மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு

பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தின் கடுமை தணிந்து குளிர்ச்சியை தந்தாலும், உடல் நலத்தை பொறுத்த வரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை தயார் (பிரி-கண்டிஷனிங்) செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க் கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதி யிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாக வும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன் படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கிக் கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக் கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக் கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒரு முறை, கற்றாழை ஜெல்லை தலையில் பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment