பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (2)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

ஆடுதுறை பக்கமுள்ள அந்தக் கிராமத்தில் ராத்திரி நேரத்தில் மகா பெரியவர் சங்கராச்சாரியார் ஒரு கூட் டம் ஏற்பாடு செய்திருந்தார் என்பதாக சொன்னேனல் லவா?.

ஆங்காங்கே சின்னச் சின்ன விளக்குகள், தீப்பந் தங்கள். ஏற்றி வைத்திருந்தார்கள் கூட்டம் நடந்த இடம் ஒரு வீடு போல இருந்தது. நான் வெளியே திண்ணை யில் உட்கார்ந்திருந்தேன். 

அவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் உள்ளே செல்ல வில்லை. 

எனக்கு தெரிந்த விஷயம் - உங்களுக்கு தெரிய வேண்டாமோ?. 

''ஹிந்து' என்ற பெயர் வந்த காரணம் பற்றி விளக்கினேன் இல்லையா?. அந்த ஸனாதன தர்மத்தை.. வர்ணாஸ்ரம மநு தர்மத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கூட்டம்.

ஏன் அப்படி என்ன ஆபத்து வந்தது? மநு தர்மம் வகுத்த மண தர்மத்தைப் பற்றி நாம் முன்பே பார்த் தோம், 

அதாவது. பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லையென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்... அவளுடைய 'பஹிஷ்டை'யில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவெறுக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை 45, 46ஆவது அத்யாயங்களில் விளக்கமாகப் பார்த்தோம்.

'அஷ்டா வருஷா பலேத் கன்யா.'

8 வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் நடத்த வேண்டும்... - என்ற இந்த ஸ்மிருதி விதி. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

அதாவது என்னுடைய இளம்பிராயங்களில் நான் இப்படிப்பட்ட பால்ய விவாஹங்களை நிறையப் பார்த்திருக்கிறேன். 

இப்போதெல்லாம் கல்யாண மஹால்களில் பார்த் தால்.... சின்னக் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காலத்திலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

என்ன?... ஒரே ஒரு வித்யாசம். அந்த குழந்தை களைப் போலவே உள்ள இரண்டு குழந்தைகள்தான் மணமேடையிலும் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோல எக்கச்சக்க பால்ய விவாஹங்கள் நடந்து கொண்டிருந் தன. அப்போது தான்... இந்த பால்ய விவாஹத்தை யெல்லாம் எதிர்த்து நிறைய போராட்டங்கள் கிளம்பின.

நம் தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளே இந்த பால்ய விவாஹ முறையை கடுமையாக எதிர்த்தனர். ஏனென்றால்... பால்யத்திலேயே விவாஹம் செய்து வைத்து. சிலநேரம் அந்தப் பையன் மரணித்து விட்டால் வாழ்க்கை முழுதும் அந்த சிறுமி விதவையாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை மநு ஸ்மிருதி ஏற்பாடு செய்து வைத்திருந்தது.

இந்தக் கொடுமையையும்... இதன் கொடுமையான விளைவுகளையும் புரிந்து கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் 1929இல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது - அப்படி செய்து வைத்தால்.. தண்டனைதான், ஜெயில் தண்டனைதான். 

இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வரு வோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள். போடப்பட்டிருந்தன.

நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த அந்த நேரத்தில் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அதுபற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக, எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர் கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation. 

இந்த குழு வந்த கால கட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்,

"ஏற்கனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண் ணிட்டா.... இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ.... அதனால். இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட.. ஸனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாதுன்னு நாம் சொல்லியாகணும்... என்ன சொல் றேள்?என மகாபெரியவர் கேட்க...

சிஷ்யாளோ ஸ்வாமி. இப்படியெல்லாம் அவாளை கேட்கிறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும். சில விஷயங்களை மாத் தறது நல்லதுதானே என்றனர்.

ஆனால்.. சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார் - உட்கார்ந் திருந்த என்னிடம் 'தாத்தாச்சாரீ நீரும் நானும் தான் மிச்சம்' என்றார்.

என்ன ஸ்வாமீ! என்றேன். 

"நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக் கூடாது - நம்ம சம்பிரதாயத்தை காப்பாத் தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மை தான் செலக்ட் பண்ணியிருக்கேன்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நீர் இதுக்காக டெல்லி வரை போக வேண்டியிருக்கும்.. அதுக்கு முன்னால். டெலிகேஷனுக்கு நம்ம அபிப்ராயத்தை தந்தியடிக்கணும்... 

அந்த ராத்திரி 11 மணிப் பொழுதில் தந்தி வாசகங் களை தயார் பண்ணினோம். 

- - - - -

ஒன்றா இரண்டா?

ஒன்றா? இரண்டா? நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றாலே... ரொம்ப கஷ்டம். ஏனென்றால் பெரிய பெரிய நகரங்களில்தான் தந்தி ஆபீஸ் இருக்கும்.

ஒரு தந்தி என்றால் அடித்துவிடலாம். நூறு தந்திகள், ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக்கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்ப வேண்டும். 

'பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக்கூடாது' என்பதுதான் தந்தி வாசகம்.

இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம் - 100 தந்திகள் அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக்கொண்டார். நான் உதவி செய்தேன்.

தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த பெரியவர் அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ர தாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு ஸனாதன மதத்துக்கு ஸ்வதந்திரம் கேக்கணும் - அதை நீர்தான் பண்ணணும்' என்றார். 

அப்போது 'பார்லிமெண்ட் டெலிகேஷன் மெம்பர் கள் பத்திரிகைக் கார்யாலயங்களுக்கெல்லாம் விஜயம் செய்து.. ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன.

அந்த வகையில் சென்னைக்கு வந்தது பார்லி மெண்ட் டெலிகேஷன், அன்று தேசத்தில் மிக முக்கிய பத்திரிகையான 'தி ஹிண்டு ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது.

இதையறிந்த மகா பெரியவர் உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் 'ஹிண்டு" பத்திரிகை ஆபிசுக்குப் போனேன்.

அப்போது ஹிண்டுவின் எடிட்டராக இருந்த ஸ்ரீ கே.சீனிவாஸன் என்னை பார்லிமெண்டர் டெலிகேஷ னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால், இவர் மகாச்சாரியார்களின் பிரதிநிதி என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரி யாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விஷயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'Oh' என ஞாபகப்படுத்திக்கொண்ட சோரன்சன்... 'We meet to night'  என்றார்.

அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சனை சந்தித்தேன். பத்துமணி ராத்திரிப் பொழுதில் எனக்கும் சோரன்சனுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?

: We live in India: But having not any Rights to follow our religion. We must need freedom to follow our 'Dharma' 

சோரன்சன் : Oh... it is very serious matter... give me a memorandam and meet me in Delhi,  என்றார். 

'நான்' உடனே கும்பகோணம் விரைந்து மஹா பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சில அட்வகேட்கள், சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகி யோரை வைத்துக்கொண்டு. 'வர்ணாஸ்ரம தர்மத்துக்கு சுதந்திரம் வேண்டும்' என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம்.

டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம் அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். 

இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் மெமோரண் டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்து விட்டோம்.

பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவரா வின் வீடு. பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகி யோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். 

அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

'வர்ணாஸ்ரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும் என்ற மெமோரண்டத்தை பார்லி மெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத் தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். 

இதன்பிறகு ... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation  வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித் தோம். மெமோரண்டம் கொடுத்தோம்.

அவர்களோ "உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகி றார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்" என சொல்லி விட்டார்கள். 

சரி... என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம்.

அவர்... மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு "சனாதன மதத்தைப் பற்றியும் மடங்களைப் பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால்... மடாதி பதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜ போகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களு டைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப்பணிக்கோ அவர்கள் முன் வரவில்லை.

முக்கியமாக... ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும் மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு பணி செய்ய மதாச்சாரியார் களை வரச்சொல்லுங்கள். என்று கண்டிப்பாக எங்களி டம் கூறினர் பட்டேல்

நான்... பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரததேசம் உருவாவதால் அவர்கள் பொதுப்பணி களை நிறைவேற்றுவார்கள்' என சொல்லிப் பார்த்தேன்.

ம்ஹூம்... பட்டேல் ஒப்புக்கொள்ளவில்லை. 

இதை மகாபெரியவரிடம் சொன்னபோது.. 'ஆமாம் இது முழுவதும் உண்மைதான்' என்றார் அடுத்து... பண்டிட் நேருஜியை பார்த்தேன்.

- - - - - 

சனாதன மதானுஷ்டானங்களுக்கு இம்மியளவும் பாதிப்பு வரக்கூடாது - வர்ணாஸ்ரம வரையறைகள் மாறக்கூடாது என பட்டேலிடம் சங்கராச்சாரியாரின் விண்ணப்பத்தை கேட்கப்போய்...

மடாதிபதிகளை திருத்த முடியாது - அவர்களை நம்பி நீங்கள் வராதீர்கள் என கடுமையாகவே சொல்லி என்னை அனுப்பி விட்டதைச் சொன்னேன்.

இதை சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது. "இதுவும் உண்மைதான்" என ஒத்துக்கொண்டதையும் குறிப்பிட்டேன்.

நேருவின் சீற்றம்

இதன் பிறகுதான் பண்டிட் நேருஜியை இதே விண்ணப்பத்துடன் பார்க்கப் போனேன். அதற்கு முன்னதாக பல ஆச்சார்யார்களிடம் ஆலோசனை பண்ணி.. லௌகீகர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பிறகு பண்டிட் நேருஜியை பார்க்கப்போனேன்.

என்ன விஷயம் என்றார் நேருஜி - நாங்கள் மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததுமே கொஞ்ச நேரம் கேட்டுவிட்டுப் பிறகு மெமோரண்டத்தையும் பார்த்தார்.

உடனே... நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “If you want to talk about religion, you go outside from this nation. We don't allow speciality to any religion. Here all are equal... 

Don't tell me about religion... understand?" என்றார் ரோஜாவின் ராஜா - நான் அதிர்ந்துவிட்டேன்.

அவர் என்ன சொன்னார் என்று புரிகிறதா? 

நீங்கள் மதத்தைப் பற்றி மதத்தின் தனியுரிமையைப் பற்றி பேசவேண்டுமென்றால். இங்கு... பேசாதீர்கள். இங்கு எந்த மதத்திற்கும் தனிப்பட்ட உரிமையோ, ஸ்பெஷாலிட்டியோ கிடையாது. எல்லா மதங்களும் சமம்தான். இங்கு All are equal  தான்.

மீண்டும் நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்.. இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்" என கடுமையாகச் சொல்லி விட்டார் நேரு.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத்தான் தனியுரிமை சிறப்புரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் -என சொல்லி களத்தில் இறங்கிவிட்டார்.

(தொடரும்)


No comments:

Post a Comment