பெரியார் மண்ணாக இந்தியா மாறாதவரை இந்த ‘‘ஏமாற்று வித்தைகள்'' தொடரத்தான் செய்யும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

பெரியார் மண்ணாக இந்தியா மாறாதவரை இந்த ‘‘ஏமாற்று வித்தைகள்'' தொடரத்தான் செய்யும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

*  தாய்லாந்து நாட்டில் உலக ஹிந்துக்கள் மாநாடு 8ஸநாதனத்தைக் காப்போம் என்ற உறுதி ஏற்பு!

* ஸநாதனம் என்றால் ‘‘வருணதர்மம்'' என்று காஞ்சி சங்கராச்சாரியார் எழுதியுள்ளாரே!

ஜாதி பேதம் வேறுபாடு கூடாது என்று சொல்பவர்கள் -  ஜாதியே ஒழியவேண்டும் என்று சொல்லாதது ஏன்?

தாய்லாந்து நாட்டில் நடந்த உலக ஹிந்துக்கள் மாநாட்டில் ஸநாதனத்தைக் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் பொருள் என்ன? ஜாதியைக் காப்பாற்றுவோம் என்பதுதானே - இவர்களை அடையாளம் காணவேண்டும். இந்தி யாவே பெரியார் மண்ணாக மாறினால்தான் ஜாதி ஒழிக்கப்படும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், அதன் செயலாளர்  தத்தாத்ரேய ஹோசாபாலே ஆகியோர் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடை பெற்ற உலக ஹிந்துக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ‘‘ஸநாதனத்தைக் காக்க உறுதி எடுத்துக்கொள்வோம்'' என்று கூறி, தீர்மானங்களை நிறைவேற்றித் திரும்பி யுள்ளனர்!

ஸநாதனம் என்ற சொல் வேதத்தில் உண்டா?

தாய்லாந்து நாடு அடிப்படையில் புத்த மதத்தினைப் பின்பற்றிவரும் நாடு என்றாலும், முந்தைய படை யெடுப்புகளாலும் ஹிந்து பெயர்களை அங்கே அவர்கள் சிலவற்றில் வைத்துக்கொண்டுள்ளனர் என்பதையும், பவுத்தத்தை ஊடுருவிய பல பிரிவுகளின் தாக்கத்தையும் அதுபோன்ற நாடுகளில் காண முடியும்!

‘‘ஸநாதனத்தைக் காப்போம்'' என்று முழக்கமிடுகிற ஹிந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பார்த்து நாம் வைக்கும் முதல் கேள்வி,

‘ஸநாதனம்' என்ற சொல் வேதங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள சொல்லா? அப்படி ஒரு சொல் உண்டா? ஏன் ‘ஹிந்து' என்ற சொல்லே அம்மதத்தின் மூலாதாரமாய் சுட்டிக்காட்டப்படும் வேதங்களில் உண்டா? ஆதாரம் காட்டுவார்களா?

வேத மதம், ஆரிய மதம், வைதீக மதம் (வேதம் 4  வைதீகம். அதுபோலவே புராணம் 4   புரோகிதம் என்ற வேர் சொல்லிலிருந்து கிளைத்தவை).

பல உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலும்கூட ‘ஹிந்து' என்ற சொல் எந்த மொழி,  அதன்மூலம் எது என்று கண்டறியப்படவில்லை. நடைமுறையில் அது பயன் படுத்தப்படுவதால், ஒரு குறிப்பிட்ட சாராரை, அவர்களது வாழ்க்கை முறைபற்றிய விவகாரங்களில் அச்சொல் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது அவ்வளவுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸநாதனம் என்றால் வருணதர்மம் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே!

ஸநாதனம், வைதீக மதம் ஆகிய ஆரிய ஹிந்து மதத்தின் முக்கிய வியாக்கியான கர்த்தாக்களில் ஒரு வரான மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர், அவரது ‘‘தெய்வத்தின் குரல்'' நூலிலேயே, ‘‘‘ஹிந்து' என்ற பெயர் அந்நியர்கள் நம் மதத்திற்கு இட்ட பெயர்தானேயொழிய, அது நம்மால் வைக்கப்பட்ட பெயர் அல்ல'' என்று தெளிவாய் குறிப்பிட்டுள்ளார்!

அவரே இன்னொன்றையும் எழுதியுள்ளார். ‘தெய்வத்தின் குரல்' முதல் பாகம் பக்கம் 282 இல் ஸநாதனம் என்பதற்கான அடைப்புக் குறியில் ‘வருண தர்மம்' என்று குறிப்பிட்டுள்ளாரே!

‘ஸநாதனம்' என்ற சொல் புழக்கமே 20, 21 ஆம் நூற் றாண்டிலிருந்துதான் வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக - காசி ஹிந்து கல்லூரி பாடப் புத்தகம் - வி.டி.சவார்க்கரின் ‘‘ஹிந்துத்துவா'' நூலில் உள்ளபடியும், அவருக்குமுன் திலகர், மாளவியா போன்ற பார்ப்பனத் தலைவர்களாலும் பிற்காலத்தில்தான் உருவாக்கப்பட்ட சொல் ஆகும்.

அம்மதத்தின் தீவிர வாதத் தன்மை கோட்பாடு ‘‘பெண்கள் பாவ யோனி யிலிருந்து பிறந்தவர்கள்'', ‘‘பெண்கள் நமோ சூத் திரர்கள்'' - பிறப்பிலேயே பிரம்மாவின் காலில் பிறந்தவன் சூத்திரன் என் பன மனுதர்மத்தை, கீதையை சுட்டும் வருணா சிரம தர்ம பாதுகாப்புதான் அது!

ஸநாதன தர்மப்படி ஹிந்து எவரும் கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்பதுதானே அதன் கட்டளை.

அந்த மாநாடே கடல் தாண்டிச் சென்றவர்கள் சந்திப்புதானே! அப்போது ஸநாதனம் பிழைத்துள் ளதா?  இன்றும் கடைப் பிடிக்கப்படுகிறதா? அட, வித்தைக்காரர்களே!

பவுத்தம், வேதத்தையும், கடவுளையும் ஏற்கிறதா? ஆத்மாவை ஏற்கிறதா? என்ற கேள்விகளுக்கு இவர்கள் என்ன பதில் கூற முடியும்?

புத்த மார்க்கத்தை ஊடுருவி அழித்தது ஆரியம்தானே!

ஆரியத்தை எதிர்த்து முழங்கியவர்தான் புத்தர் என்பதை மறைத்து, அது இங்கே வலுவிழக்க பவுத் தத்தை ‘‘அணைத்தே அழித்து'' எதை மாற்ற, அழிக்க, ஜாதி, கடவுள், ஆத்மா மறுப்பைக் கொண்டு உருவான அந்த மார்க்கத்தை  அணைத்தே அழித்து தன்னடக்க மாக்கிக் கொண்டு தங்கள் விருப்பம்போல வியாக்கி யானம் செய்வது இவர்களது வாடிக்கையாகி விட்டதே!

புத்தரை மகாவிஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் என்பது எத்தகைய மோசடி!

வெகு கவனமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், ஜாதி பேதம், வேறுபாடு (Discrimination) கூடாது என்றுதான் இன்றும் கூறுகிறார்களே தவிர, ‘‘ஜாதியை ஒழிப்போம்'' என்று கூற மறுப்பது - அதில் ஒதுங்கி அல்ல, பதுங்கிப் பேசுவது அவர்களது இரட்டை வேடத்தைக் காட்டவில்லையா?

ஆர்.எஸ்.எஸின் தத்துவகர்த்தா எம்.எஸ்.கோல்வால்கர் ஜாதியை ஒழிக்கவே கூடாது என்று எழுதியுள்ளாரே, பதில் என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவகர்த்தா எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக்கொத்து' (அ) ‘ஞானகங்கை'யில் ‘‘ஜாதியை ஒழிக்கவே கூடாது; அது இருந்தாக வேண்டும்'' என்று எழுதியதை - அதனையே இப்போது கொஞ்சமாக மறைத்து, மாற்றித்தானே பேசுகிறார்கள்.

இது பச்சை சந்தர்ப்பவாதம் அல்லவா!

இரட்டை நாக்குள்ள பேச்சின் இரட்டை வேடம் அல்லவா?

எத்தனை காலம்தான் இவர்கள் ஏமாற்றுவார்கள் -

பெரியார் மண்ணாக இந்தியா முழுவதும் மாறும்வரை இந்த ஏமாற்று வித்தைகள் தொடரும்!

கண் விழிப்பாளர்கள் மக்கள்!!

விஞ்ஞானத்தையே பயன்படுத்தி அஞ்ஞானம் பரப்பும் வித்தைக்காரர்கள் அல்லவா அவர்கள்!

மக்கள் புரிந்துகொள்வார்களாக!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.11.2023


No comments:

Post a Comment