மாற்றங்கள் என்பவைதான் மாறாதவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

மாற்றங்கள் என்பவைதான் மாறாதவை!

கடந்த 13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். 1932இல் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு தந்தை பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் ஈரோட்டில் தனது இல்லத்தில் சுயமரியாதை இயக்கத் தோழர்களையும் சமதர்மக் கொள்கையில் நாட்டமுள்ள சிங்காரவேலர் போன்றவர்களையும் அழைத்து வாதித்து சுயமரியாதை சம்பந்தமாக திட்டம் ஒன்றை அறிவித்தார். 

அதேபோல கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு திராவிடர் கழக பொதுக்குழுவும் பல முக்கியமான முழுமையான - இக்கால கட்டத்தில் கழகம் செயல்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் - நம்மை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் குறித்தும் நல்ல வகையில் ஆழமாக சிந்தித்து அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. 

சில தலைவர்கள் தங்கள் காலத்தில் உருவாக்கிய அமைப்பு திட்டங்கள் எல்லாம் அந்தத் தலைவர்களின் மறைவுகளுக்கு பின்னால் அந்த அமைப்புகள் தொடர முடியாமல் முற்றுப்பெற்ற வரலாற்றை வரலாறு கண்டு கொண்டிருக்கிறது. விதிவிலக்காக சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்கு பின்னாலும் மிகுந்த எழுச்சியுடன் செயல்பட்டு வருவது என்பது நம் இன மக்களுக்கு கிடைத்த அரும்பேறாகும்.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த களத்தில் நின்ற ஜாதி தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் தொடர்ந்து திராவிடர் கழகம் தன் கவனத்தைச் செலுத்தி பிரச்சாரம், போராட்டம் என்று அலை அலையாக செய்து கொண்டே வந்திருக்கிறது. 

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சட்டம் - பார்ப்பனர்களுடைய முயற்சியால்  உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கினாலும், கழகம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து எடுத்த முயற்சியின் காரணமாக இன்றைக்கு வாராது வந்த மாமணியாக கிடைக்கப்பெற்ற சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு  மு.க. ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் இந்தக் கொள்கையின்மீது இருந்த ஆர்வத்தால், தனது ஆட்சியின் நூறாம் நாளில் அனைத்து ஜாதியிலும் சேர்ந்த 28 பேருக்கு அர்ச்சகர் உரிமை வழங்கும் சரித்திர சிறப்பு மிக்க - வரலாற்றை உலுக்கிய  ஆணையை வரலாறு என்றென்றைக்கும் கல் வெட்டாக பேசிக்கொண்டிருக்கும். 

இந்தத் திசையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் நாம் வெற்றி பெற்றே தீருவோம். இது ஒரு இயக்கப் பிரச்சினை அல்ல; ஒட்டுமொத்தமான மானுட சமூகத்தின் இழிவைத் துடைக்கும் மனித உரிமை நிகழ்வாகும். இது ஒருபுறம் இருக்க இன்றைக்கு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் பாசிச பாஜக அரசு என்பது பழைய வர்ணாசிரம பார்ப்பனிய  கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஓர் அபாயகரமான ஆட்சியாகும். குறிப்பாக பிறப்பின் அடிப்படையில் காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்ட  மக்கள் - குறிப்பாக கல்வி உரிமை அறவே மறுக்கப்பட்ட மக்களாக கிடந்தவர்களை கைதூக்கிவிடும் சமூக நீதிப் பிரச்சினையில் ஒன்றிய பார்ப்பன ஆட்சி முரட்டுத்தனமாக செயல்பட்டு, இதுவரை பெற்று வந்த உரிமைகளை ஆழக் குழி தோண்டி புதைக்கும் செயலில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

'நீட்' என்பதும், புதிய தேசிய கல்விக் கொள்கை என்பதும் - பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி  ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பதும் - எல்லாமே இதுவரை ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்காக போராடிப் பெற்று வந்த உரிமைகளை  முற்றாக அழிக்கும் திட்டமிட்ட செயலே ஆகும். இதில் வேதனை என்ன  என்றால், இதனால் பாதிக்கப்படும் மக்களே இந்த ஆபத்தை உணராத தன்மை தான். இத்தகைய மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் - இழந்த உரிமைகளை மீட்கும் கடமை என்பது சமூக நீதி, சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்கு முக்கியமாக உண்டு. 

மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களின் பக்தி உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, மடைமாற்றம் செய்கின்ற சூழ்ச்சி வலையை பின்னிக் கொண்டிருக்கிறார்கள் நமது எதிரிகள்! நமது இன மக்களும் எளிதாக மலிவாக விலை போகும் பரிதாப நிலையும் இன்னொரு பக்கத்தில் - இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடைக்கோடி மக்களுக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்மை சூழ்ந்து நிற்கும் அபாயத்தை  ஆபத்தை முறியடிக்கும் மகத்தான கடமை திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது. அதனால்தான் திராவிடர் கழகமே இல்லாத ஊர் இருக்கக் கூடாது, நமது கழகப் பொறுப்பாளர்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் சென்று நமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு 'ஒரு கொடி' 'ஒரு விடுதலை' 'ஒரு பிரச்சார தகவல் பலகை' கண்டிப்பாக இருக்கும் வகையில் நமது கழகப் பொறுப்பாளர்கள்  செயல்பட வேண்டும் என்ற தன்மையில் நமது அமைப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மண்டல தலைவர் செயலாளர் என்ற அமைப்பு முறைக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு தலைமைக் கழக அமைப்பாளர்கள் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இயக்கப் பணிகளை முடுக்கி விடும் பணியில் முனைப்பாக ஈடுபட வேண்டும். எத்தனை ஒன்றியங்கள் எத்தனை கிராமங்கள் இருக்கின்றன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு எந்தப் பகுதியில் இயக்கம் இல்லை என்பதைக் கணித்து, அங்கு இயக்கத்தை உருவாக்க திட்டமிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை மாணவர்களை ஈர்த்திடும் வகையில் பயிற்சிப் பட்டறைகளை நடத்திட வேண்டும்.

மாற்றங்கள் என்பவைதான் மாறாதவை!

ஒவ்வொருவரும் வழிகாட்டும் தொண்டறப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய இருப்பு என்ன என்பதை பொதுமக்கள் அறியும்படி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நமது கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு ஊரில் ஒரு கூட்டம் என்றால் "ஒரு கொடி"  "ஒரு  பகுத்தறிவு. தகவல் பலகை" குறைந்தபட்சம் "ஒரு விடுதலை" (படி) என்பது கண்டிப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப் பதிலும் நம் பங்கு அவசியம் - நிகழ்ச்சியின்போது ஒரு செடியை நடுதல் வேண்டும். திராவிட இயக்கத்தின் பால் பொது மக்களின் கவனம் நல்ல வகையில் ஈர்க்கும் வகையில் நமது கழக செயல்பாட்டாளர்கள் பணியாற்ற வேண்டும். துண்டறிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.  இந்த வகையில் இயக்கம் செயல்பட்டால் நாம் எதிர்பார்க்கும் பலனை கண்டிப்பாக உருவாக்க முடியும். 

தலைமைக் கழகத்தில் மாநில பொறுப்பாளர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்து மாநில அளவில் இயக்கப் பணிகளை கண்காணிக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். எந்தப் பகுதியில் மக்கள் விரோத - உரிமை மீறல் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் உடனுக்குடன் தலைமைக் கழகத்திற்கு தெரிவித்தல் வேண்டும். தலைமையகத்தில் இருக்கும் மாநிலப் பொறுப்பாளர்கள் அதற்கான பரிகாரங்களை தேடுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். வெறும் கருத்தியல் பட்டறைகளாக அமையாமல் பேச்சுப் பயிற்சி கலைப் பயிற்சி, விளையாட்டு ஆர்வம், யோகா பயிற்சி, சிலம்பாட்டம் இவற்றையும் இருபால் இளைஞர்களுக்கும் கற்பிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். 

இயக்கம் என்றால் இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சினைகளை அணுகுவதற்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பணியாற்றும் சமூக புரட்சி  இயக்கமான திராவிடர் கழகத்தின் அணுகு முறைக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அதே நேரத்தில் பொதுவான முக்கிய பிரச்சினைகளில் நமக்கு இணக்கமாக உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்துப் போராட வேண்டிய நேரத்தில் போராடி - பணியாற்ற வேண்டிய நேரத்தில் உரிய பணியை மேற்கொள்ளும் - தொண்டறப் பணிகளையும்  தோழர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கழகக் கட்டடங்கள் உள்ள இடங்களில் பல பொருளில் சொற்பொழிவுகளை நிகழ்த்த ஏற்பாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் மக்களிடத்திலே தொடர்பு என்பது மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். திராவிடர் கழகத்தின் பணி என்பது இன்றியமையாத ஒன்று என்பதை பொதுமக்கள் உணரும்படி செய்ய வேண்டும். 

ஈரோடு பொதுக்குழுவுக்கு முன் ஈரோடு பொதுக்குழுவுக்கு பின் என்ற வகையிலே நம்முடைய செயல்பாடுகள் முன்னிலும் வேகமாக நடந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் ஈரோடு நமக்கு வழிகாட்டி இருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில்  கடந்த சனி (27.5.2023) அன்று நடைபெற்ற ஆறு மாவட்டங் களின் கலந்துரையாடல் கூட்டத்தில் விளக்கமாக ஆழமாக எடுத்துரைத் திருக்கிறார்.

கூட்டம் கேட்டோம் கலைந்து சென்றோம் என்ற நிலை இல்லாமல், இயக்கத் தோழர்கள் முழு வீச்சில்செயல்பட வேண்டியது அவசியமாகும். செயல்படுவோம் வாருங்கள் தோழர்களே. 

தந்தை பெரியார் பணி முடிப்போம்.

 வெற்றி நமதே! வாழ்க பெரியார்!! வெல்க திராவிடம்!!

No comments:

Post a Comment