செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின்கீழ் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க செயல்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின்கீழ் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க செயல்பாடு

சென்னை,மே 4 - தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 10.10 லட்சம் கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மொழி என்பது மக்களின் முதல் அடையாளம். சொற்களே மொழிக்கு அடிப்படை. சொல் வளமே மொழி வளமாகும். சொற்களின் எண்ணிக்கை பெருக்கமே மொழியை வாழ வழி வகுக்கும். இத்தகைய சிறப்புமிக்க செம் மொழியான தமிழ் மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் பாது காத்து, வேர்ச்சொற்களுடன் கூடிய ‘சொற்பிறப்பியல் அகராதி’ உருவாக்கிட 1974ல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை முதல் இயக்குநராக கொண்டு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை அப்போதைய முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞர் துவக்கினார். தற் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, அகரமுதலி திட்ட இயக்ககமானது அகராதிப் பணிகளோடு, காலத்திற் கேற்ற புதிய கலைச் சொற்களை உருவாக்கி வழங்குவது மற்றும் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கான ஆக்கப் பணிகளையும் செயல்படுத்தி வருகிறது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் நடைமுறை தமிழ் அகரமுதலி, மாணவர் இலக்கிய தமிழ் அகரமுதலி, அயற்சொல் அகராதி, மயங்கொலிச் சொல்லகராதி, ஒரு பொருட் பன்மொழி அகராதி, போன்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஆட்சிச் சொல்லகராதி திருந்திய பதிப்பு, துறை வாரியான ஆட்சிச் சொல்லகராதி குறுநூல், தமிழ் மரபுத் தொடர் அகராதி ஆகியவை நூல் ஆக்க பணியில் உள்ளன.

மருத்துவக் கலைச்சொல் அகராதி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து துறைசார் வல்லுநர்களை கொண்ட குழுக்கள் அமைத்து, ஆண்டுக்கொரு துறையை தேர்வு செய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிட வுள்ளது. இதன்படி நடப்பாண்டில் முதற்கட்டமாக மருத்துவக் கலைச் சொல் அகராதி உருவாக்கப்பணி நடக் கிறது. இதற்காக 2023 மார்ச் வரை 27,018 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ள மருத்துவக் கலைச்சொல் அகராதி, வரும் காலத்தில் மருத்துவ மாணவர்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில துணை நிற்கும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் தமிழ்மொழியை இலகுவாகக் கற்கும் வகையில் அந்தந்த மொழிகளில் புலமை வாய்ந்த வல்லு நர்கள் மூலம் பாடத்திட்டங்கள் உரு வாக்கப்பட்டு பாடநூல், பன் மொழி அகராதி உருவாக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும், பன்மொழி அகராதியை உள்ளடக்கி தமிழ் கற்கும் வகையில் திறன்மிகு குறுஞ்செயலி உருவாக்கப்பட்டு இந்தாண்டிற் குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

கலைச் சொல் தொகுப்பு

தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், தமிழார்வலர்கள் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் கலைச்சொற்களைத் தாமே உள்ளீடு செய்யும் வகையில், ‘கலைச்சொல் தொகுப்பி’ உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. அரசு துறைகளின் புதிய கலைச்சொற்களைத் தொகுத்து ஆட்சிச்சொல் குறு நூலாகத் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது ஆண்டுதோறும் வெளியிடப்படவுள்ளது.

மேலும், தமிழ் அகராதியியலின் தந்தை எனப்போற்றப்படும் வீரமா முனிவரை போற்றும்விதமாக அவரது பிறந்த நாளான நவ. 8ஆம் தேதி, தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்டு தோறும் தமிழ் தொண்டாற்றிய 43 பேரை தேர்வு செய்து, விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகிறது. ‘சொல் வயல்’ மாத மின்னிதழ் கடந்த ஏப்ரல் வரை 35 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொற்குவை வலைத் தளம்: தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற் களுக்கு நிகரான ஆங்கிலச் சொற் களோடு பொருள் விளக்கம் அளித்து, அச்சொற்களுக்கான வேர்ச்சொல் விளக்கத்தையும் சொற்குவை (sorkuvai.com)  என்ற வலைத்தளத்தில் பதிவேற் றம் செய்யப்படுகிறது. இன்றைய அறிவுப்புலத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையதளம் மூலமாக பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்று திரட்டி, அவற்றுள், வந்தசொல்லே திரும்பவும் வராத வகையில் தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வது இந்த அகரமுதலி இயக்ககத்தின் சொற்குவைத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

வலைத்தளத்தில் பதிவேற்றம்

தமிழ் கலைக்கழகத்தில் 132 கூட் டங்கள் நடத்தியும், மருத்துவம், ஊடகத்துறை, கணினி, தொல்லியல், கல்வெட்டியியல், அருங்காட்சியகம், நெசவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண் துறை போன்ற துறை சார்ந்த வல்லுநர்களி டமும், மாணவர்களிடமும் கலந்தாய் விலும், இணையவழி பயிலரங்கில் சேகரித்தும் சொற்குவை வலைத்தளத் தில் பல ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

சொற்குவை துவங்கப்பட்டு 2021 ஜூலை 31 வரை சொற்குவை வலை தளத்தில் 3,88,776 சொற்களே பதி வேற்றம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் 2023, ஏப். 13 வரை 10,10,008 கலைச்சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அர சின் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மொழி வரிசை பட்டியலில் தமிழ் மொழி முன்னேறும் 

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் கோ.விசயராகவன் கூறும்போது, ‘‘சொற்குவையின் கலைச்சொல் எண் ணிக்கை இதுவரை 10,10,008 ஆக உள்ள நிலையில், இனி வரும் காலங்களில் மேலும் இது உயரும். இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், மொழியியல் ஆய்வாளர் களும் பயன்படுத்துவதன் மூலமும் அய்க்கிய நாடுகளின், அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் முதல் வரிசையில் தமிழ்மொழி முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும். பொன்விழா காணவுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத் தின் தமிழ்ப்பணிகள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

வட்டார வழக்கு அகராதி  விரைவில் வெளியீடு

 வட்டார வழக்கு சொற்கள் தான் தமிழ்மொழியின் துவக்க நிலையை கண்டறிவதற்கும், மூலச் சொற்களை உணர்ந்து புதுச் சொல்லாக்கம் உரு வாக்குவதற்கும் உதவியாக அமைகிறது. அத்தகைய வட்டார வழக்கு சொற் களை பாதுகாக்கும் வகையில் ‘வட்டார வழக்கு சொற்பொருள் அகராதி’ உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை ஆகிய 6 மண்டலங் களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத் திற்கும் தனித்தனி ஒருங்கிணைப் பாளர்கள் குழு அமைத்து, 2023 மார்ச் 19ஆம் தேதி வரை 18,784 சொற்கள் திரட்டப் பெற்றுள்ளது. இவ்வகராதி விரைவில் வெளியிடப்படவுள்ளது.


No comments:

Post a Comment