காவி - கிரிக்கெட்(டு)! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

காவி - கிரிக்கெட்(டு)!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது.

எதிலும் ‘காவி' என்ற புத்தியோடு இதிலும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு - அதன் பிரதமர் தன் மூக்கை நுழைத்தார். காவி உடை இந்தியக் கிரிக்கெட்டில் நுழைக்கப்பட்டது.

அகமதாபாத்தில் மோடியின் பெயரால் மிகப்பெரிய விளையாட்டரங்கம் உருவாக்கப்பட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி 19.11.2023 அன்று மாலை நடைபெற்றது. பிரதமர் மோடியே நேரில் பார்த்தார்.

இந்தியக் காவி கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லும் - அதையும் அரசியல் ஆக்கலாம் - தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் (இதை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கூறியுள்ளார்) என்று மனப்பால் குடித்த பிரதமரின் ஆசையில் மண் விழுந்தது.

அதே மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியபோது, இந்தியக் காவி ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து, ‘ஜெய் சிறீராம்', ‘பாரத் மாதா கீ ஜே!' என்று முழக்கம் போட்டு, உலக அரங்கில் இந்தியாவைத் தலைக்குனிய வைத்தனர்.

ஆம், விளையாட்டில் கூட இந்த சங் பரிவார்க் கூட்டம் தன் காவி அசிங்க அரசியலைப் புகுத்துகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா ஜெயிக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கும்பிடு போட்டதென்ன? கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ததென்ன?

எதுவும் கை கொடுக்கவில்லையே! மற்றவற்றில் எல்லாம் தகுதி, திறமை பேசும் வல்லடி வழக்குக்காரர்கள் உண்மையிலேயே திறமையைக் காட்டவேண்டிய விளையாட்டில் மட்டும் வேறு பார்வையைக் காட்டுவது ஏன்? இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

குறிப்பு: 1982 முதல் 2015 ஆம் ஆண்டுவரை இந்த விளையாட்டு மைதானத்துக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் பெயர் இருந்தது. அதற்குப் பின்னர் பி.ஜே.பி.யின் மோடி ஆட்சியில் ரூபாய் 800 கோடியில் புதுப்பித்து உருவாக்கப்பட்ட மைதானத்துக்குத் தனது பெயரை சூட்டிக் கொண்டார் மோடிஜி. 

கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீசும் முனைகளுக்கு முறையே அதானி - அம்பானி பெயரையும் சூட்டியதை என்ன சொல்ல!

இந்தியாவுக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்த பார்ப்பனரல்லாதாரான கபில்தேவ், தோனிக்கு அழைப்பு இல்லை.

எப்படி இருக்கிறது?

-  மயிலாடன்

No comments:

Post a Comment