ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி ரயில் பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,

ஒன்றிய அமைச்சரவை 32,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒன்பது மாநிலங்களில் உள்ள ஏழு ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் துறைமுகங்களில் உள்ள சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் உள்ளவை.

இந்தத் திட்டங்களில் மொத்தம் 35 மாவட்டங்கள் பயன்படும் படியாக உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரா, மகாராட்டிரா, ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள திட்டங்கள் ஆகும்.

பொதுவாக இவ்வாறு அறிவிக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வட இந்தியாவில் மட்டுமே இருக்கும். இந்த முறை தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் இந்த பட்டியலில் தெலங்கானா, ஆந்திரா இரண்டு மாநிலங்களில்  ரயில்வே திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு அல்லது கேரளாவில் எந்த ஒரு திட்டமும் இல்லை. இதைப்போல் கடைசியாக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள காரணத்தால் கருநாடக மாநிலத்திலும் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழ்நாட்டில் எந்த ஒரு ரயில்வே திட்டம்கூட அறிவிக்கப்படாத காரணத்தால் தென்மாவட்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் துறைமுக சரக்கு போக்குவரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை திட்டத்தை அறிவிக்காமல் வேண்டும் என்றே திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு ஒன்றும் கொடுக்க கூடாது என்று புறக்கணித்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி - திருவனந்தபுரம் பாதைகளைத்  தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை ஆகும்.  திருநெல்வேலி - நாகர்கோவில்  74 கி.மீ. புதிய அகல ரயில்பாதை 08-04-1981ஆம் தேதியும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ. புதிய அகல ரயில்பாதை - 15-04-1979 அன்றும், விருதுநகர் - அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 01-09-1963 அன்றும், அருப்புக்கோட்டை - மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 02-05-1964 அன்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டன. இந்த  திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு பிறகு தென் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்புப் பாதைகள் ஆகும். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. 

பிரதமர் மோடி 2014 தேர்தலுக்கு முன்பு கடந்த 75 ஆண்டுகளாகவே ஆண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செய்யவில்லை என்று பலமுறை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக முழங்கியதுண்டு. இதனால் மோடி பிரதமர் ஆனால் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது இந்தத் திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 2014 அல்லது 2015 ஆண்டுவாக்கில் இந்த திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டிருந்தால் தற்போது இந்த திட்டம் முடிவுபெறும் நிலைக்கு வந்திருக்கும்? 

கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை  ரயில் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று தென்தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.  கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழித் தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்கப்பட்டுவிடும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தப் பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது  கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ., பயணித்தது சுற்றுப் பாதையில் தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்பட்டால் பயணதூரம் 70 கி.மீ., மட்டுமே ஆகும். 

திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி - கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில்  ஈடுபட்டனர். குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலையைத் தொடங்கிய 1914ஆம் ஆண்டு "பாரி அன் கோ' எனும் நிறுவனம் மூலம் குலசேகரப்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தது. அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ஆம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச்சந்தை நாளான வெள்ளிக்கிழமைகளில்  அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அணாவாக இருந்தது.  இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940இல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கிப் போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இன்றி காணப்படுகிறது.

கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில் இருப்புப் பாதை தடம் அமைக்க 2008-2009 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்பு பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி முடிவடைந்து திட்ட மதிப்பீடு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்ப்பித்துவிட்டது.

காரைக்குடி - தூத்துக்குடி, தூத்துக்குடி - கன்னியாகுமரி திட்டங்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன.

தமிழ்நாடு என்றால் அப்படி ஒரு இளக்காரம் ஒன்றிய பிஜேபி அரசுக்கு. இதற்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா தமிழ்நாட்டு வாக்காளர் பெரு மக்களே!


No comments:

Post a Comment