சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டுப் பதிலளித்தார்!

சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2023) ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (29.11.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது.

நேற்றிரவு விடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில், மழை நீரை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2023) ஆய்வு செய்தார். கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுப்பாட்டு மய்யத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குப் பதிலளித்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நீர் அகற்றம் தொடர்பாக சென்னை முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மழைநீர் உடனடியாக 

அகற்றப்பட்டது

முன்னதாக, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை அகற்றும் பணிகளை விரைவுப்படுத்தினர். மேயர் பிரியா நேற்றிரவு (29.11.2023) முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக, பெரும்பாலான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment