தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் - வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் - வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!

 நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் 

எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?

தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தலாமா?

இனியாவது பொறுப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ளட்டும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எதிர்க்கட்சித் தலைவர் தன் கடமையை ஆற்றிட வேண்டும் என்றும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சும், நடைமுறையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கடமைக்கும், கண்ணியத்துக்கும் உகந்ததாக இல்லை என்றும் சுட்டிக்காட்டி  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

ஜனநாயகத்தில் - அதுவும் சட்டமன்ற, நாடாளுமன்ற ஆட்சி முறையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும்.

அவர் தன் கடமையை, ஆக்கப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் செய்தால், அது நாட்டு நலனுக்குப் பெருமளவில் உதவிடுவதாகும்.

இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற முறைகளை யொட்டித்தான் நம் நாட்டில் ‘‘அமைச்சரவை ஆளுமை முறை'' (Cabinet System) அரசமைப்புச் சட்ட கர்த் தாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் ‘‘அதிபர் ஆட்சி முறை'' (Presidential System) உருவாக்கப்படவில்லை.

இங்கிலாந்தில் பெரிதும் இரு கட்சிகள்தான் போட்டியில் எடுப்பாக எப்போதும் உள்ளவை.

எதிர்க்கட்சித் தலைவரை, அந்நாட்டு ஆட்சிமுறை யில் - ‘‘His Majesty's Loyal Opposition'' - ‘‘மாட்சிமை தாங்கிய மன்னராட்சியின், விசுவாசமிக்க எதிர்க்கட்சித் தலைவர்'' என்றே அழைப்பர்.

நம் நாட்டு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய தகுதி!

நம் நாட்டு ஜனநாயகத்தில் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி, ஊதியம், இல்லம் மற்ற வசதிகள் எல்லாம் தரப்படும் பதவியாகவே கருதி நடத்தும் முறையே செயற்பாட்டில் உள்ளது.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சட்ட மன்றத்திலும், மாண்புக்குரிய பொறுப்புமிக்க பதவி. ஆனால், மேனாள் முதலமைச்சராக இருந்த ஒருவர், அதனை மக்கள் தீர்ப்பாகவே ஏற்று கடமையாற்ற வரும் போது, அப்பொறுப்பில் பொதுவானவர்கள் மெச்சி, பாராட் டும்படி நடந்து சாதனை சரித்திரம் படைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில், சட்டமன்ற வரலாற்றில் அண்ணா, கலைஞர் போன்ற ‘திராவிட மாடல்' ஆளுமையாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து முத்திரை பதித்துள்ளனர்!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு ‘லாலி' பாடுவது அல்ல என்று தொடக்கத்திலேயே சொல்லி, தமது பணியைத் தொடங்கிய நிலையிலும், பல பொதுப் பிரச்சினைகளில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்று பிரித்துப் பார்க்காமல் கடமையாற்றி உள்ளனர்!

அண்ணா காலத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சும் - முதலமைச்சர் அண்ணாவின் பதிலும்!

ஆத்திரமூட்டும் சில பேச்சுகளை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்றவர்கள் (கே.விநாயகம், காங்கிரஸ்) அவையில் பேசினர். உடல்நலம் குன்றிய நிலையிலும் கடமையாற்றிய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ஆங்கிலத்தில் உள்ள ஒரு சொல்லாட்சியை ‘‘Your Days are Numbered''  - ‘‘உங்கள் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்றன'' என்று சொன்னபோது, பலரும் கொதித்தனர்.

ஆனால், முதலமைச்சர் அறிஞர் அண்ணா மிக அமைதியாக, ‘‘My Steps are measured'' - ‘‘என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுபவை'' - எனவே, தடுமாற்றம், சறுக்கல், வழுக்கல், தோல்வி ஏற்படாது - பயணம் தொடரும் என்று கருத்தடங்கிய வாசகங்களை அழகான பதிலாகக் கூறினார் - பதற்ற மில்லாமல்!

அதுபோல, கலைஞர் முதலமைச்சராக இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவரது கடும் விமர்சனங் களுக்குக்கூட, சூட்டைத் தணிக்கும் பதிலாகவே கூறி, கண்ணியத்துடன் கடமையாற்றி உள்ளார்!

ஆனால், இன்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், தாம் மேனாள் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற நிலைப்பாட்டைக்கூட மறந்துவிட்டு அல்லது ‘‘துறந்து விட்டு'', இன்றைய முதலமைச்சர்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, தமது பதவியின் பொறுப்பை சிறுமையாக்கி விடுகிறார்! அப்பதவிக்கும் பெருமை சேர்க்கத் தவறியவராகவே உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதா?

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பைப் பெருக்கி, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வெளிநாட்டுத் தொழில்களை தமிழ் நாட்டிற்கு அழைத்துவரும் அரிய பணிக்காக, அண்மையில் சிங்கப்பூர், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பயணமாகி, அங்குள்ள பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரில் அழைப்பு விடுத்துத் திரும்பத் திட்டமிட்டு, (ஒன்றிய அரசு அனுமதியோடு) செல்கிறபொழுது, அது தமிழ்நாட்டின் பொதுநலப் பிரச்சினை, வளர்ச்சிப் பிரச்சினை என்பதைக்கூட ‘வசதியாக' மறந்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் - முதலமைச்சர் சுற்றுப்பயணத் திட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் - புரிந்துணர்வு ஏற்பாடுகள் எதுபற்றியும் கவலைப்படாமல், சற்றும் பொறுப்பின்றி ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமே முதலீடு செய்யச் செல்லுகிறாரா? முதலீடுகள் செய்வோரை அழைக்கச் செல்லுகிறாரா?'' என்று கேள்வி கேட்பதை அரசியல் அறியாமையின் உச்சம் என்றுதானே உலகம் பழிக்கும்? புரிந்துகொள்ளவேண்டாமா?

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனியாக ரகசியமாகவா சென்றுள்ளார்?

தனியாகச் சென்றுள்ளாரா?

அரசின் தலைமைச் செயலாளர், தொழில்துறை செயலாளர், மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் - மற்ற அதிகாரிகள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் - உடன் சென்றுள்ள நிலை - வெளிப்பாடல்லவா?  - முதலமைச்சர் முதலீடு செய்யச் சென்றால், இவர்களையெல்லாம் உடன் அழைத்துச் சென்றுதானா முதலீடு செய்வார்?

குறைந்தபட்ச பகுத்தறிவு உள்ளவர்கள் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்களா?

அங்குள்ள புலம்பெயர் மக்களின் அன்பில் மிதந் துள்ளாரே!

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் நடந்துகாட்டிய கண்ணியம்!

அதுமட்டுமல்ல; எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநர் மாநில ஆட்சி உரிமைக்கு எதிராக நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு போட்டி அரசு போல் நடக்க முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டார்?

தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினைப் பலப்படுத்தி, தனது கட்சியை அறப்போர் நடத்திட வைத்தார் - கண்டனம் செய்து காப்பாற்றினார்!

பழைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதன்பிறகு தன் அடாவடி நடவடிக்கையை நிறுத்திக் கொண்டார்; அதுபோலவே, சில மசோதாக்களுக்கு (தீர்மானங்கள்) ஆளுநர் நிலைப்பாட்டுக்கு எதிராக ஆட்சியின் கொள் கையளவில் தனது நிலைப்பாட்டை - எதிர்க்கட்சி என்ற  தகுதியில், ஆக்கப்பூர்வ ஆதரவும் தந்தாரா, இல்லையா?

பி.ஜே.பி.யிடம் அடமானம் போகும் கட்சிக்கு அண்ணா பெயர் ஏன்?

ஆனால், ‘‘அண்ணா தி.மு.க.'' என்று தங்கள் கட்சியின் பெயர் எதற்கு வைக்கப்பட்டது? என்பதுகூடப் புரியா மல், அண்ணா கொள்கையும் தெரியாது, எம்.ஜி.ஆர். - ஆர்.எஸ்.எஸ்.பற்றி (பா.ஜ.க.பற்றி) எடுத்த நிலைப் பாட்டினையும் அறியாது, ஜெயலலிதா அவர்கள், ‘‘லேடியா - மோடியா?'' என்று கேட்டதையும் அலட்சியப் படுத்தி, ‘‘டில்லி சரணம், சரணம் சரணம்'' என்று நெடுஞ்சாணாக சரணம் பாடி, சிதறு தேங்காயாக கட்சியை உடைத்த பா.ஜ.க.விடமே போட்டி போட்டு 3, 4 பிரிவுகளும் - கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, ‘மடியில் கனம்; எனவே, வழியில் பயம்'' - முடிவு கட்சியை - கொள்கையை அடமானம் வைத்து, தமது வருமானத்திற்குப் பாதுகாப்புத் தேடும் நிலையில், இப்படிப் பேசுவதா எதிர்க்கட்சித் தலைவர் வேலை?

‘திராவிட மாடல்' என்பதைக்கூட கேலி பேசுவதா?

எதிர்க்கட்சித் தலைவர் தன் பொறுப்பை உணரட்டும்!

பா.ஜ.க.வால் பிளக்கப்பட்ட இவர்கள் ஒருவர் மற்ற வர்மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை - கொள்ளை களைத் தொகுத்துக் கொடுத்தாலே போதுமே, தனியாக ஏதும் கண்டுபிடிக்க வேண்டியதே இல்லையே!

இனியாவது பொறுப்பை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், அவரது பல அணியினரும் நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.5.2023


No comments:

Post a Comment