பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

பிற இதழிலிருந்து...

வழிகாட்டும் வைக்கம் மைல்கல்!

* சுகுணா திவாகர்


வைக்கம் போராட்டம், இந்திய அரசியல் வரலாற்றிலும் சமூகநீதிப்பயணத்திலும் மறக்க முடியாத மகத்தான போராட்டம். 1924 மார்ச் 30 முதல் 1925 நவம்பர் 23 வரை நடைபெற்ற நீண்ட நெடிய சத்தியாக்கிரகம். ஜாதியப்பாகுபாடுகளுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற முடியும் என்று நிரூபித்த போராட்டம். அதனால்தான் அம்பேத்கர் தன் அரசியல் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்ததாக இதை முன்மொழிந்தார்.

வைக்கம் போராட்டத்தை நினைவுகூர்ந்து 603 நாள்கள் கொண்டாட கேரள அரசு முடிவு செய் துள்ளது. இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் ‘மறுமலர்ச்சி நாயகர் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். வைக்கம் போராட்ட வெற்றிக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்பதால், இரு மாநில முதல்வர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தி, விழாவினைத் தொடங்கி வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந் துள்ள வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் என்றழைக் கப்படும் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர், புலையர் உட்பட ஒடுக்கப்பட்ட ஜாதியினர் நடக்கத் தடை இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கியவர் கேரள காங் கிரஸ் தலைவர் டி.கே.மாதவன். 1918-இல் சட்டசபை உறுப்பினரான மாதவன், வைக்கம் தெருக்களில் ஒடுக்கப்பட்டோர் நுழைவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தும் அது வெற்றி பெறவில்லை. 1922-இல் திருநெல்வேலி வந்த காந்தியாரைச் சந்தித்து, போராட்டம் தொடங்க அனுமதி கேட்டார். 1923-இல் காக்கிநாடா காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று மோதிலால் நேரு, பி.சி.ராய் போன்ற தலைவர்களிடமும் ஆதரவு கோரினார். இதன் தொடர்ச்சியாகத்தான் 1924 மார்ச் 30-இல் வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது.

டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் போராட்டத்தின் தளகர்த் தர்கள். ஒவ்வொரு நாளும் மூன்று சத்தியாக்கிரகிகள், அனுமதி மறுக்கப்பட்ட வைக்கம் தெருக்களில் நடந்து கைதானார்கள். தொடங்கிய பத்தே நாள்களில் முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதாகிவிட, போராட்டம் முடங்கும் சூழல். வடமாநில காங்கிரஸ் தலைவர்களை அனுப்பிவைக்குமாறு முன்னரே கேட்டபோது அதை மறுத்த காந்தியார், சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் தொய்வடையாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

கேரளாவிலிருந்து வந்த அழைப்புகளைத் தொடர்ந்து அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், ராஜாஜியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வைக்கம் கிளம்பினார். ஏப்ரல் 13-இல் வைக்கம் வந்த பெரியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரணம், செல்வச்செழிப்புமிக்க பெரியாரின் குடும்பம் மன்ன ருக்கு நெருக்கமானது. பெரியாரோ மன்னரின் வரவேற்பைப் புறக்கணித்துவிட்டு கோவை அய்யா முத்து உள்ளிட்ட தன் குழுவினருடன் வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து மக்களைத் திரட்டினார். பெரியாரின் வருகை போராட்டத்துக்குப் புதிய உற்சாகம் அளித்தது.

திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து எழுதிய ‘Eight Furlongs Of Freedom’  நூலில் திருவிதாங்கூர் கவர்னர் ஜென ரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘ஈ.வெ.ராமசாமி, கோவை அய்யாமுத்து மற்றும் எம்பெருமாள் நாயுடு போன்ற தமிழகத் தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுக் கைது செய்யப் பட்டனர். இதில் ஈ.வெ.ராமசாமியின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது’ என்று காட்டன் குறிப்பிடுகிறார்.

‘தமிழ்நாடு' இதழின் ஆசிரியரும் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சேலம் வரதராஜுலு, வைக்கம் போராட்டத்திற்குத் தமிழகத் திலிருந்து தொண்டர்களைத் திரட்டி அனுப்பினார். சீனிவாச அய்யங்கார் என்ற இன்னொரு காங்கிரஸ் தலைவர், ஒடுக்கப்பட்ட மக்களைத் தடை செய்யப்பட்ட பாதைகளில் அனுமதிக்க வைக்கத்தில் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சனாதனிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். வைக்கத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் பெரியார் நடத்திய பரப்புரைகளால் போராட்டத்துக்கான ஆதரவு பெருகியது. முன்னணித் தலைவர்களின் கைதால் போராட்டம் தொய்வடையாமல் முன்னேறிச்செல்ல பெரியார் முக்கிய காரணமாக இருந்தார்.

பெரியாரின் உரைகள் அரசாங்கத்தை அச்சுறுத்த பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் ஆகியோர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பெரியாரோ தடையை மதிக்காமல் தன் பரப்புரைகளைத் தொடர்ந்ததுடன் ஈரோடு சென்று தன் மனைவி நாகம்மையாரையும் அழைத்துவந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினார். பெரியார் கோட்டயம் மாவட்டத்தில் இருந்தே வெளியேற வேண்டும் என்று திருவி தாங்கூர் சமஸ்தானம் அறிவித்தது. பெரியாரோ அந்தத் தடையையும் மீறித் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அதனால் ஒருமாதம் தண்டனை விதிக் கப்பட்டு அருவிக்குத்திச் சிறையில் அடைக்கப் பட்டார். நாகம்மையாரோ பெண்களைத் திரட்டிப் போராட்டங்களைத் தொடர்ந்தார். வரதராஜுலு, ராஜாஜி போன்ற தலைவர்கள் வைக்கம் செல்ல, தமிழகத்திலிருந்தும் ஏராளமானோர் போராட்டங் களில் பங்கேற்க வந்தனர்.

தண்டனை முடிந்து வெளியே வந்த பெரியார் ஈரோடு செல்வார் என்று அரசாங்கம் நினைத்தது. பெரியாரோ மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்தார். ஒருபுறம் அரசாங்கத்தின் அடக்குமுறை, இன்னொருபுறம் சனாதனிகள் போராட்டக் காரர்களின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்கள் கண்களில் சுண்ணாம்பைத் தடவிக் கொடுமை செய்தனர். தொடர் போராட்டங்களின் விளைவாகப் பெரியார் இரண்டாவது முறையாக சிறைத்தண்டனை பெற்றார். அதுவும் நான்குமாதக் கடுங்காவல் தண்டனை. டி.கே.மாதவன் உள்ளிட்ட, போராட் டத்தைத் தொடங்கியவர்களே அரசியல் கைதி களாகத்தான் சிறையில் வைக்கப்பட்டார்கள். ஆனால் பெரியாருக்கோ கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட கொடுஞ் சிறைத்தண்டனை.

பெரியார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அழிய வேண்டும் என்று வைதீகர்கள் சத்ருசம்ஹார யாகத்தை (எதிரிகளை வதம் செய்வதற்கான வேள்வி) நடத்தினார்கள். விந்தை என்னவென்றால், வேள்வி நடத்திய சிலநாள்களில் திருவிதாங்கூர் மன்னர் ராமவர்மா இறந்துபோனார். துக்கம் தழுவி சத்தியாக்கிரகப் போராட்டமும் நிறுத்தி வைக்கப் பட்டது. மன்னர் இறந்ததையொட்டி பெரியார் உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானதும் மீண்டும் வைக்கம் சென்று பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட பெரியார் ஈரோடு திரும்பினார். ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக அவர் சென்னையில் பிரச்சாரம் செய்த பழைய வழக்கில் காவல்துறை ஈரோட்டில் பெரியாரைக் கைது செய்தது. மீண்டும் அவர் வைக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகக்கூட இந்தக் கைது நடந்திருக்கலாம்.

திருவிதாங்கூர் மன்னரின் மறைவுக்குப் பிறகு சேதுலட்சுமி பாய் பொறுப்பு அரசியாகப் பதவி யேற்றுக் கொண்ட பிறகு வைக்கம் போராட்டம் முக்கியக் கட்டத்தை அடைந்தது. முன்பிருந்த மன்னரின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறு பட்ட, நெகிழ்வான அணுகுமுறையை அவர் கடைப் பிடித்தார். (தன் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவதாசி முறையை ஒழித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஈழவர் தலைவர் என்.குமரன் வைக்கம் கோயில் தெருக்களைத் திறந்துவிடக்கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இன்னொருபுறம் போராட்டத்தின் வடிவமும் மாறியது. ஒடுக்கப்பட்டோரைப் பாதை களில் அனுமதிக்க, ஆதிக்க ஜாதியில் பிறந்த தங் களுக்கு மறுப்பில்லை என்பதைக் காட்டும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. வைக்கத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி மன்னத்து பத்மனாபன் தலைமையில் ஒரு பேரணி, எம்பெருமாள் நாயுடு தலைமையில் சுசீந்திரத்தி லிருந்து திருவனந்தபுரம் நோக்கி இன்னொரு பேரணி. ஆதிக்க ஜாதியினர் இணைந்து ஒடுக்கப் பட்டோருக்குப் பாதைகளைத் திறந்துவிட, பொறுப்பு மகாராணியிடம் கடிதங்களை ஒப்படைத்தனர். ஆனால் சட்டசபையில் என்.குமரன் கொண்டுவந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்றது.

இந்தப் பின்னணியில்தான் போராட்டம் தொடங்கிய ஓராண்டுக்குப் பின், 1925 மார்ச் 9 அன்று வைக்கம் வந்தார் காந்தியார். ஓராண்டு கழித்து அவர் வந்தாலும் தொடக்கம் முதலே வைக்கம் போராட்டத்துடன் காந்தியாருக்குத் தொடர்பிருந்தது. அவரிடம் ஆசியும் அனுமதியும் வாங்கித்தான் போராட்டம் தொடங்கப்பட்டது.

வைக்கம் போராட்டத்தில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ‘இந்து மதத்தின் பிரச்சினையில் மாற்று மதத்தவர் தலையீடா?' என்ற வைதீகர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘இந்தப் போராட்டத்திலிருந்து மற்ற மதத்தவர்கள் விலக வேண்டும்' என்றார் காந்தி. போராட்டத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜோசப்பே விலக வேண்டிய சூழல். பஞ்சாபி லிருந்து வைக்கம் வந்த சீக்கியர்கள், போராளிகளுக்கு இலவச உணவு சமைத்து வழங்கினர். அதையும் நிறுத்தச் சொன்னார் காந்தியார். தொடக்கத்தில் சத்தியாக்கிரகிகள் கோயில் பாதைக்குள் நுழைந்த பிறகே காவல்துறை கைது செய்தது. போராட்டம் தீவிரமடைந்தபோது பாதைக்குள் நுழைவதற்கு முன்பே கைது நடவடிக்கை. இதைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கலாம் என்று போராட்டத் தலைவர்கள் சொன்னபோது காந்தியார் அதை மறுத்தார். வைதீகர்களால் போராளிகள் கடுமையாகத் தாக்கப்பட்டபோதும், எதிர்வினை செய்யக் கூடாது என்றார் காந்தியார். மாற்றுமதத் தவர்களை விலகச் சொன்னதை நேரடியாகவே ஜார்ஜ் ஜோசப் விமர் சித்தார். பெரியார் அப்போது மவுனம் காத்தாலும், காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டபிறகு, வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் அணுகுமுறை குறித்து விமர்சனங்களை முன் வைத்தார்.

எப்படியிருந்தபோதும் காந்தியாரின் வருகை போராட்டத்தை அதன் இலக்கை நோக்கி நகர்த்தியது. வைக்கம் வரும் வழியில் ஈரோட்டில் காந்தியாரை வரவேற்ற பெரியார், கேரளாவில் அவர் நாராயண குருவைச் சந்தித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார். தொடக்கத்தில் வைக்கம் போராட்டத்தில் ஈடுபாடு காட்டாத நாராயண குரு பிறகு போராட்டத்துக்கு நிதியுதவி அளித்து ஆதரித்தார். நாராயண குருவின் செயலகத்தில்தான் சத்தியாக்கிரகத்தின் செயலகம் அமைந்தது. நாராயண குருவின் முக்கிய சீடர்களில் ஒருவரான அய்யப்பன் என்ற சத்தியவிரதன் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டார். கூட்டங்களில் பெரியாரின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

நாராயண குரு, ஆதிக்க ஜாதியினர் குழு மற்றும் திருவிதாங்கூர் பொறுப்பு மகாராணி ஆகியோரைச் சந்தித்து காந்தியார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வைக்கம் போராட்டத்துக்கு வெற்றி கிட்டியது என்றாலும் அதை முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. கோயிலைச் சுற்றியுள்ள நான்கு பாதைகளில் மூன்று பாதைகளில் நுழைய ஒடுக்கப்பட்டோருக்கு இருந்த தடை விலக்கப்பட்டது என்றாலும், இறுகிப்போயிருந்த வைதீகக் கோட்டையில் விழுந்த பெரும் விரிசல் அது. அதைச் சாத்தியமாக்கியதில் மலையாளிகள், தமிழர்கள் முதல் சீக்கியர்கள் வரை பங்குண்டு.

1925 நவம்பர் 29-இல் நடைபெற்ற வைக்கம் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்துக்குப் பெரியார் தலைமை தாங்கினார். இந்த வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்துக்குக் கேரளாவுக்கு வெளியில் இருந்து அழைக்கப்பட்டவர் பெரியார் ஒருவரே. அப்போது பெரியார் பேசிய சொற்கள் இவை...

‘‘சத்தியாக்கிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டு மென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்தத் தத்துவம் இந்தத் தெருவில் நடந்ததோடு முடிந்து விடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தைக் கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை.’’

அதற்குப்பின் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கும் மற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கும் வைக்கம் போராட்டம் ஒரு முன்னோடி இயக்கம். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்கள் ஆவதற்கும் கேரளத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மேல்சாந்தி ஆவதற்கும்கூட வைக்கம் ஒரு தொடக்கம். நூற்றாண்டைக் கடந்துவிட்டோம். ஜாதியத்தின்பிடி சற்றுத் தளர்ந்திருக்கிறது. என் றாலும், ஜாதிய மன நிலை, தீண்டாமையின் வடி வங்கள் மாறியிருக்கின்றனவே தவிர முற்றாக ஒழிந்துவிடவில்லை. ஜாதியப் பாகுபாடுகளுக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது நீண்ட பயணம். அதற்கு மைல்கல்லாய் வைக்கம் நமக்கு வழிகாட்டும்.

நன்றி: 'ஆனந்த விகடன்' 12.4.2023


No comments:

Post a Comment