பகத்சிங் - 116ஆவது பிறந்த நாள் (28.9.1907) புரட்சியாளன் பகத்சிங்... புரட்சியாளர் லெனினோடு இருந்த அந்த தருணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

பகத்சிங் - 116ஆவது பிறந்த நாள் (28.9.1907) புரட்சியாளன் பகத்சிங்... புரட்சியாளர் லெனினோடு இருந்த அந்த தருணம்

பகத்சிங்கின் வழக்குரைஞர் பிரேம்நாத் மேத்தாவிற்குத்தான் கடைசி சந்திப்பிற்கு அனுமதி கிடைக்கிறது.  அவர் பார்வையாளர் அறையில் இருக்கிறார். பகத்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் கடைசி சந்திப்பு  பிரேம்நாத்திடம் பகத்சிங் கூறுகிறார். பின்னர், ‘நான் கேட்ட புத்தகம் கிடைத்ததா?’ என்கிறார். என்ன புத்தகம்? கேட்டார் என்றால், Lenin the revolutionary  ‘புரட்சிக்காரர் லெனின் என்கின்ற புத்தகத்தைப்பற்றி நல்ல மதிப்புரை வந்து இருக்கிறது. அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னேனே, நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘புத்தகம் கிடைத்தது’ என்று கையில் கொடுக்கிறார் வழக்குரைஞர் மேத்தா. உடனே பகத்சிங் மிகவும் மகிழ்ச்சியுற்று அங்கேயே அதைப்படிக்க ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, சொல்கிறார் ‘அநேகமாக நாளைக்குக் காலையில் தூக்கில் போட்டாலும் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்கிறபோது, ஜவஹர்லால் நேருவுக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் அவர்கள் நான் சிறையில் இருந்தபோது கவலைப்பட்டு என் வழக்கில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்காக இரண்டு பேருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள்’ என்று வழக்குரைஞரிடம் சொல்லி விடுகிறார் பகத்சிங். திரும்ப கொட்டடிக்கு கொண்டு போனார்கள் பகத்சிங்கை.

அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுது, சிறைக்காவலர் அவரை அழைக்கிறார் - அது தகரம் பதிக்கப்பட்ட கதவு  ஆகையால் அவரை அழைக்கிறார்கள் - பகத்சிங்கோ, ‘இப்பொழுது என்னை இடையூறு செய்யாதே. நான் ஒரு புரட்சிக்காரனைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்கிறார்.

முக்கியமான புரட்சிக்காரனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்றவுடன் பயந்து காவலர்கள் மேலே வார்டன்  அலுவலகத்துக்கு ஓடிச்சென்று பக்த்சிங் யாரோ புரட்சியாளனோடு இருக்கிறார் என்று கூற உடனடியாக  ஆயுதம் தாங்கிய வீரர்களோடு அங்கே வந்து விடுகிறார்கள்.

வலுக்கட்டாயமாக கதவைத் திறந்து பார்க்கிறார்கள் புரட்சிக்காரர் லெனின் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறார் பகத்சிங். இந்த விபரம் அறிந்த உடன் சிறை அதிகாரி ‘உங்களைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்கிறார்கள். ‘நாளைக்குக் காலையில்தானே எங்களுக்குத் தூக்கு. இன்னும் பதினொரு மணிநேரம் இருக்கிறதே?’ என்கிறார். ‘இல்லை பைனல் ஆர்டர் வந்து விட்டது. இன்றைக்கே தூக்கில் போடவேண்டும்’ என்கிறார்கள்.

பகத் சிங் உடனே, ‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. பிரிட்டிஷ் அரசுக்கும் கருணை பிறந்து விட்டது. அடிமைப்பூச்சிகளாக இன்னும் ஒரு 12 மணி நேரம் இங்கே இருப்பதைவிட, சீக்கிரமாக விடைபெற்றுப் போவது நல்லது என்று எங்களை சீக்கிரமாக அனுப்புகிறார்கள் என்று சொல்கிறார். இதற்குள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு பர்கத் என்கின்ற முடி திருத்துகிற சகோதரன், அவனும் சிறைக் கைதிதான். அவனுடைய லாக்கப்தான் கடைசி. அவன் வரிசையாக ஓடி, எல்லா கொட்டடிக்கும் சென்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கில் போடப்போகிறார்கள்  என்று சொல்லி விடுகிறான்.  தான் இறக்கும் தருணத்தில் கூட புரட்சியாளனோடு வாழும் உணர்வை ஒரு நூல் தந்தது. பக்த்சிங் வாழ்க்கையில் அதிகம் அறியாத பக்கமாகும்


No comments:

Post a Comment