அற நிலையத் துறை  ஆய்வாளர் நரசிங்க பெருமாள் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நடராஜர் கோவிலை ஆய்வு மேற்கொண்டபோது கோயிலின் தெற்கு ராஜ கோபுரம் அருகில் இடது மற்றும் வலது புறத்தில் இடம் சுத்தப்படுத்தப்பட்டு மதில் சுவரில் மறைப்புகள் கட்டப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. மேற்படி சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் என்ன பணிகள் மேற்கொள்ள உள்ளது  என்பது குறித்தும் கட்டுமானங்கள் மேற்கொள்ள தொல்லியல்துறை,  நகராட்சி அனுமதி - இந்து சமய அற நிலையத்துறை அனுமதி பெறப்பட்டு இருப்பின் அது குறித்து விவரத்தினை அளித்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது.  மேற்படி இக்கோயிலின் புதிய கட்டுமானங்கள் கட்டுவது குறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தால் உத்தர விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்ள இடமானது சுத்தப்படுத்தப்பட்டு மறைப்புகள் கட்டப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.  இந்து சமய அற நிலையத்துறை விதிகளின் படி தொல்லியல் துறை கருத்துரு பெற்று மண்டல மாநில குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் மேற்கொண்டால் இத்துறை ரீதியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment