மலரும் நினைவுகள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

மலரும் நினைவுகள்...

வி.பி.சிங் அவர்களுக்கு நினைவுச் சின்னம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறி விப்பை (20.4.2023) வெளியிட்டார்.

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை நிறுவப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதற்கொரு வரலாறு இருக் கிறது.

இதோ முத்தமிழறிஞர் கலைஞர் பேசுகிறார்:

‘‘நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் உரையாற்றும்போது வி.பி.சிங் அவர்களுக்கும், எனக்கும் உள்ள தொடர்புகள், உறவுகள், நட்பின் ஆழம் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இவரை அழைத்துப் படத்தைத் திறந்து வைப்பதுதான் பொருத்தம் என்பதற்காக அழைத்தோம் என்று குறிப் பிட்டார்கள் விழா ஆரம்பத்தில். ஆனால், முடிவாக அவர்கள் உரையை நிறைவு செய்தபோது வி.பி.சிங் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே நிலைக்கக்கூடிய சின்னம் அமைத்திட வேண்டும். அது எப்படி, எவ்வாறு, என்றைக்கு, என்பதையெல்லாம் கலந்துதான் தீர் மானித்து அறிவிக்கவேண்டும் என்று அதை வேண்டுகோளாக அல்ல - ஒரு கட்டளையாகவே அவருக்கு என்பால் உள்ள உரிமையின் காரணமாக - அந்த உரிமை இன்று நேற்று ஏற்பட்டதா என்றால், இல்லை. தந்தை பெரியார் வழிநின்று உழைக்கின்ற ஓர் அருமைத் தொண்டர், அவருடைய மாணவர், என்னுடைய நண்பர் என்பதால் மாத்திரம் அல்ல; தந்தை பெரியாருக்குப் பிறகு அவருடைய கொள்கை களை, எண்ணங்களை இன்றைக்குக் காப்பாற்றி வருகின்ற அவருடைய உண்மையான வழித்தோன்றல் என்ற முறையில் இந்த ஆணையை எனக்குப் பிறப்பித்திருக்கின்றார் வீரமணி.

இதை நான் இங்கேயே அறிவிப்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு விளம்பரமாகத்தான் ஆகும் என்பதால், நான் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடன் கலந்து பேசி, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும், எங்கே அமையவேண்டும், எந்த வகையிலே அமையவேண்டும், எத்தகைய நினைவுச் சின்னமாக அது இருத்தல் வேண்டும் என்பதுபற்றி விரைவில் அறிவிப்பேன் என்பதை- மன்னிக்கவும், விரைவில் அறிவிப்போம் என்பதை இந்த நிகழ்ச்சியிலே நான் கூறிக் கொள்ளக் கடமைப் பட்டு இருக்கின்றேன்'' என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் (12.12.2008). 

சென்னை தியாகராயர் நகர் சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற 

வி.பி.சிங் படத் திறப்பு  விழாவில் 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 

ஆற்றிய உரையிலிருந்து 

(‘விடுதலை', 13.12.2008).

காலம் கடந்தாலும் 15 ஆண்டுகளுக்குப் பின் முத்தமிழறிஞரின் திருமகனார் முதலமைச்சராக வந்த நிலையில், அந்தக் கனவு நனவாகும் காலத்தை விரைவில் எதிர்பார்ப்போம்!


No comments:

Post a Comment