‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!

* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!

* உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று!

2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும் வெளிப்படைத்தன்மை - நம்பகத்தன்மை இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

எதிலும் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேர்தல் பத்திரம் என்ற சட்டத்தின் பெயரில் மக் களுக்கு இருந்த தகவல் அறியும் உரிமையைப் பறித்துவிட்டது. ஜனநாயகம், மக்கள் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் கருப்புப் பணத்தின் திருவிளையாடல் தேர்தலின்போது மிக அதிகம்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை - முந்தைய சட்டமும் - மோடி அரசின் சட்டமும்!

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், அதை வாங்கிட வாக்காளர்கள் ஆவலுடன் இருப்பதும் நம்பர் ஒன் ஒழுக்கச் சிதைவு அல்லவா?

தேர்தல் நிதி என்று அரசியல் கட்சிகளுக்குக் கொடுப் பதில்கூட முந்தைய அரசுகள் நடைமுறைப்படுத்திய சட்ட விதிமுறைகளை - ஊழலை ஒழிக்கவே வந்துள் ளோம் என்று கூறி, 2014 இல் ஆட்சிக்கு வந்த 

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஒன்றிய அரசு, 2017 இல் தேர்தல் பத்திரம் (Electoral Bond) என்று நிதி மசோதாவே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றியது. இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தேவையில்லை.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாமூலம் (எஸ்.பி.அய்.) தனி நபர்களும், நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு அடையாளம் வெளியே தெரியாமல் 2000 ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்வரை கொடுக்கலாம் என்று சட்டத் திருத்தம் நிறைவேற்றியது.

முன்பு உள்ள சட்டப்படி, தேர்தல் நன்கொடைகள் - கம்பெனி சட்டப்படி - மூன்றாண்டுகளுக்குரிய நிகர லாபத்தில் 7.5 சதவிகித நிதியைத்தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும். இந்த சட்டப் பிரிவை மோடி அரசு நீக்கிவிட்டுத்தான், இந்தத் தேர்தல் பத்திரம் வாங்கி அதன்படி வெகுதாராளமாய், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்ற சட்டம் ‘நீர்மேல் எழுத்தா?'

இதன்மூலம் பொது ஒழுக்கம் வளருமா? இது சம்பந்தமாக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வில் இந்தத் தேர்தல் பாண்டு முறை குறித்து கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு, இன்றுமுதல் விசாரணைக்கு  வரும் நிலையில், இந்திய அரசு சார்பில் அதன் தலைமை வழக்குரைஞர் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

(நிதி மசோதா என்றால் விவாதமில்லாமல் நிறை வேற்ற வழிவகை செய்யும் சட்ட முறை என்பது பொருள். அப்படியே இந்தத் தேர்தல் பத்திரம் முறையும் நிறைவேறியது).

தகவல் அறிய பொதுமக்களுக்கு 

உரிமை இல்லையாம்!

ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘‘தேர்தல் நிதிப் பத்திரம்மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்படுபவர்களின் விவரங்களை அறிய பொது மக்களுக்கு உரிமை இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இல்லையா?

இதுபற்றி விரிவான விவாதம் நடத்தப்படாமல் தடுக்க ‘நிதி மசோதா' முத்திரை குத்தி நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் பத்திரம்மூலம் அதிகமான நன்கொடை பெற்றதும் பா.ஜ.க.வே!

இப்போது பகிரங்கமாகவே பொதுமக்களுக்கு இத்தகவலைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை கிடை யாது என்பது, ‘‘குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல - குழியும் பறித்த கதை''யாகும்!

2014 இல் இவ்வாட்சி - பிரதமர் மோடி தலைமையி லான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வருமுன் என்ன உறுதிமொழி சொன்னார்கள்?

வெளிப்படைத்தன்மையோ - நம்பகத்தன்மையோ இல்லாத சட்டம்!

1. எதிலும் வெளிப்படைத் தன்மை (Transparency)யும், நம்பகத்தன்மை (Credibility)யும் இருக்கும் என்று கூறியது இப்போது நடக்கிறதா? நேர்முரணாக அல்லவா ஒன்றிய பி.ஜே.பி. அரசு அதிவேகமாக நடைபோடுகிறது.

(அ) தற்போதுள்ள நிதிச் சட்டங்கள்படி, சாதாரணமாக ரூ.2000-த்திற்கும் மேல் எந்த அறக்கட்டளைகளாவது நன்கொடை கொடுத்தால், அவர்களுக்கு வரி விலக்கு (80-ஜி) கிடைக்காது!

(ஆ) சொந்த உறவுகளுக்கு ரூ.2 லட்சத்திற்குமேல் ரொக்கமாக கொடுத்தால், அதை அவர் வாங்க முடியாது. மீறி வாங்கினால், 100 சதவிகிதம் அபராதம் கட்டியாக வேண்டும்!

(இ) ஒரு வியாபாரியோ அல்லது வேறு பணிக்கோ ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக (பணமாக) ஒரே நபரிடமிருந்தோ, ஒரு பொருள் வாங்கிய வரிடமிருந்தோ பெற்றால் அது சட்டப்படி தவறாகும்! 100 சதவிகிதம் அபராதம் கட்டியாகவேண்டும்!

இப்படி அன்றாட நடவடிக்கைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடு.

ஆனால், யார் வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாய்க்கு தேர்தல் பாண்டு மூலம் கட்சி நிதி பெறலாம் என்றால், அது அரசியல் அறமா? பொது ஒழுக்கச் சிதைவுக்குக் கதவு திறப்பதல்லவா?

மக்கள் புரிந்துகொள்ளட்டும்!

குடிமக்கள் அதைத் தெரிந்துகொள்ள உரிமையற்றவர்கள் என்று கூறுவது ஜனநாயகத் தன்மையைக் காப்பாற்றுவதாகுமா?

நமது அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே... ‘‘We the People.... மக்களாகிய நாம் என்று தொடங்கி, இறை யாண்மை, முழு அதிகாரம் மக்களிடம் மட்டும்தான் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறதே! அந்த மக்களுக்கு இந்தத் தகவல் பெற உரிமை  இல்லை என்பது எவ் வகையில் நியாயமாகும்?

மக்கள் புரிந்துகொள்ளட்டும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.10.2023


No comments:

Post a Comment