பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

‘குமுதம்' தூக்கிப் பிடிக்கும் இந்த சங்கராச்சாரி-யார்?

காஞ்சி சங்கராச்சாரியாரைப் பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் தூக்கி சுமக்கின்றார்கள்? என்பதை நமது பார்ப்பனர் அல்லாதார் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜெகத்குரு என்பார்கள்; அதாவது இந்த உலகத் துக்கே குரு என்பார்கள்; ஆனால் கடலைத் தாண்டிப் போகக் கூடாது; அது தோஷம் என்று சொல்லுபவர் களும் இவர்கள்தான்.

கடலைத் தாண்டிப் பயணிக்கக் கூடாது என்பவர் எப்படி ஜெகத் குரு ஆவார்?

அவரைப் போற்றக் கூடாது என்று நாம் சொல்லுவ தற்கு என்ன காரணம்?

‘தீண்டாமை க்ஷேமகரமானது' என்று அவர் கூறுகிறாரே ("ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள்").

பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதனை இப்படி இழிவுபடுத்தும் ஓர் ஆசாமி தான் ஜெகத் குருவா? மகா பெரியவா(ல)ளா?

தீண்டாமை ஒழிப்பில் காந்தியார் மும்முரமாக இருந்ததுண்டு. இதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆதரவு கிடைத்தால் உபயோகமாக இருக்குமே என்று எண்ணி, பாலக் காட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரை காந்தியார் சந்தித்தார் (16.10.1927).

காந்தியாரை எங்கே சந்திக்க வைக்கிறார், இவர்களின் மட்டரகமான மகா பெரியவாள்? மாட்டுக் கொட்டகையில்!

ஊருக்கும், உலகத்துக்கும் அவர் மகாத்மாவாக இருக்கலாம், தேசப்பிதாவாக இருக்கலாம், ஆனால் அவாள் பார்வையில் காந்தியார் சூத்திரர்தானே! எத்தகைய பூணூல் ஆணவத் திமிர்?

பாலக்காடு சந்திப்பில் நடந்தது என்ன?

"ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்ப வர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்களை மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார்.

(ஆதாரம்: "தமிழ்நாட்டில் காந்தி", பக். 575-576).

இந்த மகாயோக்கிய சிகாமணிதான் மகா பெரிய வாளாம்!

இன்னொரு செய்தியைச் சொன்னால், எரிச்சல் ஏணிமேல் ஏறிக் கொள்ளும்.

‘துக்ளக்' குருமூர்த்தி ஓர் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் (இவர் வீட்டில் திரும்பிய பக்க மெல்லாம் இந்தப் பெரியவாளு படம்தான் இருக்கும் என்று எழுதி இருக்கிறார்).

கேள்வி: பக்தர்களின் வாழ்வில் பல அற்புதச் செயல்களைப் புரியும் பகவான், ஹிந்து மதத்துக்கு ஆபத்து என்று வரும்போது, அதைத் தடுத்ததாகச் சரித்திரம் இல்லையே என்ன காரணம்?

பதில்: ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது பிரபல வக்கீல் டி.ஆர்.வி.சாஸ்திரியை அழைத்து தடையை நீக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னார் - காஞ்சி பெரியவாள். சாஸ்திரிதான் நேருவிடம் பேசித் தடையை நீக்க உதவினார்.

(‘துக்ளக்', 12.5.2021 பக். 15) 

குருமூர்த்தியின் பதில்தான் இது.

மகாத்மா என்று மக்களால் போற்றப்படும் காந்தியாரை சுட்டுக் கொன்ற படுகொலை செய்த கும்பலை எப்படியெல்லாம் காப்பாற்றி இருக்கிறார் இந்த ஜெகத் குரு பார்த்தேளா!

இந்த சங்கராச்சாரியாரைப் பற்றி தான் ஒவ்வொரு ‘குமுதம்' வார இதழிலும் ‘அற்புதம்' ‘அற்புதம்' என்று சும்மா அள்ளி விடுகிறார்கள்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்த ‘குமுதம்' ஓர் அய்யங்கார் கைக்கு சூதுவாதாகச் சென்றதன் பலன் எங்கே போய் முடிந்திருக்கிறது? சங்கராச்சாரியாரின் பஜனை பாடும், சரணடையும் கதையில் முடிந்திருக்கிறது.

ஓர் எடுத்துக்காட்டு:

அமைதியாக அமர்ந்திருந்த மகானின் திருவடி களில் நமஸ்கரித்துவிட்டு எழுந்த தம்பதியரின் விழி களில் நீர் பெருகி வழிய அவர்கள் எதுவும் சொல்லாத போதே, “என்ன, பொண்ணுக்குக் கல்யாணம் அமை யலைங்கற கவலை வாட்டுதா?" கேட்டார் மகான். 

சொல்லாமலே நிலை உணர்ந்த மகானின் அன்பில் கரைந்து வார்த்தைப் பேசவும் இயலாமல் தலையசைத் தனர் அத்தம்பதியர்.

வாத்சல்யத்தோடு அவர்களைப் பார்த்த மகான், "கவலைப்படாதீங்க. திருவானைக்காவல் கோயிலுக்கு உங்க மகளை அழைத்துக் கொண்டுபோய், அங்கே அம்பாள் சன்னதியில் அர்ச்சனை செய்யுங்கள் - எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" என்று சொன்னார்.

பூரண நம்பிக்கையோடு அவரை வணங்கி விட்டுப் புறப்பட்டார்கள், அந்தத் தம்பதியர்.

மகான் சொன்னபடியே அடுத்த வாரமே மகளை அழைத்துக் கொண்டு திருவானைக்காவல் திருத் தலத்துக்குச் சென்றார்கள். அங்கே அம்மன் சன்னதி யில் அர்ச்சனை செய்ய, அர்ச்சகரிடம் மகளின் பெயர் நட்சத்திரம், குடும்பக் கோத்திரம் சொன்னார்கள்,

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அர்ச்சகர், அம்பாளுக்கு அர்ச்சனை செய்யத் தயாரான சமயத்தில் அங்கே வேகவேகமாக வந்தார்கள் இன்னொரு தம்பதியர். தங்கள் மகன் பெயர், நட்சத்திரம், கோத்திரம் முதலானவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார்கள்.

அதையும் கேட்டுக் கொண்டு, இருவர் பெயருக் குமாக அர்ச்சனை செய்துமுடித்த அர்ச்சகர், அவரவர் கொண்டுவந்த அர்ச்சனைத் தட்டுகளை அவரவரிடமே பிரசாதமாகத் திரும்பக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்டவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சென்று கோயிலில் ஓர் இடத்தில் அமர்ந் தார்கள்.

அந்த சமயத்தில் பெண் சார்பாக அர்ச்சனை செய்யவந்த தம்பதியருக்குக் கோயிலின் தூண் ஒன்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த முதியவர் ஒருவரைப் பார்த்ததும், பிரசாதக் கூடையில் இருந்த பழங்களை எடுத்து, அவருக்குத் தரலாம் என்று தோன்ற, கூடைக் குள் கைவிட்டவருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. கூடைக்குள் தங்க மோதிரம் ஒன்று இருந்தது. யாரு டையதோ எவருடையதோ என்று பதறிப்போனவர்கள் அதை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அம்பாள் சன்னதிக்குச் சென்றார்கள். அங்கே அர்ச்சனைத் தட்டில் அம்பாள் பாதத்தில் வைத்து வாங்குவதற்காக தாங்கள் எடுத்துவந்த மோதிரத்தைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். பையனின் பெயருக்கு அர்ச்சனை செய்தவர்கள்.

சரியாக அதேசமயத்தில் இவர்கள் சென்று மோதி ரத்தைக் கொடுக்க, பெரிதும் மகிழ்ந்தவர்கள், ஒருவருடன் ஒருவர் நட்பாகப் பேசிக்கொள்ள, மகனின் திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்வதற்காக அவர்களும், மகளின் கல்யாணம் கைகூடிவர பிரார்த் திக்க... இவர்களும் வந்திருப்பது தெரியவர பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பேசி, ஒருவருக்கு ஒருவர் சம்பந்தியாவது எனத் தீர்மானித்தார்கள்.

அதேசமயம் கோயிலின் உள்ளே யாரோ சில பக்தர்கள் ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர என முழக்கம் எழுப்பியபடி வலம்வர, அத்தனையும் அந்தக் காஞ்சிமகான் நடத்திய அற்புதம் என்பதை உணர்ந்து சிலிர்த்தார்கள், இரு வீட்டாரும்.

- ‘குமுதம்‘, 31.5.2023

ஒவ்வொரு இதழிலும் இப்படிப்பட்ட கப்சாதான். மானசீகமாகக் கண்டுபிடித்து அருள் மழை கொட்டுவாராம்.

அப்படியானால் பல மாதங்கள் நோயாளியாக அவர் அவதிப்பட்டது ஏன்? வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது ஏன்?

தனது வாரிசாக ஓர் ஒழுங்கான ஆளை மடத்துக்கும், கொண்டு வர முடியாமல் போனது ஏன்? ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக அலைந்து திரிந்த ‘காம'கோடி தானே ஜெயேந்திர சரஸ்வதி!

எழுத்தாளர் அனுராதா ரமணன் என்ன சொன்னார்? ஊருக்கும், உலகத்துக்கும்... சந்தி சிரிக்க வில்லையா?

இப்படி காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி பக்கம் பக்கமாக ‘பீலா' விடுகிறதே! - குமுதம்...

மாயாஜாலங்கள் பற்றி இதே சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

"கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச்சாரி யாரிடம் மந்திர மாயாஜாலங்கள் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது:

"மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையைப் பீடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந்தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகளைக் கொண்டது அல்ல."

- 28.10.1974 - செய்தித்தாள்களில்...

இன்னொரு நிகழ்வும் உண்டு. அது தினமணி திரித்த சரடு. இது குறித்து உண்மை இதழில் (1.9.1975, பக். 30) அம்பலப்படுத்தினோம். இதோ!

ஆகஸ்டு 15இல் சென்னையில் டெலிவிஷன் துவக்க விழா நடைபெற்றதல்லவா...... அந்த நிகழ்ச்சியிலேயே காஞ்சி காம கோடி சங்கராச்சாரியின் பாத பூசையைப் படம் எடுத்து டெலிவிஷனில் காட்டி விட வேண்டும் என்ற கொள்ளை ஆசையாம்! அவர் என்ன விஞ்ஞானப் புதுமைகளின் விளைச்சல் நிலமா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்... 'என்ன காரணத்துக் காகவோ' எடுத்துக்காட்டி விட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். படம் எடுக்கவும் முயன்றார் களாம்... 'ஆச்சாரி' மறுத்தாராம்... மீறி படம் எடுத்த போது காமிராக்காரரின் கை விளங்கவில்லையாம் துவண்டுவிட்டதாம்! (இவர்தான் அருளாளராம்?)

ஆச்சாரியாரின் பார்வை அப்படி அவரை ஆக்கிவிட்டதாம்! 

இப்படி ஒரு செய்தியை இந்தக் காலத்திலும் இவ் வளவு 'தைரியமாக' வெளியிட்டு தங்கள் குலத்தலை வரின் 'மகிமையை'த் தூக்கி நிறுத்தப் பார்க்கிறது என்றால் அது அவர்களுடைய பலத்தையும், நம்மவர் களின் பலகீனத்தையும் தானே காட்டுகிறது. ஆரியம் ஒரு சிறு கோடு கிழித்தால்கூட அது அவர்களது இனம் வாழப் போடப்பட்ட வேலியாகத்தானிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாத நம் ஏமாளித் தமிழர்கள் இந்த 'எத்து' ஏடுகளை வாங்கி மகிழ்கிறார்கள் என்றால் இதைவிட ஒருவெட்கக்கேடு ஒன்று இருக்கவே முடியாது.

சரி ஒரு சவால்!

தினமணியாரே! தினமணியாரே! உங்கள் செய்தி உண்மையாக இருக்குமானால், நாங்கள் விடுக்கும் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாரா? நீங்களே உங்கள்ஆச்சாரியாருடன் கலந்து ஒரு நாளையும், நேரத்தையும் குறிப்பிடுங்கள். அந்த நாளில் காமிரா சகிதத்துடன் நாங்களே அங்கே வருகிறோம். 'ஆச்சாரி யாள் புகைப்படம் எடுக்க மறுப்புக் கூறட்டும்... நாங்கள் மீறி எடுக்கிறோம்! அப்போது எங்கள் கைகள் விளங் காமல் போகட்டும், கால்கள் முடமாகட்டும். அப்படி நடந்து விடுமானால். அந்தச் செய்தியை நாங்களே இலட்சக்கணக்கில் அச்சடித்து ஊரெல்லாம் பறை சாற்றுகிறோம். சரிதானே... ஏற்கத்தயாரா? உடன் பதில்! இல்லை என்றால் உங்கள் கதை நாறிவிடும்."

என்று சவால் விட்டோமே!

- (‘உண்மை', 1.9.1975, பக். 30)


No comments:

Post a Comment