கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உயர் கல்வித் துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உயர் கல்வித் துறை தகவல்

சென்னை, ஏப்.28 தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பு கிறவர்கள் மே 1-ஆம் தேதி முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத்தான் மாணவர்களால்  அதிக ஆர்வம் காட்டப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக் கான  பொறியியல் கல்லூரிகள் புதிது புதிதாக தோன்றின. அதிக அளவிலான  கல்லூரிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்து படித்ததால் ஆண்டுக்குப் பல லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக வெளிவந்தனர். ஆனால் அந்த அளவிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  படிப்பை முடித்தவர்கள்  படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடந்த சில ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்காக ஆகும் செலவு நான்கில் ஒரு பங்கு கூட ஆகாது என்பதாலும்,  கலை அறிவியல்  படிப்பு படித்தவர்களுக்கும் கணினி நிறுவனங்கள் சரிசமமான வேலை வாய்ப்பு அளிக்கிறது என்பதாலும் இந்த வகை படிப்புகளுக்கு தற்போது ஆர்வம் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலை, அறிவியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன.  இடம் கிடைக்காத நிலையே ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் மே 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment