தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

கி.தளபதிராஜ்

1952ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்த இராஜாஜி 1953 மார்ச் மாதம் குலக்கல்வித்திட்டத்தை அறிவித்தார். அப்பன் தொழிலை பிள்ளை கற்கவேண்டும் என்று சொல்லி மனுதர்மத்திற்கு வக்காலத் துப்போட்ட இராஜாஜியை குல்லூகப்பட்டர் என்றே அழைத்தார் பெரியார்.

நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும் முடிவான கொள்கையும் ஜாதி ஒழிப்பே என்ற பெரியார், அதற்காக எதையும் செய்யலாம்; பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கிறானோ, அது போல நம்முடைய இழிவை, கீழ் ஜாதித் தன்மையை மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது. இந்த நாட்டில் மனிதன் பார்ப்பனருக்கு தாழ்ந்தவனாக, சூத்திரனாக எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால் மதத்தால் தான் இருக்கிறான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கியிருக்கிறான். தீண்டத்தகாதவனை உண்டாக்கி யிருக்கிறான். பார்ப்பானை உண்டாக்கி யிருக்கிறான் என்று சொல்லி மூல வேரில் கை வைத்தார்.

தஞ்சை மாவட்டம் வல்லம் படுகை அருகே வடக்குமாங்குடி என்ற ஊரில் 28.4.1953ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜாதி வேற்றுமைகளுக்கு காரணமாகவுள்ள கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டும். கடவுள்களை உடைக்கும் இயக்கம் விரைவில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

திராவிடர் கழக தோழர்களே தயாராக இருங்கள்! கடவுள் என்று சொல்லப்படுகிற இந்த பொம்மைகளை ரோட்டிலே போட்டு உடைப்பதற்கு விரைவில் நாள் தரப்போகிறேன். இப்போதே அட்வான்சாக அந்த உருவத்தைப் போல மண்ணிலே செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் தேதி கொடுத்தவுடன் பொம்மைகளை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்துக் கொண்டு ஏதாவது ஒரு இடத்திலே, நடு ரோட்டிலே, முச்சந்தியிலே, பலர் கூடுகிற இடத்திலே கொண்டு போய் போட்டு, "இன்ன காரணத்திற்காக இந்த பொம்மையை உடைக்கிறேன். என்னை கீழ் ஜாதியாகப் பிறப்பித்ததற்காக உடைக்கிறேன்! என்னை சூத்திரன் வேசிமகன் என்று கற்பித்ததற்காக உடைக்கிறேன்!" என்பதாகச் சொல்லிக் கொண்டு உடைக்க வேண்டும். உடைப்பதற்கு முதல் கடவுளாக, எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன். தோழர்களே! தயாராய் இருங்கள் என்று அழைப்பு விடுத்தார். விக்ரகங்களை உடைக்கிறேன் என்றவுடன் கோயிலிலே இருக்கிற விக்ரகங்களை உடைப்போம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றார். (விடுதலை 4.5.1953)

மே 6 ஆம் தேதி விடுதலை இதழில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்ட தேதி அறிவிக்கப்பட்டது. 27.5.1953 மாலை கணபதி உருவ பொம்மையை தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய் கலக்கி விடுங்கள்! என அறிக்கை விடுத்தார் பெரியார்.

1.சூத்திரர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த சூத்திர வகுப்பு உரிமை அரசியல் சட்டத்தின் மூலம் நீக்கப் பட்டு, அய்க்கோர்ட் தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து சூத்திரர்கள் (தமிழர்கள்) உத்யோக உரிமை அற்றவர்களாக ஆக்கப் பட்டு விட்டார்கள்.

 2. பெரிய கிளர்ச்சி செய்து சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஓர் அளவிற்கு சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3. கல்வித்துறையில் உத்தியோகத்திற்குத் தகுதியாகும் மேல்வகுப்பு படிப்புதான் சூத்திரன்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பது கூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப் படைக் கல்வி எனும் பெயரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசய முறையானது பார்ப்பன நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்காகவுமே ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தர்ம  புதுப்பிப்புக்காகவே இந்த ஜனநாயக ஆட்சி என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்காகவே ஆகும். ஆகவே என் சொந்த பொறுப்பில் முன்பு பல தடவை கூறியிருப்பது போல் வர்ணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக நாளது மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை புத்தர் விழா கொண்டாடி மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தில் வர்ணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் முதல் தெய்வம் என்று கருதப்படுகிறதற்கென்று உருவாக்கியிருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதற்காக பொதுமக்களை அதாவது மனு, வர்ணாசிரம தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களை, திராவிடர் கழக தோழர்களை, சிறப்பாக இளைஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

சர்க்கார் 144 தடை உத்தரவு போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள். அவரவர் கழக காரியாலயத்தில் அல்லது அவரவர் வீட்டில் உடைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். நரகாசுரனை கொன்றதற்காகப் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதுபோல் உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள். 

உண்மையில் விநாயகன் என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் சாஸ்திரங்களில் காணப்படவில்லை.வடநாட்டு ஆரியப் புராணங்களில்தான் காணப்படுகிறது. அதுவும் சமீப காலத்தில் தான் திராவிட நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறப்பு : வெகு ஆபாசம். நடப்பு : வெறும் சூது, கொலை, கூடா ஒழுக்கம். திராவிடர்களை அசுரர்களைக் கொன்றதே அதன் வீரம். இதை வைணவர்கள், சங்கர மதக்காரர்கள், ஆரிய சமாஜிகள் மற்றும் பலர் ஒப்புக் கொள்வதில்லை. ஆனதால் பிள்ளையாரை ஒழித்துவிட்டால் கடவுள் ஒழிந்ததாக ஆகாது. பயப்படாதீர்கள்! ஆத்திரப்படாதீர்கள்! கலவரத்திற்கு இடமில்லாமல் சாந்தமாய் சமாதானமாய் நடந்து கொள்ளுங்கள்! (விடுதலை 6.5.1953)

அதனைத் தொடர்ந்து ஒவ்வொருநாளும் பிள்ளையார் பிறப்பின் யோக்கியதையை தோலுரித்து விடுதலை செய்தி வெளியிட்டது. 7ஆம் தேதி விடுதலையில் ஆனைமுக தெய்வ உருவ பொம்மை வேண்டுமானால் கோயிலுக்குப் போகாதீர்கள். அரச மரம், வேப்ப மரம் அடியிலோ, கல்லுக்கட்டு மேடைக்கோ போகாதீர்கள். கண்டிப்பாய் போகாதீர்கள். கிட்ட நெருங்காதீர்கள். இது கண்டிப்பான வேண்டுகோள் உத்தரவாகும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அன்றைய தேதியில் பெரியார் விடுத்த அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அந்த அறிக்கையில் திராவிடர் கழக தோழர்கள் மட்டுமின்றி கடவுள் தன்மை அறிந்த ஆத்திகர்களுக்கும் இந்த கடவுள் ஏற்புடையதல்ல என்றும் அவர்களும் உண்மை அறிந்து மனிதத் தன்மை பெற்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தார்.  

"கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை. கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான். அதற்கு கோயில், பூஜை,நெய்வேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும், முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் பக்தி நாஸ்திகமாகிறது." 

"கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை. அறிவுள்ள, மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல. பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. காட்டுமிராண்டி காலத்தில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த உணர்ச்சியேதான் இந்த 1953 விஞ்ஞான ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?"

"ஆற்றங்கரையில் மூக்கைப்பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பார்ப்பனர் இன்று சக்கரவர்த்தியாக அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருக்க உரிமை அடையும் படி தனது நிலையை மாற்றிக் கொண்டு இருக்கும் போது, கல்லை செம்பை மண்ணை அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம், மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் கண்டுபிடித்து மண் பொம்மைகளை அழிக்கப்படாதா?" என்று கேட்டார் 

9.5.1953 அன்று வெளிவந்த விடுதலையில், கடவுள் ஒழிப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 50 ஆண்டுகளாக இவைகளுக்கு எதிராக, ஒழிப்பாளராக இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய 30 ஆண்டுகால சொற்பொழிவுகளை எழுத்துகளை கவனித்தவர்களுக்குத் தெரியும். நான் இப்படிப்பட்டவன் என்பது காந்தியாருக்கும் தெரியும். இராஜாஜிக்கும் தெரியும். பல பிரபலஸ்தர்களுக்கும், முக்கியமானவர்களுக்கும் தெரியும்.

மதுரையில் 1922ல் தோழர்கள் வைத்தியநாத அய்யர், சீனிவாச அய்யங்கார், ஆச்சாரியார்  முதலியவர்கள் முன்னிலையில் மதுரை சொக்க நாதனையும்,மீனாட்சியையும் புரட்டிக் கழுவி குளத்துப் படிக்கட்டில் வேஷ்டி துவைக்கப் போடுங்கள் என்றேன். சீனிவாச அய்யங்கார் என்னை ராஜரிஷி என்றார்.மற்றவர்கள் கர்மவீரர் என்றனர். எனவே எனது கருத்தில் புதுமை என்ன? தவறு என்ன? என்று கேட்டார்.

சென்னையில் மே 10ஆம் தேதி நடைபெற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அடுத்தநாள் விடுதலையில் தோழர் கே.வீரமணி உரை எனக்குறிப்பிட்டு வெளிவந்தது.

"தோழர்களே! மிக முக்கியமான நேரத்திலே நாம் கூடியிருக்கிறோம். பலமான மதப் பிரச்சாரம், வைதீகப் பிரச்சாரம், வேதப் பிரச்சாரம், வரலாற்றினை மாற்றியமைக்கும் பிரச்சாரம் முதலியவைகள் நாடுதோறும் பலமான முறையிலே நடைபெறுகிற நேரத்திலே கூடியிருக்கிறோம். அது மட்டுமல்ல. போர்க்களத்திலே இறங்க தேதி கொடுத்து தலைவர் அழைப்பு விடுத்திருக்கிற நேரத்திலேதான் நாம் கூடியிருக்கிறோம். களத்திலே இறங்கும் முன் பாசறையிலே திட்டம் வகுக்க கூடுவது போல. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசாதவர்கள், அதன் கொள்கையை மறைத்தவர்கள், கேலியும் கிண்டலும் செய்தவர்கள், அலட்சியப்படுத்தியவர்கள் எல்லோரும் இன்று நம்மைக் கண்டு அலறுகிறார்கள்!" என்றார்.

பெரியார் தனது உரையில், "இந்தக் கடவுள்களை உடைக்க வேண்டும் என்று ஏன் சொல்லுகிறோம்? எங்களுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? கணபதி, கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களால் தானே நாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்கிறோம்? இந்தக் கடவுள்கள் இல்லாத நாட்டில் சூத்திரன் பஞ்சமன் இருக்கிறானா? சொல்லுங்களேன்! எங்களை சூத்திரனாக பஞ்சமனாக ஆக்கிய கடவுள்களை ஒழிக்க நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டது எப்படித் தவறாகும்?"

"27ஆம் தேதி விநாயகர் லட்சக்கணக்கில் உடைபட வேண்டும்! வீதியிலே விற்கிற பொம்மைகளை வாங்குங்கள்; அங்கேயே போட்டு உடையுங்கள்! அடுத்த வீதிக்கு ஒரு பொம்மை, பக்கத்து வீதிக்கு ஒரு பொம்மை என்று வரிசையாக வாங்கி வைத்துகொள்ளுங்கள். லட்சக்கணக்கிலே உடைத்துத் தள்ளுங்கள். இப்போது விநாயகர்; இதைத் தொடர்ந்து ராமன், கிருஷ்ணன், சுப்பன் இத்யாதி! இத்யாதி...! கடவுள்கள் உடைக்கப்பட வேண்டும். இப்படியாக ஒரு வருஷத்திற்குள் இந்தக் கடவுள்கள் உடைப்பு வேலை தீர்ந்து விட வேண்டும். வரிசையாக பட்டியல் தருகிறேன். வருஷத்திற்குள் புராண பகவான்களை ஒழித்துக் கட்டுங்கள்!" என்று ஆணையிட்டார்.

27ஆம் தேதி மட்டும் விநாயகர் சரியாக உடைக்கப்பட்டு நாடெங்கும் நல்ல முறையில் இந்த உடைப்பு விழா நடைபெறட்டும். ஆச்சாரியார் கொண்டுவந்திருக்கிற புதுமுறை ஆரம்ப கல்வித் திட்டத்தை மாற்றுகிறாரா? இல்லையா? என்று பாருங்கள். தானாகவே மாற்றிக் கொள்வார். என்றார்.

மேலும் விநாயகக் கடவுளின் பிறப்பு ஆபாசங்களைப் புராணத்திலிருந்து எடுத்துக்கூறிய பெரியார், தான் கொண்டுவந்திருந்த பெரிதும் சிறிதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகனை எடுத்துக்காட்டி இதைப்போன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, வேண்டுமானால் சாம்பிளாக, அட்வான்ஸாக இந்த சின்ன விநாயகரை தூளாக்குவோமா? என்று கழகத் தோழர்களைப் பார்த்துக் கேட்டார். கூடியிருந்த மக்கள் உற்சாகப் பெருகெடுத்து உடையுங்கள்! உடையுங்கள்! என்று ஆர்வத்தோடு ஆவேசக் குரல் எழுப்பினர். மேடையிலேயே பிள்ளையார் பெரியாரின் கைத்தடியில் உடைபட்டு தூள் தூளானார். 

"சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன், நம்மை சூத்திரனாக்கிய கடவுள் உருவம் உடைக்கப்பட்டது மேடையில் மேசையின் மேல் புரட்சி வேந்தர் புத்துலகச் சிற்பிதன் கையால்!" என்று விடுதலை செய்தி போட்டது.

மாநாட்டை ஒட்டி 10,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலத்தின் முன்னே நடிகவேள் எம்.ஆர்.ராதா குதிரை மீது அமர்ந்து சென்றதும் பெரியார் உருவம் பெரிதாக வரையப்பட்ட சித்திரத்தை கோச் வண்டியில் கொண்டு சென்றதும், பகுத்தறிவு இலட்சிய முழக்கங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை தாங்கி கருப்புடை வீரர்கள் அணிவகுத்ததும், தோழர்களின் கொள்கை முழக்கமும் கண்ணையும் கருத்தையும் கவருவதாக இருந்தது என விடுதலை வர்ணித்தது.

அதே நாள் விடுதலை தலையங்கத்தில், "இந்தக் கிளர்ச்சியானது, இன்று இந்த நாட்டில் தன்னை தமிழன், திராவிடனுக்கு தமிழனுக்குப் பிறந்த தமிழன் என்று கருதிக் கொண்டிருக்கும் எல்லா சூத்திரன் என்பவர்களுக்கும் உரிமையான கிளர்ச்சியாகும். சூத்திரத்தன்மை நமக்கு இருந்து வருவதற்கும் அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவதற்கும் மதமும், அது காப்பாற்றப்படுவதற்கு வேத சாஸ்திரப் புராணங்களும், நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பிராமணர்களாகவும், ஆதிக்கக்காரர்களாகவும் வாழ்வதற்கு கடவுள்களும் கோவில்களுமல்லவா காரணம்? என்று கேட்கிறேன். ஆம் என்றால் இவைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டாமா? என்று தமிழர்களை, சூத்திரர்களைக் கேட்கிறேன்!"

"நான் இதுதான் சரியான வழி. சூத்திரத் தன்மை ஒழிவதற்கும், நம் ஏழை, தாழ்ந்த ஜாதி எனும் பாமர மக்கள் தங்கள் இழிவு நீங்கி, விகிதப்படி கல்வி பதவி பெற்று முன்னேறுவதற்கு இதுதான் அதாவது இந்த இந்து மதம், இந்து வேத சாஸ்திர புராண இதிகாசங்களுடன், இந்துக் கடவுள்கள் என்னும்உருவ வழிபாடுகள், கோயில், பூஜை, உற்சவம், முதலியவை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்று கருதுகிறேன். திராவிடர் கழகமும் அப்படியே கருதுகிறது. திராவிடர்களில் பலரும் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களில் அநேகரும் அப்படியே கருதுகிறார்கள். சித்தர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற பெரியவர்கள் பலரின் கருத்தும், ஆதாரமும், ஆதரவாய் வழிகாட்டியாய் இருக்கின்றன. வள்ளுவர் குரல் இருக்கிறது. புத்த தன்மம் இருக்கிறது." என்று குறிப்பிட்ட பெரியார் மேலும் அத்வைதம், வேதாந்த ஞானம் போன்றவைகளிலும் ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி இது மூடர்களுக்கு அல்லாமல், சுயநல சூழ்ச்சிக்காரர்களுக்கு அல்லாமல் மற்ற எவருக்கும் குற்றமாகத் தோன்றாது என்று கூறி பிள்ளையார் சிலை உடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

தென்சென்னை மாநாட்டு மேடையிலேயே பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் தந்தை பெரியார் பிள்ளையார் உருவத்தை சுக்குநூறாக்கியதை சுட்டிக்காட்டி 13.5.1953 அன்று மீண்டும் விடுதலை தலையங்கம் வெளிவந்தது.

"பிள்ளையார் சிலை உடைப்பு - சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பு இரண்டு விநாயக உருவங்களை மாநாட்டில் உடைத்தே காட்டிவிட்டார் தலைவர் பெரியார். சட்டம் அவரை என்ன செய்துவிட்டது? இதுவரையில் அவரை என்ன செய்தது? இனித்தான் அவரை என்ன செய்ய முடியும்? ஆதலால் 27ஆம் தேதி அன்று செத்த பாம்பை அடிப்பது போல் மற்றவர்களும் அடித்து ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். அதாவது சட்டம் என்ற பாம்பை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தலை நசுங்கும்படி நன்றாக அடித்துவிட்டார் பெரியார். தன்மானம் என்ற கைத்தடியால் அடித்துவிட்டார். இனி அது செத்த பாம்பு தான். இதைக் கூட 27 ஆம் தேதி அடிப்பதற்கு மற்ற தமிழர்கள் முன் வர வேண்டாமா? ஆரிய கற்பனைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்ட ஆரம்பித்தால் தான் அடுத்த கட்டம் பூணூல் அறுப்பு கிளர்ச்சியாக இருந்தாலும் இருக்குமோ? என்று அக்கிரகாரம் சிந்தித்துப் பார்க்கும்." என்று எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்....)


No comments:

Post a Comment