பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்!

ஒன்றியத்தில் ஆட்சி செய்யும்   பா.ஜ.க அரசு, தங்களின் ஹிந்துத்வா சித்தாந்த அரசியலை அரசு நிர்வாகங்களில் திணிக்கும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புடைய நபர்களையே பணியமர்த்துவதை உத்தியாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில் நியமிக்கப்பட்ட அய்.ஏ.எஸ் மற்றும் அய்.பி.எஸ்-சில் பெரும்பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. அதே வேளையில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் அரசுப்பணியாளர்களையும் கூட ஆதிக்க ஜாதியினர் மற்றும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். தொடர்பில் இருப்பவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இதே நிலையே நீடிக்கிறது.   மத்திய பிரதேச பா.ஜ.க அரசு தற்போது ஒருபடி மேலே சென்று, தேர்ச்சி பெற்றவர்களை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்-சின் தொடர்பு அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பணியில் சேர்த்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் வகையில், உருவாக்கப்பட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வில் 88 பேர் தேர்ச்சியுற்ற நிலையில், அவர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல், 88 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ‘நியூஸ் லாண்டரி’ என்ற இணையச் செய்தித்தளம்.

மத்திய பிரதேச மாநிலம் பரஸ்வாடா கிராமத்தை சேர்ந்தவர் கவுசிக் யுகே. 30 வயதான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ஆம் தேதி மாவட்ட மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவி களுக்கான தகுதிப் பட்டியலில் தனது பெயர் இருப்பதை அறிந்துள்ளார். 88 காலி பணியிடங்களுக்கான அந்தப் போட்டியில், சுமார் 10,000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து 890 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில்தான் கவுசிக் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நேர்காணலுக்காக போபாலுக்குச் சென்று கொண்டிருந்த போது அவருக்குத் திடீரென தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்துள்ளது. அன்று நடைபெறவிருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை கவுசிக் நம்பவில்லை.

இதையடுத்து அவர் தொடர்ந்து ஓர் ஆண்டாக மின்னஞ்சல் அனுப்பியும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் நேர்காணல் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். அப்போதெல்லாம் அவருக்கு நேர்காணல் விரைவில் நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, மார்ச் 2023இல், 88 பேர் ஏற்கெனவே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், தான் நேர்காணலுக்கே அழைக்கப்படவில்லை என்பதும் கவுசிக்குக்குத் தெரியவந்துள்ளது. புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் தகுதிப் பட்டியலில் கூட இடம் பெறவில்லை என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

இந்த நிலையில், பணியமர்த்தப்பட்ட 88 பேரும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதை 'நியூஸ்லாண்ட்ரி' கண்டறிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க, ஆட்சி நடைபெற்ற வரும் நிலையில் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களைப் புறக்கணித்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிகளையும் மாநில அரசு புறக்கணித்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்தபோது மத்தியப் பிரதேச அரசு பஞ்சாயத்துராஜ் சட்டம், 1996அய் திறம்பட செயல்படுத்துவதற்காக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவி களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்தப் பதவிகள் ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் என்ற திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ராஜ் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்கான விளம்பரங்கள் நவம்பர் 2021 இல் வெளியிடப்பட்டன. தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் என்றும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.30,000 மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டது. மதிப்பெண்கள் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில், பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான தகுதிப் பட்டியலில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்தத் தகுதிப் பட்டியலில் குறைந்தபட்சம் 12 நபர்களின் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்களுக்குப் பதிலாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து ஆராயும்போது, தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக 

74 பேரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 14 பேரும் பணியமர்த்தப் பட்டனர். அவர்களின் பெயர்கள் எதுவும் தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.

அவர்கள் அனைவரும் பர்வானி, திண்டோரி, அலிராஜ்பூர், தார், கர்கோன், ஷாஹ்தோல், ரத்லாம், நர்மதாபுரம், மண்டலா, அனுப்பூர், பெதுல், சிந்த்வாரா மற்றும் கந்த்வா  மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நபர்களாக கருதப் படுபவர்கள். இவர்களுக்கு என்று கல்வித்தகுதி எதுவுமே இல்லை. இவர்களுக்கு போபாலில் 3 நாட்கள் பயிற்சி நடைபெற்றது அப்போது முதலமைச்சர் சவுகான் மற்றும்  இந்திய கடற்படை ஆயுததளவாட சேவை உயரதிகாரியுமான லக்ஷ்மன் சிங் மார்க்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

உத்தரப்பிரதேசத்திலும் இதே போல் சாமியாரின் அமைப்பான யுவ வாகினி உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்பினரை ஊர்க்காவல் படையில் சேர்த்து அதன் மூலம் பலருக்கு உத்தரப்பிரதேச காவல்துறையில் பணி வழங்கி உள்ளார்கள்.  உத்தராகண்ட் மாநில வனத்துறை பணியிடங்களில் பெரும்பாலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர்களுக்கே கடந்த 5 ஆண்டுகளாக பணி வழங்கப்பட்டுள்ளது. 

 ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேர்வெழுதி அரசு வேலைக்காகக் காத்திருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர சில்லறை அமைப்புகளில் ஈட்டி, சூலாயுதம் மற்றும் வாளெடுத்துக் கொண்டு 'ஜெய் சிறீராம்' என்று கூவிக் கொண்டு  திரியும் அடிப்படைத் தகுதி இல்லாத நபர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு என்று சொல்லத் தேவையில்லை. ஆட்சி மாறினாலும், நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவியிருந்தால், அதன் பாரதூர விளைவுகள் மிக மோசமானதாகவே இருக்கும்.

பயங்கரமான திட்டத்தோடு பாசிசம் தன் கால்களைப் பதிக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மதச் சார்பற்ற சக்திகளின் அதி முக்கியமானதும், கடமையும் ஆகும்.

No comments:

Post a Comment