தமிழ்நாட்டுப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஆந்திர மாநில காவல்துறையினர் வெறியாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி., கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

தமிழ்நாட்டுப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஆந்திர மாநில காவல்துறையினர் வெறியாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி., கண்டனம்

சென்னை,ஜூன்20 - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திரப் பிரதேச மாநில காவல் துறையினர் வெறி யாட்டம் நடத்தியுள்ளதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, “கடந்த 11.6.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புலி யாண்டப்பட்டியில் வசிக்கும் குற வர்குடியைச் சார்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநிலம், சித்தூர் காவல் நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். 

அதனைத் தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பாக அவர்களின் உறவி னர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணையவழியாகப் புகார் செய் துள்ளனர். அதனால், ஆத்திர மடைந்த சித்தூர் காவல் நிலையத் தினர் மீண்டும் தமிழ்நாட்டு எல் லைக்குள் நுழைந்து மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து சித்தூர் காவல் நிலையத்தி லேயே வைத்து விசாரணை என் னும் பெயரில் குரூரமான வகையில் வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

குறிப்பாக, பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர் தம் உயிர்நிலையில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி இழிநிலை யில் வதைத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் உடனடியாகத் தலையிட்ட தன் பின்னர், அவர்களில் இரு வரைத் தவிர மற்றவர்களை விடுவித்துள்ளனர். மற்றவர்கள் சிறைப் படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.

எனவே, அவ்விருவரின் நிலையைக் கண்டறியவும், உயிருடனிருந்தால் அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென வலியுறுத் துகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்டோர் மீது பொய் வழக்குகள் புனையப்பட் டிருந்தால் அவற்றை விலக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுத்துகிறோம்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ் நாடு அரசு ஆவன செய்ய வேண்டு கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment