சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே - தினமலரின் தலைப்புச் செய்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே - தினமலரின் தலைப்புச் செய்தி!

💥பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு!'

💥முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக் கணைகள்!


பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு'; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக் கணைகள்;  சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே - தினமலரின் தலைப்புச் செய்தி என்று அறிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு: 

“காலை உணவுத் திட்டம் : மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு: ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது”

பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடான ‘தினமலர்' என்னும் பத்திரிகையின் சேலம் பதிப்பில் முதல் பக்கத்தில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி!

ஆம், உண்மை தான் - ஒரு ‘வெகுஜனப் பத்திரிகை’ யின் தலைப்புச் செய்தி தான்! ‘உண்மையின் உரைகல்’ எங்கே போய் உரைத்துப் பார்த்திருக்கிறது பாருங்கள்!

அரசுப் பள்ளியில் பயிலும் எளிய பிள்ளைகள் காலை உணவின்றி காய்ந்த வயிற்றுடன் பள்ளிக்குப் படிக்க வருகிறார்களே என்பதற்காகத் தமிழ்நாட்டை ஆளும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்' திமுக அரசு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தைத் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையிலும், மேலும் ஒரு சில நகராட்சிகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட பள்ளிகளிலும் கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 15 அன்று தொடங்கி 14,000 மாணவர்களுக்கு உணவு அளித்துவந்தது.

அதனை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் 25, 2023 அன்று திருக்குவளையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

பொறுக்கமுடியவில்லை அவர்களால்!

திட்டம் தொடங்கப்பட்டது முதலே பார்ப்பனர்கள் பலரின் புலம்பல்களை நாளும் கேட்க முடிகிறது. காலம் காலமாகப் படிக்கக் கூடாது என்று தடுத்து வைக்கப் பட்டிருந்த பள்ளிக் குழந்தைகள் படிக்கிறார்கள், அவர்களுக்கு அரசு அனைத்து வகையான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கிறது. மதிய உணவுடன் காலை உணவையும் வழங்குகிறது - பசிப்பிணி போக்குகிறது என்றதும் பொறுக்கமுடியவில்லை அவர்களால்!

அன்னதானத்தை விட உயர்வானதில்லை என்று அளந்துகொட்டும் இவர்கள் தான், பச்சைக் குழந்தைகள் சாப்பிடும் உணவைக் கண்டு பொறுக்காமல், அதன் மூலம் 'அனைவருக்கும் அனைத்தும்' என்னும் வகை யில் சூத்திரர்களின் கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதையும் கண்டு கோபப்பட்டுத்தான், இப்படி ஓர் அருவெறுப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய வன்ம புத்தியும், கொடூர மனமும் அத்தனை எளிதில் மனிதர்களுக்கு வாய்க்காது. ஏனெனில், அன்னதானம், பூதானம், சொர்ணதானம் என எல்லாமே பார்ப்பனர்களுக்கு வழங்கப்படலாமே தவிர, பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு வழங்கப்படலாமா? எதுவாக இருந்தாலும் அறுத்துக் கொட்டுவதென்றால் அக்கிரகாரத்துக்கு மட்டுமல்லவா செய்யப்பட வேண் டும்! அதை மீறி, ஏழை, எளிய பார்ப்பனரல்லாதாருக்கு, பசித்தோருக்கு வழங்கப்படலாமா? 

இந்துச் சட்டத்தின் படி, பல தீர்ப்புகளில் கூட 'தர்மம்' என்பதற்கு 'Feeding Brahmins' என்பதுதானே பொருள் சொல்லப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. பசித்தவர் அனை வருக்கும் உணவு தருவதல்ல - பார்ப்பனருக்குத் தரு வதே 'தர்மம்' என்றல்லவா சொல்லிக் கொண் டிருந்தார்கள்?

அனைவருக்கும் அல்லவா அரசு உணவளிக்கிறது!

உண்மையில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற பாகுபாட்டை இந்த அரசு காட்டவில்லையே! அனை வருக்கும் அல்லவா உணவளிக்கிறது! இவர்கள் எப்போதும் சொல்லும் ‘அரிய வகை ஏழைப் பார்ப்பனர்களுக்கும்’ அல்லவா இத் திட்டம் பொருந்தும்? ஆனால், அவாள் வீட்டுப் பிள்ளைகள் இங்கே வந்து உண்பதில்லையா? யார் வீட்டுக் குழந்தைகளாக இருந்தாலும் இப்படி ஓர் இழிவான எண்ணம் தோன்றுமா நம் மனதில்!

பார்ப்பனர்களுக்கென்றால் மட்டும் "பத்திரிகா தர்மம்", "கருத்துச் சுதந்திரம்" என்றெல்லாம் கச்சை கட்டி வருவார்களே, அவர்கள் இதற்கும் முன்வரிசையில் வந்து பதில் சொல்வார்களா?

நாமெல்லாம் எழுதுவதற்கான பேனாவில் மையைத் தொட்டுத் தான், மையை இட்டுத் தான் எழுதுகிறோம். ஆனால் இவர்களோ, அசிங்கத்தைத் தொட்டு அல்லவா தலைப்புச் செய்தியைத் தீட்டி மகிழ்கிறார்கள்.

இவர்களையெல்லாம் என்னவென்று அழைப்பது?

"மலமள்ளுவது ‘புனித'மான பணி, அதைச் செய்ப வர்கள் 'யோக நிலை' அடைவார்கள்" என்று தனது 'கர்மயோக்' நூலில் எழுதினாரே பிரதமர் நரேந்திர மோடி. இப்போது கழிவறை நிரம்பி வழிவதாகக் கவலைப்படுவோர் யோக நிலை தரும் அந்தச் சேவையை இப்போதாவது செய்வார்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்த வெறுப்புணர்வாளர்களைத் தன் டுவிட்டர் பதிலடியில் மிகச் சரியாக ‘தினமனு’ என்று அடை யாளப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத் திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

'தினமனு'-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!"

எவ்வளவு ஆழமான, வரலாற்றை நினைவு கூரும் பதிவு!

நடப்பது திராவிட - ஆரிய பரம்பரை யுத்தம் தானே! அம்மையார் ஜெயலலிதாவே வெளிப்படையாகத் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லவில்லையா?

அந்தப் பரம்பரை எதிரிகளான ஆரியர்களுக்கு நம் வளர்ச்சியும், சமூகநீதித் திட்டங்களும் பொறுக்குமா?

அமைச்சர் உதயநிதி டுவீட்

‘‘கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.

கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!" என்று தன் கண்டனத்தைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாட்டின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

'தினமனு' ஏடு அக்கிரகாரத்தின் கண்ணாடி. பார்ப்பனிய எண்ணவோட்டத்தின் பிரதிபலிப்பு!

இன்னும் பார்ப்பன எதிர்ப்பா? என்று நம்மைக் கேட்கும் ஏமாளிகளுக்கும், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் ஒரு சேர பதில் சொல்லியிருக்கிறது தினமனுவின் இன்றைய தலைப்புச் செய்தி!

விழித்துக் கொள்வோரெல்லாம் பிழைத்துக் கொள் வார்! தமிழர்களே எப்போது விழிக்கப் போகிறீர்கள்? மானமும் அறிவும் இனியாவது வர வேண்டாமா?

சிந்திக்க வேண்டியவர்கள் நம்மவர்களே!

இந்தத் தினமலரைக் கையால் தொடலாமா? இதற்கு விளம்பரம் கொடுத்து வளர்த்தெடுக்கலாமா?

புறக்கணியுங்கள்! புறக்கணியுங்கள்!!

மான உணர்ச்சியோடு புறக்கணியுங்கள்!!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.8.2023


No comments:

Post a Comment